நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னையிலிருந்து இயக்கப்படும் 27 சிறப்பு ரயில்கள் நாளையும் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு.!!!

சென்னை: நிவர் புயல் காரணமாக விடிய, விடிய கொட்டிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஊர்ந்து சென்ற வாகனங்களால் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். நிவர் புயல் காரணமாக நேற்றுமுன்தினம் இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் நேற்று முன்தினம் இரவு விட்டு,விட்டு மழை பெய்தது. நேற்று பிற்பகல் முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளையும் 27 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூர்-மதுரை, மதுரை-எழும்பூர், எழும்பூர்-காரைக்குடி, எழும்பூர்-செங்கோட்டை, திருநெல்வேலி-செங்கோட்டை, தூத்துக்குடி-எழும்பூர், எழும்பூர்-கன்னியாகுமரி, எழும்பூர்-கொல்லம், ராமேஸ்வரம் -சென்னை, மதுரை-சென்னை (06101, 06102), எழும்பூர்-திருச்சி, வண்டி எண் 15119 ராமேஸ்வரம் - மாண்டுயாடிஹ் எக்ஸ்பிரஸ், வண்டி எண் 02606/02605 காரைக்குடி-சென்னை எழும்பூர், சென்னை எழும்பூர்- காரைக்குடி இடையேயான பல்லவன் பகல் நேர சிறப்பு ரயில், வண்டி எண் 02636/02635 மதுரை சென்னை எழும்பூர் மதுரை வைகை பகல் நேர சிறப்பு ரயில் உள்ளிட்ட 27 சிறப்பு ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்னதாக, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 24 சிறப்பு ரயில்களை இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, இன்று காலை இயக்கப்படவிருந்த 3 பகல் ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைபோல், நாளையும் 27 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>