×

முக்கியமான போட்டிகளை பார்க்க 4000 ரசிகர்களை அனுமதிக்க இங்கிலாந்து அரசு முடிவு

லண்டன்: இங்லிஷ் பிரிமியர் லீக் உள்ளிட்ட முக்கியமான போட்டிகளைக் காண 4000 ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. கொரோனா பீதி காரணமாக இங்கிலாந்தில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அதனால் விளையாட்டு போட்டிகள் இடை நிறுத்தப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 17ம் தேதி முதல் இங்லிஷ் பிரிமீயர் லீக் உள்ளிட்ட போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால் போட்டிகள் பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டன. இந்நிலையில் தொடர் தளர்வுகளுக்கு இடையில்  பயிற்சிகளுக்கு அனுமதி அளித்ததுடன், உடற்பயிற்சிக் கூடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டன. ஆனால் விளையாட்டுப் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதற்கிடையில், இங்கிலாந்தில்  மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது.

2வது அலை காரணமாக நவ.1ம் தேதி முதல் டிச.2ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ‘ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிச.2ம் தேதியுடன் கட்டாயம் முடிவுக்கு வரும். விதிகளுக்கு ஏற்ப  பொதுமக்கள் வழக்கம் போல் வீடுகளை விட்டு  வெளியே வரலாம்’ என்று கூறியுள்ளார். இங்கிலாந்து பண்பாட்டுத் துறை செயலாளர் ஆலிவர் டவுட்டன் கூறுகையில், ‘கொரோனா தொற்று குறைவாக உள்ள டயர் 2 நகரங்களில் விளையாட்டு போட்டிகளைக் காண ரசிகர்கள் செல்லலாம். அரங்கின் இருக்கை களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் அல்லது 2000 ரசிர்கள், இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் ரசிகர்கள் போட்டிகளை காண அனுமதிக்கப்படுவர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு  டயர்-2 பகுதிகளில் இங்லிஷ் பிரிமீயர் லீக் உள்ளிட்ட முக்கிய போட்டிகளை காண 4000 ரசிர்கள் வரை அனுமதிக்க உள்ளோம்.

விளையாட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப எடுக்கப்படும் மிகப்பெரிய முன்முயற்சி இது. அதேநேரத்தில்  போட்டிகளை நடத்துபவர்கள் ரசிகர்களின் பாதுகாப்புக்கு ஒவ்வொரு கட்டத்திலும் முக்கியத்துவம் தருவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார். அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ள இங்லிஷ் பிரிமியர் லீக் நிர்வாகம், ‘இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அரசுடன்  இணைந்து பணியாற்றுவதே எங்கள் இலக்கு.  போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லாததால்,  கால்பந்து கிளப்கள் வருவாய் இழப்புடன் போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில் அரசின் அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரர்கள் முழுமையாக ‘பயோ பபுள்’ முறையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப் படுகின்றனர். அதே போல் போட்டிகளை காண வரும் ரசிகர்களையும் கவனமாக பாதுகாப்போம்’ என்று கூறியுள்ளது.கொரோனா தொற்று பரவலுக்கு ஏற்பட  எந்தப் பகுதி டயர் 1,  டயர் 2, டயர் 3 என்ற வரையறைக்குள் வருகின்றன என்பதை அரசு இன்று வியாழக்கிழமை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.Tags : UK ,government ,fans ,matches , The UK government has decided to allow 4000 fans to watch important matches
× RELATED பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்