நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெறுகிறது: கிழக்கு கடற்கரைக்கு மக்கள் வர வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. அவ்வப்போது விட்டு விட்டு மழை பொழிந்தது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவானது. அது படிப்படியாக வலுவடைந்து வந்தது. இதனால் இன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை மற்றும் மிககனமழை பெய்யும்.

கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதே நேரத்தில் காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் மேலும் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிதீவிர புயலாக மாறி நிவர் நாளை மாலை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். கரையை கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சென்னையில் இருந்து 430 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 முதல் 6 கி.மீ.வேகத்தில் மெதுவாக நகர்ந்து கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கிழக்கு கடற்கரைக்கு மக்கள் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. புயலின் காரணமாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>