×

தெங்கம்புதூர் புல்லுவிளை கடைவரம்பு பகுதியில் தரிசாக கிடக்கும் 250 ஏக்கர் விளைநிலம்: சீராக தண்ணீர் விடப்படுமா?

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர் ஆதாரத்தை கொண்டு இந்த சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தென்மேற்கு, வடகிழக்கு என இரு பருவமழை மாவட்டத்தில் பெய்து வருவதால் பிற மாவட்டங்களை விட குமரி மாவட்டம் பசுமையாக காட்சி அளித்து வருகிறது. அணைகளில் இருந்து நீராதாரத்தை பெறும் வகையில் புத்தனார் சானல், தோவாளை சானல், நாஞ்சில் நாட்டு சானல், அனந்தனார் சானல் என பல சானல்கள் உள்ளன. சானல் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. ஆக்ரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் சானலின் கடைவரம்பில் உள்ள விவசாய நிலத்திற்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பது கேள்வி குறியாக இருந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் நெல் சாகுபடி ஒரே நேரத்தில் தொடங்கினாலும் கடைவரம்பு பகுதிகளில் சாகுபடி காலம் தாமதமாகிறது.

   அதுபோல் அறுவடை காலமும் பிந்துகிறது. இதனால் கடைவரம்பு விவசாயிகள் சாகுபடி செய்யும் நெற்பயிர்களை அறுவடை செய்து முடிவதற்குள் படாதபாடுபடுகின்றனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து வரும் அனந்தனார் சானல் பார்வதிபுரம், ஆசாரிபள்ளம், கோணம், வல்லன்குமாரன் விளை பகுதிக்கு வருகிறது. அங்கிருந்து கோட்டார், தெங்கம்புதூர் சானல் என இரண்டாக பிரிகிறது. தெங்கம்புதூர் சானல் வழியாக செல்லும் தண்ணீரை கொண்டு தெங்கம்புதூர் புல்லுவிளை பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் நீர் ஆதாரம் பெற்று வருகிறது. கடந்த காலத்தில் அதிக நிலப்பரப்பில் நெல்சாகுபடி நடந்துள்ளது. தென்னை, வாழைகளால் வயல் பரப்பளவு குறைந்து தற்போது சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் வயல் உள்ளது.   ஜூன் மாதம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் கன்னிப்பூ அறுவடை முடிந்து தற்போது அனைத்து பகுதியிலும் கும்பப்பூ சாகுபடிக்கு நாற்று நடவு செய்துள்ளனர். குறிப்பாக பறக்கை, தேரூர், சுசீந்திரம் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நாற்று செழிப்பாக வளர்ந்துள்ளது. இதே நிலை மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உள்ளது. ஆனால் புல்லுவிளையில் போதிய தண்ணீர் கிடைக்காமல் இன்னும் சாகுபடி பணிகள் தொடங்கவில்லை. மழையின்போது வீணாக ஆற்றில் போன தண்ணீரை கடைவரம்பான தெங்கம்புதூர் சானலுக்கு திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை வைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் நடவு பணி தள்ளிப்போய் கொண்டு இருக்கிறது.

 மேலும் தெங்கம்புதூர் சானல் புதர் மண்டி தூர்ந்துபோய் உள்ளது. தண்ணீர் சீராக வரும் வகையில் இந்த புதர்களை அகற்றி, சானலில் மண்டிகிடக்கும் மண்ணை அகற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு புதர்களையும், மண்ணையும் விவசாயிகள் அகற்ற பொதுப்பணித்துறையினர் கூறியதாக கூறப்படுகிறது தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை வைத்து தெங்கம்புதூர் புல்லுவிளை விவசாயிகள் கும்பப்பூ சாகுபடியை தொடங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். இது குறித்து விவசாயி பெரியநாடான் கூறியதாவது: தெங்கம்புதூர் புல்லுவிளை பகுதியில் 873 ஏக்கர் பரப்பளவில் வயல்கள் இருந்தன. இந்த நிலங்கள் ஆற்றுபாசனத்தை நம்பியே உள்ளது. தற்போது வயல் பரப்பளவு குறைந்து 250  ஏக்கர் வயல் உள்ளது.  மற்ற பகுதியில் தென்னந்தோப்பு மற்றும் வாழைதோப்புகள் உள்ளன. பல விவசாயிகள் பாரம்பரியத்தை பேணி காக்கும் விதத்தில் நெல் சாகுபடியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

புல்லுவிளை பகுதியில் உள்ள வயல்கள் தெம்பும்புதூர் சானலின் கடைவரம்பு பகுதியில் உள்ளதால், தண்ணீரை நாங்கள் கேட்டு வாங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. குறிப்பாக வருடம் தோறும் தண்ணீர் இல்லாமல் அறுவடை சமயத்தில் நெல் கதிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு வருகிறது.   தற்போது மாவட்டம் முழுவதும் கும்பபூ சாகுபடி முடிந்து விட்டது. ஆனால் புல்லுவிளை வயல் பகுதியில் இன்னும் கும்பபூ சாகுபடி தொடங்க வில்லை. சாகுபடியை தொடங்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தண்ணீர் திறந்துவிட தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும் தெங்கம்புதூர் சானலில் உள்ள புதர்களையும், மண்களையும் அகற்ற கோரிக்கை வைத்துள்ளோம்.
மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, தெங்கம்புதூர் சானலில் மண்டிகிடக்கும் புதர்கள், மண்ணை அகற்றி புல்லுவிளை வயல்பகுதிக்கு தேவையான தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புதர் விரைவில் அகற்றப்படும்
இது குறித்து பொதுப்பணித்துறை நீராதார அதிகாரி ஒருவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி தொடங்குவதற்கு முன்பு மார்ச், எப்ரல் மாதங்களில் சானல்கள் தூர்வாரப்படும். தற்போது அனந்தனார் சானலில் கோணம் பகுதியில் சானலில் மண்டிகிடக்கும் புதர்கள் அகற்றும் பணி நடக்கிறது. தொடர்ந்து தெங்கம்புதூர் சானலிலும் மண்டி கிடக்கும் புதர்கள் அகற்றப்படும். தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் அனைத்து சானல்களிலும் உள்ள புல், புதர்கள் அகற்றப்படும் என்றார்.



Tags : land ,grassland area , 250 acres of barren land in Tengambudur grassland area
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...