கடலோர மாவட்டங்களில் மீட்பு படையினர் குவிப்பு: புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்

கடலூர்: நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே எம்ஜிஆர் திட்டு, முழுக்குத்துறை உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீனவ உபகரணங்களை பாதுகாப்பாக வைக்குமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் அவர் அறிவுறுத்தினார். கடலூர் மாவட்டத்துக்கு 6 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்திருப்பதாக தெரிவித்த ஆட்சியர், இதில் 3 குழுக்கள் கடலூரிலும், மற்ற 3 குழுக்கள் பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் பகுதிகளிலும் முகாமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை, இடும்பாவனம், கற்பகநாதர்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை கட்டடங்களில் மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தா பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். திருத்துறைப்பூண்டியில் புயல் பாதுகாப்பு மையங்களை பார்வையிட்ட திமுக எம்.எல்.ஏ. அடிப்படை வசதிகள் செய்து திரும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மன்னார்குடி பகுதியில் இன்னும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கவில்லை என அந்த தொகுதி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா குற்றம் சாட்டினார். பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர் ஏரி ஏற்கனவே நிரம்பி உள்ள நிலையில் அங்குள்ள தலை வாய்க்கால் மதகு சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளே அந்த மதகை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அரும்பாவூர் ஏரி நீர்வழி தடங்களில் உள்ள மதகுகளை ஆட்சியர் திருமதி வெங்கடபிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார். 

Related Stories:

>