கேரள அரசின் புதிய சட்டம் ஊடக சுதந்திரத்தை பறிக்கும்: ஐஎன்எஸ் கண்டனம்

புதுடெல்லி: ஊடக சுதந்திரத்தை பறிக்கக் கூடிய போலீஸ் சட்ட திருத்தத்தை கேரள அரசு திரும்ப பெற வேண்டுமென இந்திய பத்திரிகையாளர் சங்கம் (ஐஎன்எஸ்) வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ஐஎன்எஸ்.சின் தலைவர் எல்.ஆதிமூலம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஊடகங்களில் வெளியிடப்படும் அவதூறான செய்திகளுக்கு கடும் தண்டனை வழங்க வழிவகுக்கும் போலீஸ் சட்ட திருத்தத்திற்கான அவசர சட்டத்தை கேரள மாநில அரசு கொண்டு வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை ஐஎன்எஸ் கடுமையாக எதிர்க்கிறது.

ஏற்கனவே கடந்த 2015ல் கேரள போலீஸ் சட்டத்தின் பிரிவு 118(டி) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66ஏ ஆகியவை கருத்து சுதந்திரத்தை மீறுவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இச்சட்ட திருத்தத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடத்தி தீர்வு காணும் வரை இதை சட்டமாக்க மாட்டோம் என முதல்வர் பினராய் உறுதி அளிக்க வேண்டும். மேலும், ஊடக சுதந்திரத்தை உறுதிபடுத்தும் வகையில், இச்சட்டத்தை  வாபஸ் பெறுவதற்கான புதிய அவசர சட்டத்தை இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: