தமிழக ஆந்திர எல்லையில் உள்ள வேலூர் மாவட்டத்தில் விலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை

* நிதியில்லை என கைவிரிக்கும் வனத்துறை

* தீர்வு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்

வேலூர்:  வேலூர் மாவட்டத்தில் விலங்குகளால் சேதமடையும் பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. தமிழக- ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டத்தில் உள்ள காடுகளில் இருந்து யானைகள் வெளியேறி அடிக்கடி கிராமங்களில் புகுந்து விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்திவிட்டு, பின்னர் சில நாட்களில் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு சென்றுவிடும்.

ஆனால் தற்போது 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் ஒரே நேரத்தில் தமிழக- ஆந்திர எல்லை கிராமங்களில் முகாமிட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக குடியாத்தம், பேரணாம்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயநிலங்களில் புகுந்து பயிர்களை அழித்து வருகிறது. யானைகள் வரும் பாதைகள் ஆக்கிரமிப்பு, வனப்பகுதி ஆக்கிரமிப்பு, வறட்சி என்று பல்வேறு காரணங்களால் யானைகள் கிராமங்களுக்குள் சர்வசாதாரணமாக நுழைந்து விளைநிலங்களை நாசமாக்கி, மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு முறையும், யானைகள் வரும் கிராமங்களில் நள்ளிரவில் பொதுமக்கள் கதிகலங்கி கிடக்கின்றனர். யானைகள் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் புகுந்துவிடும் என்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வனத்துறை ஊழியர்களும், பொதுமக்களும் இணைந்து, யானைகள் கிராமங்களில் வராமல் தடுத்து காடுகளுக்கே விரட்டியடிக்கின்றனர். ஆனால் காட்டில் தங்காமல் யானைகள் மீண்டும் வெவ்வேறு கிராமங்களுக்குள் புகுந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் வனத்துறையினரும் திணறி வருகின்றனர்.இந்நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் வேலூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் 40க்கும் மேற்பட்ட யானைகள் கிராமங்களில் புகுந்ததால் அதை திசை திருப்பி காட்டுப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல முறையான பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லாததால் யானைகள் நாலாபுறமாக திசை மாறிச்சென்றுள்ளது.

யானைகள் கூட்டத்தை விரட்டியடிக்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து 10க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் வேலூர் மாவட்டத்தில் முகாமிட்டனர். இருப்பினும் யானைகளை அதன் திசையில் திருப்பி அனுப்ப முடியாமல் வனத்துறையினர் திணறினர். பின்னர் ஒரே வழியாக யானை கூட்டத்தை வேலூர் மாவட்ட எல்லையில் இருந்து விரட்டினர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக யானை கூட்டம் அச்சுறுத்தல் இல்லாமல் இருந்ததால், தமிழக- ஆந்திர எல்லைகளில் உள்ள மலைக்கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சற்றே நிம்மதி அடைந்தனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக குடியாத்தம், பேரணாம்பட்டு அதனை சுற்றியுள்ள கிராமங்களில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்தனர். அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள பயிர்களை யானைகள் நாசம் செய்து வருவதால், எங்கள் உழைப்பு வீணாகிப்போகிறது.வனத்துறையினரிடம் இழப்பீடு கேட்டு காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அரசு விலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

யானைகள் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது: இன்றைய காலத்தில் விவசாயம் செய்யவே மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எங்களின் உழைப்பிற்கு பலனாக பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகும் போதும், யானைக்கூட்டம் வாழை, நெல், கரும்பு போன்ற பயிர்களை நாசம் செய்துள்ளது. இதுகுறித்து விஏஓக்கள் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர். ஆனால் இழப்பீடு எப்போது வரும் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே மழை இல்லாததால் இருக்கின்ற தண்ணீரை வைத்து பயிர் செய்து வருகின்றோம். ஆனால் யானை கூட்டம் வந்து நாசம் செய்துவிட்டதால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஏக்கருக்கு ₹10 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் குடியாத்தம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளால் சேதமான பயிர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. பலமுறை வனத்துறையினரிடம் கேட்டாலும், நிதி இல்லை என்று கைவரிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் இழப்பீடு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

யானையின் உணவும், வாழிடமும்                                   

யானைகள் இலையுண்ணிகள் அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. காடுகள் அழிக்கப்பட்டு வருவதால், கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்துவருகிறது. எனவே காடுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: