ஈரோட்டில் பொதுமக்கள் ஆவேசம் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம்

ஈரோடு: ஈரோட்டில் குண்டும் குழியுமான சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   ஈரோடு  திண்டல் அருகே ஜீவா நகர் உள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட  குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஜீவா நகரில் இருந்து  ரிங் ரோட்டை இணைக்கும் சாலை செல்வதால், திண்டல் பகுதியிலிருந்து ரிங்  ரோட்டிற்கும், ரிங்ரோட்டில் இருந்து திண்டல் பகுதிக்கும் ஏராளமான வாகனங்கள்  வந்து செல்கின்றன. இப்பகுதியில் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள்  மீண்டும் சீரமைக்கப்படாததால், ஜீவா நகர் பகுதி முழுவதும் குண்டும்  குழியுமாக காணப்பட்டது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும்,  பாதசாரிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். சாலையை செப்பனிட கோரி  மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை தகவல் தெரிவித்தும் எவ்வித பலனும்  அளிக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  நேற்று காலை குண்டும் குழியுமான சாலையில் தேங்கியுள்ள தண்ணீரில் நாற்று  நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள்  கூறியதாவது: திட்டப்பணிகளுக்கு முன்பே சாலை தூர்ந்து போய் காணப்பட்டது.  தற்போது திட்டப்பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு, பணிகள் முடிந்து இதுவரை  சாலை செப்பனிடப்படவில்லை. இதனால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழை  நீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி விட்டது. நாங்களும் பல முறை  மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. அதனால், நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டோம். உடனடியாக  சாலையை செப்பனிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: