நெல்லை அருகே நள்ளிரவில் பயங்கரம்; போலீசார் கண் முன் பெண் தீக்குளித்து தற்கொலை: மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது தாக்கியதால் விபரீதம்

பேட்டை: நெல்லை அருகே வெளிநாடு செல்ல இருந்த மகனை குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்த போலீசாரை தடுக்க முடியாததால் விரக்தியடைந்த தாய் போலீஸ் கண்முன்னே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை அடுத்த பாரதியார் நகர் அருகே சத்யாநகரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி சகுந்தலா (48). கட்டிடத் தொழிலாளி. தர்மராஜ் 20 வருடங்களுக்கு முன்பு சகுந்தலாவை விட்டு பிரிந்து சென்றார். பின்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்த அவர் கோவையில் வசித்து வருகிறார்.

தர்மராஜ்- சகுந்தலா தம்பதிக்கு அபிராமி (26) என்ற மகளும், பிரசாந்த் (22), பிரதீப் (20) ஆகிய மகன்களும் உள்ளனர். அபிராமி திருமணமாகி தனது கணவர் பிரபுவுடன் கரூரில் வசித்து வருகிறார். பிரகாசும், பீரதிப்பும் பெயின்டராக வேலை பார்ப்பதோடு வேலை இல்லாத நாட்களில் பிற கூலி வேலைகளுக்கும் செல்வது வழக்கம். இளையமகன் பிரதீப் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். இது தொடர்பாக அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா தலைமையிலான போலீசார் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக பிரதீப்பை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

சிறிது நேரத்தில் மீண்டும் அவரது அண்ணன் பிரசாந்தையும் விசாரணைக்கு அழைப்பதற்காக போலீசார் வந்துள்ளனர். அப்போது அவரது தாய், பிரசாந்தை அழைத்துச் செல்லாதீர்கள் என்று போலீசாரின் காலில் விழுந்து கெஞ்சி மன்றாடினார். ஆனால் அதை பொருட்படுத்தாத போலீசார் அவரை எட்டி உதைத்து கம்பால் தாக்கி உள்ளனர். பின்னர் பிரசாந்தை வலுக்கட்டாயமாக போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். இதனால் அவமானம் தாங்காத தாய் சகுந்தலா, போலீசார் கண் முன்னே தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீ மளமளவென்று உடல் முழுவதும் பரவவே பிரசாந்தும், போலீசாரும் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சகுந்தலா பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை எஸ்.பி. மணிவண்ணன், ஏஎஸ்பி பிரதிப் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது எஸ்.பி. கூறுகையில், ‘‘நவ.3ம் தேதி சுத்தமல்லியை அடுத்த கோமதி நகரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பிரமநாயகம் என்பவரது வீட்டில் நகை, பணம், லேப்டாப் ஆகியவை திருடு போன வழக்கில் அன்புராஜ், அருள்ராஜ், பிரதீப் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

திருடப்பட்ட லேப்டாப் பிரதீப் வீட்டில் இருப்பதை அறிந்த போலீசார் அதை மீட்கச் செல்லும் போது, அவரது மூத்த மகன் பிரசாந்த் முன்னிலையில் அவரது தாய் சகுந்தலா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை மீட்டு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். பிரதீப் மீது ஏற்கனவே போக்சோ சட்டம் மற்றும் ரத்தக்காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 வழக்குகள் உள்ளன. போலீசார் தாக்கியதால் சகுந்தலா இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.’’ என்றார்.

கல் நெஞ்ச காவலர்கள்

கணவர் பிரிந்து சென்ற பின் தன்னந்தனியாக கட்டிட வேலைக்கு சென்று மகளை கரையேற்றிய சகுந்தலாவுக்கு, மூத்தமகன் பிரசாந்த்தும், இளையமகன் பிரதீப்பும் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருந்துள்ளனர். நாளடைவில் பிரதீப் காதல் என்று திசை திரும்பியதால் அவன் மீது சகுந்தலா நம்பிக்கை இழந்தார். மூத்தமகன் பிரசாந்த் வறுமையில் வாடும் குடும்பத்தை கரைசேர்ப்பான் என்று நம்பினார். அவரது நம்பிக்கைக்கு ஏற்றாற் போல் அவனுக்கு வெளிநாட்டு வேலைக்கு ஆர்டர் வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் வெளிநாடு செல்லும் மகனை போலீசார் பிடிக்க வந்திருக்கிறார்களே என்று நினைத்து அவர்களிடம் கெஞ்சியுள்ளார்.

ஆனால் போலீசார் அதை பொருட்படுத்தாமல் அலட்சியமாக அவரை எட்டி உதைத்ததால், ‘பிரசாந்த் வெளிநாடு சென்றால் கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்று நினைத்தேனே, அதற்கும் உலை வைத்துவிட்டார்களே என்று’ கதறி உயிரை மாய்த்துக் கொண்டார்.

Related Stories: