மொத்த செலவு 1.75 லட்சம் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்க அமெரிக்கா ‘டூர்’ போக ரெடியா?வைரலான டிராவல்ஸ் நிறுவன விளம்பரம்

மும்பை: ‘கொரோனா தடுப்பூசி போட்டுக்க, அமெரிக்காவுக்கு ‘வாக்சின் டூர்’ போக ரெடியா... பயண செலவு 1.75 லட்சம் மட்டுமே... முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என பிரபல டிராவல்ஸ் நிறுவனம் செய்துள்ள விளம்பரம் வைரலாகி உள்ளது. அமெரிக்க மருந்து நிறுவனங்களான பைசர், மாடர்னா ஆகியவை தங்களது பரிசோதனையை நிறைவு செய்துள்ளன. அடுத்த மாதம் 11ம் தேதி, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதற்கட்டமாக முன்கள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன்பின் படிப்படியாக மற்றவர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில், மும்பையை சேர்ந்த பிரபல டிராவல்ஸ் நிறுவனம் வாட்ஸ் அப் மூலம் கொரோனா தடுப்பூசி டூர் ஒன்றை அறிமுகப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப் மூலம் பலருக்கு பரவி வரும் அந்த விளம்பரத்தில், ‘தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முதல் ஆளாக இருங்கள்’ என தலைப்பு உள்ளது. அதோடு ‘பைசர் தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் விற்பனைக்கு வருகிறது. குறிப்பிட்ட சில விவிஐபி வாடிக்கையாளர் அம்மருந்தை பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.  இதற்கான மொத்த பயண கட்டணம் ரூ.1 லட்சத்து 74,999 மட்டுமே. மும்பையிலிருந்து நியூயார்க் சென்று மீண்டும் மும்பை திரும்பலாம். 3 இரவு/4 நாட்கள் தங்கும் வசதி, காலை உணவு மற்றும் ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ என்ற வாசகங்களுடன் முன்பதிவு செய்வதற்கான மொபைல் எண்களையும் வழங்கி உள்ளனர்.

இந்த விளம்பரம் வைரலானதைத் தொடர்ந்து செய்தி நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ‘‘நாங்கள் எந்த தடுப்பூசியையும் வைத்திருக்கவில்லை அல்லது வாங்கவில்லை. நாங்கள் ஏற்பாடு செய்யும் அனைத்தும் அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். எங்கள் நிறுவனம் அமெரிக்காவின் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி அமெரிக்க அரசு அனுமதி அளித்தவுடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தற்போது முன்பதிவு மட்டுமே நடந்து வருகிறது. பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை தந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். வெளிநாட்டவர்களுக்கும் தடுப்பூசி விற்கப்படும் போது, முன்பணம் கட்டினால் போதும்’’ என கூறுகின்றனர். ஆனால், தடுப்பூசி எப்போது எப்படி கிடைக்கும் என்பதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் கிளை சென்னையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: