நிவர் புயல் எச்சரிக்கையால் பொருட்கள் வாங்க கடைகளில் மக்கள் கூட்டம்

* மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு

* மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் எச்சரிக்கையையொட்டி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ரேஷன்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் குவிந்தனர்.வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்றும் இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த புயல் எச்சரிக்கையையொட்டி காற்று துவங்கியவுடன் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் புயல் கரையை கடந்த பின்னர் எந்தெந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டு அதன் பின்னர் அந்த பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று முன்தினம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புயல் காற்றின் போது மின்கம்பங்கள் அடியோடு சாய்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ந் தேதி இரவு ஏற்பட்ட கஜா புயலின் போது திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததன் காரணமாக மின் வினியோகம் என்பது முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்வினியோகம் சரியாவதற்கு மாதக்கணக்கில் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது நிவர் புயல் எச்சரிக்கையையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டன.இந்நிலையில் புயல் கரையை கடக்கும் பட்சத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற எச்சரிக்கையையடுத்து நேற்று மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருட்டை சமாளிப்பதற்காக கடைகளில் மெழுகுவர்த்தி வாங்குவதற்காக அதிக அளவில் படையெடுத்தனர்.

இதன் காரணமாக பெரும்பாலான கடைகளில் மெழுகுவர்த்தி தட்டுப்பாடு என்பது ஏற்பட்டது. மேலும் குடிசைகளில் வசித்து வரும் ஏழை எளிய பொதுமக்கள் தங்களது வீடுகளில் விளக்கு எரியவும், விறகு அடுப்பு பற்ற வைப்பதற்கும் மண்ணெண்ணெய் என்பது அவசியம் என்பதால் நேற்று ரேஷன் கடைகளில் அதனை பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் சென்றனர். அதன்படி திருவாரூர் பைபாஸ் சாலையில் இருந்து வரும் மண்ணெண்ணெய் பங்க் உட்பட பல்வேறு ரேஷன் கடைகளில் பொது மக்கள் மண்ணெண்ணெயை பெற்றுச் சென்றனர். இதுமட்டுமின்றி புயல் பாதிப்பின் காரணமாக மளிகை பொருட்களும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் நேற்று தங்களது வீடுகளுக்கு தேவையான மைதா, ரவா, கோதுமை மாவு சமையல் எண்ணெய் ,சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் மளிகை கடைகளுக்கு குவிந்தனர். மேலும் பால் மற்றும் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பால்பவுடர்களையும், காய்கறிகளையும் வாங்கி இருப்பு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: