5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு.. மதியம் 12 மணியளவில் வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றம்

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயலால் பெய்து வரும்தொ டர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 4027 கன அடி தண்ணீர் வருகிறது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.55 அடியை எட்டியதால் பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் 12 மணியளவில் வினாடிக்கு 1000 கன அடிநீர் திறக்க உள்ளது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராம மக்களுக்கு பொதுப்பணித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்துகேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் என செம்பரம்பாக்கம் நீர்திறப்பு குறித்து உதவி பொறியாளரும், வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு அறிவித்துள்ளார்.5 ஆண்டுகளுக்குப் பின்னர் செம்பரம்பாக்கம் ஏரி முதன்முறையாக இன்று திறக்கப்படுகிறது. 2015-ல் 30,000 கனஅடி வரை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்துவிடப்பட்டதால் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது நினைவுக் கூறத்தக்கது.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ள நிலையில், ஏரியை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அடையாறு ஆற்றங்கரையில் இருக்கக் கூடிய மக்கள் கவனமாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>