வங்க கடலில் புயல் சின்னம் எதிரொலி குளம்போல் காட்சியளித்த குமரி கடல் பகுதிகள்

நாகர்கோவில்: வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில் குமரி மாவட்ட கடல் பகுதிகள் அலைகளின்றி நேற்று குளம்போன்று காட்சியளித்தது. வங்க கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயல் இன்று (25ம் தேதி) மாலை அல்லது இரவு காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு முன்னேற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. எனவே மக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான நீண்ட கடற்பகுதியில் நேற்று பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அதே வேளையில் ஒரு சில பகுதிகளில் இருந்து மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்கவும் சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி  துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு  தொழிலில் ஈடுபடும் 350 விசைப்படகுகள்  மற்றும் ஆரோக்கியபுரம் முதல்  மணக்குடி வரை உள்ள கடற்கரை கிராமங்களை  சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடந்த இரண்டு நாட்களாக  மீன்பிடிக்க  செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கடற்கரையில் பாதுகாப்பான  இடத்தில் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்ைக  காரணமாக குமரி  மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என  கலெக்டர்  உத்தரவிட்டுள்ளார். ஆனால் குளச்சல் பகுதியில் நேற்று வழக்கம்போல்  கட்டுமர  மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதுபோல் குளச்சலில் இருந்து  ஆழ்கடலுக்கு  மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளும் தொடர்ந்து  மீன்பிடித்துக்கொண்டிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகள் நேற்று முழுவதும் அலைகள் சீற்றமின்றி காணப்பட்டது. வழக்கமாக பலத்த சீற்றத்துடன் அலைகள் காணப்படுகின்ற பள்ளம், சங்குத்துறை பகுதிகளில் கடல் அமைதியாக குளம்போன்று காட்சியளித்தது. வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில் அரபிகடலில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

ஆழ்கடலுக்கு  செல்ல வேண்டாம்

 தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் ஒன்றரை மீட்டர் முதல் மூன்று மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. இன்று 25ம் தேதி வரை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய கடல் தகவல் சேவை மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: