நிவர் புயலின் கனமழை காரணமாக 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை: செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிசாமி பேட்டி..!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார். நிவர் புயல் காரணமாக கடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்குக் கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. விநாடிக்கு 4,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து இருப்பதாக பொதுப்பணித்துறை தெரிவித்திருந்தது. மொத்தக் கொள்ளளவான 24 அடியில் நீர் மட்டம் 22 அடியை எட்டியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து 1,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தமுள்ள 19 மதகுகளில், தற்போது 7 மதகுகள் வழியாக 1,000 கன அடி நீர் தற்போது நீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், 5 ஆண்டுக்கு பின் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியில் கொட்டும் மழையில் குடைப்பிடித்தப்படி முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம் ஆகிய தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, அவர் அளித்த பேட்டியில்: நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், அடையாறு ஆற்றில் 60 ஆயிரம் கனஅடி நீர் திறக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், நிவர் புயலின் கனமழை காரணமாக சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சை, திருவாரூர், காஞ்சி, சென்னை, நாகை, கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>