நிவர் புயல் எதிரொலியாக சென்னையில் தொடரும் கனமழை.: புரசைவாக்கத்தில் அதிகபட்சமாக 14.82 செ.மீ மழை பதிவு

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் கனமழையால் வடசென்னையில் பெரும்பாலான பகுதிகள் மழை நீரில் தத்தளிக்கின்றது. சென்னையில் திங்கள் கிழமை இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னையில் உள்ள முக்கிய நகர்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகள் மழை நீரில் தத்தளிப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புரசைவாக்கத்தில் 14.82 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. வடசென்னையில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் வரை மழை நீர் தேங்கியுள்ளது. தொடர் மழையால் வால்டாக்ஸ் சாலையில் தேங்கிய நீர் கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்துள்ளது.

மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், மின்வெட்டு காரணமாகவும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மழை நீடிப்பததால் வெள்ள நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்களிடையே அச்சம் நிலவிவருகிறது. மேலும் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது. முக்கிய சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் மீண்டும் லாரி ஒன்று இரும்பு பாரத்தை உடைத்துக்கொண்டு விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினர். விடிய விடிய பெய்த மழையால் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் நபர்கள் பெரும் வேதனைக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.  

 

Related Stories: