பல கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்துவீடு கட்டிய பரூக் அப்துல்லா: ஜம்மு காஷ்மீர் அரசு திடீர் குற்றச்சாட்டு

ஜம்மு: முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லாவின் வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி நிர்வாகம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2001ம் ஆண்டில் அப்போதைய முதல்வராக பரூக் அப்துல்லா இருந்த போது ரோஷ்னி சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, அரசுக்கு நிதி திரட்ட ஆக்கிரமிப்பு நிலத்தில் வசிப்பவர்களுக்கே, அப்போதைய சந்தை விலையில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக இச்சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தின் கீழ் நிலம் பெற்று பலன் அடைந்தவர்கள் பட்டியலை ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி நிர்வாக இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல முன்னாள் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், பிரபல ஓட்டல் உரிமையாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதில், ஜம்மு காஷ்மீர்  முன்னாள் முதல்வர்களான பரூக், உமர் அப்துல்லாவின் ஜம்மு வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, அவர்களின் தேசிய மாநாட்டு கட்சியின் ஜம்மு மற்றும் காஷ்மீர் தலைமை அலுவலகங்கள் ரோஷ்னி சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து பரூக்், உமர் அப்துல்லா மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் அவர்கள் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை உமர் மறுத்துள்ளார்.

Related Stories:

>