சீனாவின் மேலும் 43 ஆப்களுக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: சீனாவின் பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் ஆப்கள் உட்பட சீனாவின் 43 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இருதரப்பும் படைகளை குவித்துள்ளன. இப்பிரச்னையை தீர்க்க இருநாட்டு ராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதேவேளையில், வெவ்வெறு இடங்களில் சீனா தனது ஆக்கிரமிப்பு புத்தியை காட்டி வருகிறது. லடாக் பிரச்னை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதே நேரத்தில், டோக்லாமில் அது சாலைகள், கிராமம் அமைத்திருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் நேற்று முன்தினம் வெளிச்சத்துக்கு வந்தது.

லடாக் எல்லையில் மோதல் வெடித்தபோதே, சீனாவை சேர்ந்த 59 ஆப்களுக்கு கடந்த ஜூன் 29ல் மத்திய அரசு தடை விதித்தது. பின்னர், செப்டம்பர் 2ம் தேதி மேலும் 118 ஆப்களுக்கு தடை விதித்தது. பப்ஜி, டிக்டாக் போன்ற பிரபல ஆப்கள், இந்த தடையில் சிக்கின. இந்நிலையில், சீனாவை சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் ஆப்கள் உட்பட 43 சீன ஆப்களுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது. நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிய வந்ததால், இந்த தடை விதிக்கப்பட்டதாக அது விளக்கம் அளித்துள்ளது.  

Related Stories:

>