மாயார் பள்ளத்தாக்கில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

கூடலூர்:  நீலகிரியில் கழுகு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அருளகம் கழுகு பாதுகாப்பு தொண்டு அமைப்பினர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் மாயார் பள்ளத்தாக்கு பகுதிகளை வாழ்விடமாக கொண்டுள்ள கழுகு இனங்கள் நவம்பர், டிசம்பர் மாதத்தில் முட்டையிட்டு அடைகாத்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. பெண் கழுகுகள் வருடத்தில் ஒரே ஒரு முட்டை மட்டுமே இட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன. இக்கழுகுகள் ஏற்கனவே கட்டிய கூட்டை செப்பனிட்டும் பயன்படுத்தும். தேவைப்பட்டால் புதிதாகவும் கட்டும். முட்டையை ஆண் மற்றும் பெண்கழுகுகள் இரண்டும் மாறி மாறி சுமார் 65 நாட்கள் அடைகாக்கின்றன. குஞ்சு பொரித்ததும் நான்கு மாதங்கள் வரை குஞ்சுகளை கழுகுகள் இரை கொடுத்துப் பாதுகாக்கின்றன.

 5 மாதங்கள் ஆனதும் குஞ்சுகள் தனது கூட்டத்தோடு சேர்ந்து பறந்து இரை தேட தொடங்குகின்றன. குறிப்பாக ஏப்ரல் மே மாதங்களில் குஞ்சுகள் பறக்கத் தொடங்குகின்றன. இப்பகுதியில் வாழும் இவ்வகைக் கழுகுகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு மிக உயரமான மரங்களையும் பாறை முகடுகளையும்  தேடியே கூடுகளைக் கட்டுகின்றன. முட்டையையும் குஞ்சையும் பாதுகாப்பதற்காக அவை அவ்வாறு கூடு கட்டுகின்றன. சுமார் 50 முதல் 70 அடி வரை உயரமுள்ள பகுதிகளில் கூடுகளை அமைக்கின்றன.

இவ்வாறு உயரத்தில் அமைக்கப்படும் கூடுகளில் இருந்து சில நேரம் முட்டை தவறி விழுந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் குஞ்சுகளும் தவறி கீழே விழுந்து விடலாம்.

இதேபோல் பறக்கத் துவங்கும் காலங்களிலும் ஆர்வக்கோளாறு காரணமாக குஞ்சுகள் கீழே விழுந்து இறந்து விடுகின்றன அல்லது விழுந்து கிடக்கும்போது வேறு உயிரினங்கள் அவற்றைச் சாப்பிட்டு விடுகின்றன. இதனால் அவற்றின் இனப்பெருக்க எண்ணிக்கை என்பது மிக மிக மெதுவாகவே உயர்கிறது .காடுகளின் துப்புரவு பணியாளராக செயல்படும் கழுகுகளை பாதுகாத்து அவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க முதுமலை புலிகள் காப்பக வனத்துறையுடன் அருளகம் கழுகு பாதுகாப்பு தொண்டு அமைப்பு நிறுவனமும் இணைந்து கடந்த 10 வருடங்களாக இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.அதன்படி கடந்த 2019 மற்றும் 2020ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணிகளில் வெண்முதுகு கழுகு, கருங்கழுத்து கழுகு ஆகியவை ஒட்டுமொத்தமாக 43 குஞ்சுகளை பொரித்து உள்ளது.

இந்த வருடத்தில் இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கழுகுகளின் முக்கியத்துவம் அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் மனிதர்களால் கழுகு இனத்துக்கு ஏற்படும் ஆபத்துகள் போன்றவை குறித்து வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் விவசாயிகள், பழங்குடியின மக்கள், கிராம மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆசிய ராஜாளி கழுகு என அழைக்கப்படும் செங்கழுத்தின கழுகுகளின் இனப்பெருக்கத்தையும் பதிவு செய்யும் நடவடிக்கையை வனத்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்.

Related Stories: