வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2019-ம் மக்களவைத் தேர்தலில், உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி  தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வென்றார். இவருக்கு எதிராக, முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர், தேஜ் பகதுார் யாதவ் சமாஜ்வாதி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரது வேட்பு மனு எல்லை பாதுகாப்புப்  படையின் சான்றிதழை, இணைக்கவில்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து, தனது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்ததால் பிரதமர் மோடி எளிதாக வெற்றி பெற்றுவிட்டார் என்று தேஜ் பகதூர் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2019ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, தேஜ் பகதூர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையின்போது, வழக்கை ஒத்திவைக்கும்படி மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை நிராகரித்த நீதிபதிகள், தொடர்ந்து விசாரணையை நடத்தி முடித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியே என்றும் உச்சநீதிமன்றம்  தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Related Stories: