அதிமுக எம்.பி. வீட்டில் வெடிகுண்டு வீச்சு: நாகர்கோவிலில் இன்று காலை பரபரப்பு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் அதிமுக எம்.பி. விஜயகுமார் வீட்டில் இன்று காலை வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் விஜயகுமார். இவரது வீடு, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சிதம்பரநாதன் தெருவில் உள்ளது. இவர் அதிமுகவில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். கடந்த சில தினங்களுக்கு முன் விஜயகுமார் டெல்லி புறப்பட்டு சென்றார். அவரது கார் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. வழக்கம் போல் இன்று காலை அவரது டிரைவர் வந்தார். அப்போது வீட்டின் முன் பகுதியில் திடீரென பந்து போல் ஒரு உருளையான பொருள் கிடந்தது.

சந்தேகத்தின் பேரில் அதன் அருகில் சென்ற போது அதில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு, திரியும் இணைக்கப்பட்டு இருந்தது. வெடிமருந்து நிரப்பி, அதை தீ வைத்து, வீட்டின் முன் நின்ற கார் மீது வீசி உள்ளனர். ஆனால் அது வெடிக்காமல் சிதறி உள்ளது. இது பற்றி அறிந்ததும் வீட்டில் இருந்தவர்கள் விஜயகுமார் எம்.பி.க்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் டி.எஸ்.பி. வேணுகோபால் மற்றும் நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இது வெடித்து இருந்தால் அந்த பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும். காரும் தீப்பிடித்து எரிந்து இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து நேசமணிநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கி உள்ளனர். விஜயகுமார் எம்.பி. வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர். விஜயகுமார் எம்.பி. வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் கத்தியுடன் மர்ம நபர் நுழைந்த சம்பவமும் நடந்தது. பின்னர் விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறி வழக்கை முடித்தனர். விஜயகுமார் எம்.பி.க்கு போலீஸ் பாதுகாப்பும் உண்டு. அவர் ஊரில் இருந்தால், அவருடன் போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்புக்காக செல்வார். விஜயகுமார் எம்.பி. ஊரில் இருக்கும்போது, காலையில் விளையாட செல்வது வழக்கம். அப்போது காரில் தான் செல்வார். எனவே அவர் ஊரில் இருக்கிறார் என நினைத்துக் ெகாண்டு வெடிகுண்டுடன் மர்ம நபர்கள் வந்து இருக்கலாம் என்றும், நீண்ட நேரமாக அவர் காரை எடுத்துக் கொண்டு வெளியே வராததால், கார் மீது வெடிகுண்டை வீசி விட்டு தப்பி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

விஜயகுமார் எம்.பி. வீடு அமைந்துள்ள பகுதியில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். உள்கட்சி கோஷ்டி பிரச்சினையில் வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது இருக்குமா? என்று பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இன்று காலை அந்த வழியாக பைக்கில் சில மர்ம நபர்கள் சுற்றியதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். எனவே அவர்கள் தான் வெடிகுண்டை வீசி சென்றார்களா? என்றும் சந்தேகிக்கப்படுகிறது. குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. வேணுகோபால் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: