இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு நாள் கொரோனா காலத்திலும் அவலங்கள் அரங்கேறியது கொடூரத்தின் உச்சம்

* மனநிலையை மாற்றுவோம் * பெண்மையை போற்றுவோம்

சேலம்: 1960ம் ஆண்டு நவம்பர் 25ம்தேதி மிராபெல் சகோதரிகளான 3 சகோதரிகள், அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சமூகத்தில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதை கடுமையாக எதிர்த்து அவர்களுக்காக குரல் கொடுத்து வந்தவர்கள்தான் இந்த சகோதரிகள். படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ‘மறக்க முடியாத வண்ணத்துப்பூச்சிகள்’ என்று அவர்கள் உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்டனர். 1999ம் ஆண்டு நடந்த ஐநா சபைக்கூட்டத்தில் மூன்று சகோதரிகளும் இறந்த நாளை (நவம்பர் 25) ‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு நாள்’ என்று அனுசரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இன்று (25ம் தேதி) சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் இந்த நாளை அனுசரித்து வருகிறோம். ஆனால் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இன்றுவரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. அதிலும் இந்தியாவை  பொறுத்தவரை குழந்தையில் கருக்கொலை, யுவதியானபின் பாலியல் கொலை, மணமானவுடன் வரதட்சணை கொலை, காதல் திருமணம் செய்தால் கவுரவக்கொலை, ஒருதலைக் காதலால்  கோரக்கொலை என்று ஒவ்வொரு நிலையிலும், ஒரு கொலைக்கு பெண்ணினம் ஆளாகும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது.  

 இதேபோல் இளம்வயது  திருமணம், பாலியல் பலாத்காரம், கல்வி மறுப்பு, சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை என்று இழைக்கப்படும் அநியாயங்களும் முடிவில்லாத ஆரம்பங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கடைசி 3 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் 2017ல் 304, 2018ல் 310, 2019ல் 291 என்ற ரீதியில் பெண்களுக்கு எதிரான போக்சோ, பாலியல் சீண்டல், வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய காலகட்டத்தில் மட்டும் 162 வழக்குகள் பதிவாகி உள்ளது என்று புள்ளி விபரங்கள் தெரிவித்திருப்பது கொடூரத்தின் உச்சம்.

தற்ேபாதைய விஞ்ஞான யுகத்தில் கல்வி, நாகரீகம், வேலைவாய்ப்பு என்று அனைத்திலும் நாடு, நொடிக்கு நொடி முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் போற்றி வணங்க வேண்டிய பெண்மைக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறைகள், அடக்கு முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது காலத்தின் சாபம்.  ஆண் குழந்தைகளோடு ஒப்பிடுகையில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சரிந்து கொண்டே வருவது, அதைவிட  அபத்தம். சட்டமும், சமூகமும், திட்டமும் இறைவனின் ஒப்பற்ற படைப்பான பெண்ணினம்  காக்க துணை நிற்கும் என்பதை நாம் நம்புவோம். ஆனாலும் அவர்களை மகனாக, சகோதரனாக, காவலனாக இருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆணின் மனதிலும் பதியவேண்டும். அப்போது தான் தொடரும் துயரங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்கின்றனர் மகளிர்  மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள்.

Related Stories: