×

வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற விவசாயிகளுக்கு வீட்டு சிறை

திருச்சி: வேளாண் சட்டங்களை கண்டித்து வரும் 26, 27ம் தேதிகளில் டெல்லியில் போராட்டம் நடத்த புறப்பட்ட விவசாயிகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் வரும் 26, 27ம் தேதிகளில் இந்திய விவசாயிகள் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப், அரியானா, குஜராத், டெல்லி உள்பட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 500 விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதையொட்டி திருச்சியிலிருந்து அய்யாக்கண்ணு தலைமையில் 150 விவசாயிகள் இன்று காலை 8.30 மணியளவில் வைகை எக்ஸ்பிரஸில் சென்னை புறப்பட தயாராக இருந்தனர்.

இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 விவசாயிகளும் சென்னைக்கு வர இருந்தனர். அங்கிருந்து இன்றிரவு 7 மணிக்கு டெல்லி புறப்பட திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் இன்று காலை அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை அவர்களது வீட்டிலேயே சிறை வைத்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல், தமிழக முழுவதும் டெல்லி செல்லும் விவசாயிகளை வீட்டு சிறை வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது: வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் வரும் 26, 27ல் போராட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து 500 பேர் கலந்துகொள்கிறோம். திருச்சியில் இருந்து செல்லும் 150 விவசாயிகளும்  தலையை பாதி மொட்டை அடித்து செல்ல தயாராக இருந்தோம்.

ஆனால், இன்று எங்களது வீட்டிற்கு வந்த போலீசார் எங்களை வீட்டு சிறை வைத்துள்ளனர். இதுகுறித்து கேட்டால் டெல்லி செல்ல அனுமதி இல்லை என கூறுகின்றனர். எங்களை போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி செல்ல சென்னை புறப்பட்ட விவசாயிகளையும் வீட்டு சிறையில் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Delhi , Home imprisonment for farmers who went on strike in Delhi to condemn agricultural laws
× RELATED புதிய வேளாண் சட்டங்கள்...