×

தொடர் கனமழை எதிரொலி: 5 ஆண்டுகளுக்கு பின்னர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு: முதல்கட்டமாக விநாடிக்கு 1,000 கனஅடி வெளியேற்றம்.!!!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல்கட்டமாக விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நிவர் புயலால் பெய்து வரும்தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 4027 கன அடி தண்ணீர் வருகிறது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர் கனமழை காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென நிரம்பி 22 அடியை நெருங்கியது. இதனையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் 12 மணியளவில் வினாடிக்கு 1000 கன அடிநீர் திறக்கப்படும் என்று தெரிவித்தனர்.   

இதன்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல்கட்டமாக விநாடிக்கு 1,000 கனஅடி உபநீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பால் அடையாறு ஆற்றகரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்டலம் 10,11,.12,13ல் உள்ள கானுநகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அமமன் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், செம்பரம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்துகேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் என உதவி பொறியாளரும், வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் செம்பரம்பாக்கம் ஏரி முதன்முறையாக இன்று திறக்கப்பட்டுள்ளது. 2015-ல் 30,000 கனஅடி வரை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்துவிடப்பட்டதால் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Sembarambakkam Lake , Echo of continuous heavy rain: Water release from Sembarambakkam Lake after 5 years: 1,000 cubic feet of water discharged in the first phase !!!
× RELATED தலை, உடலை துண்டு துண்டாக வெட்டி...