கிராமங்களுக்கு செல்ல மறுக்கும் பஸ்கள் : பயணிகள் கடும் அவதி

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் தொடர்ந்து கடும் பாதிப்படைந்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25 முதல் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. ஜுன் மாதம் பஸ் போக்குவரத்து மண்டலங்களுக்குள் தொடங்கப்பட்டு பின்னர் மீண்டும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் செப்.1 முதல் மாவட்டத்திற்குள்ளும், செப்.7 முதல் மாவட்டம் விட்டு மாவட்டமும் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்து காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர், இளையான்குடி, காளையார்கோவில், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளிலும் வெளி மாவட்டங்களான மதுரை, தொண்டி, பரமக்குடி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் நகர்ப்புறங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

 மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 445 ஊராட்சிகள் உள்ளன. இதில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை நகராட்சிகள் மற்றும் சில பேரூராட்சிகள் தவிர மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களே உள்ளன. ஆனால் தற்போது கிராமங்களுக்கு முன்பு போல் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டும் கிராமத்தினருக்கு பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் கூறியதாவது:செப்டம்பரில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கிராமங்களுக்கு சரிவர பஸ்கள் இயக்கப்பட வில்லை. கிராமங்களில் இருந்து மக்கள் சென்றால்தான் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் கிராமங்களுக்கு பஸ்களை இயக்கவில்லை. கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கினால் யாரும் ஏறுவதில்லை என தெரிவிப்பதும் பொய்யான தகவல். தொடர்ந்து பஸ்கள் இயக்கப்பட்டால் முன்பு போல் நிலைமை சீராகி விடும். முன்பு போல் கிராமங்களுக்கு பஸ்களை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

Related Stories: