×

முரசொலிமாறன் 17ம் ஆண்டு நினைவு நாள்: தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை

சென்னை: கலைஞரின் மனசாட்சியாக விளங்கியவரும், திமுகவின்  முன்னோடிகளில் ஒருவருமான முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 17ம் ஆண்டு  நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் அவருடைய சிலைக்கும்,  படத்துக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கும்பகோணம் தனியார் மண்டபத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறன் படத்துக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞரின் இல்லத்தில் முரசொலிமாறனுக்கு திருஉருவச்  சிலை உள்ளது.

இந்த திருஉருவ சிலைக்கு நாகை தெற்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் கௌதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர்  மாவட்டம் காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார்  அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் உள்ள முரசொலி மாறன் உருவபடத்துக்கு மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஈரோடு தெற்கு  மாவட்ட திமுக சார்பில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி  தலைமையில், மாநில நிர்வாகிகள் அந்தியூர் செல்வராசு உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர். இதே போல ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில்  பவானி ஒன்றியம், குருப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் கார்த்திக்  எம்.எல்.ஏ. தலைமையில் முரசொலி மாறன் உருவப்படத்துக்கு ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் புது பஸ்  ஸ்டாண்டில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அங்கு முரசொலி மாறன் படத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  இதேபோல் பூலாவரியில் நடந்த  நிகழ்ச்சியில், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, கிழக்கு  மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி உள்பட  பலர் முரசொலி மாறன் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி  செலுத்தினர்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில், இடைப்பாடி பஸ்  ஸ்டாண்ட் அருகே நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி  தலைமையில் முரசொலி மாறன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது.
நாகர்கோவிலில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக  அலுவலகத்தில் முரசொலி மாறன் படத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக  செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர்.
நெல்லை டவுனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  முரசொலி மாறன் படத்துக்கு நெல்லை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஏஎல்எஸ்  லட்சுமணன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் ஆகியோர் தலைமையில்  திமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி தெற்கு  மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் திமுகவினர்  முரசொலி மாறன் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். வேலூர்  மாநகர திமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முரசொலி மாறனின்  உருவப்படத்துக்கு மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ தலைமையில்  திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதேபோல் மத்திய மாவட்ட திமுக  அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முரசொலி  மாறன் உருவப்படத்துக்கு மாநகர திமுக செயலாளர் எம்எல்ஏ கார்த்திகேயன்  தலைமையில்  திரளான திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ராணிப்பேட்டை  மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் உருவ படத்திற்கு மாவட்ட செயலாளர்  ஆர்.காந்தி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் தமிழகம் முழுவதும் முரசொலி மாறனின் உருவப்படத்திற்கும், சிலைக்கும் திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மும்பையில்: பம்பாய் திருவள்ளுவர் மன்ற கலையரங்கில் வைக்கப்பட்டுள்ள முரசொலிமாறன் சிலைக்கு மும்பை புறநகர் திமுக அவை தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Murasolimaran 17th Anniversary ,DMK ,Tamil Nadu , Murasolimaran 17th Anniversary: DMK honors all over Tamil Nadu
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே அமோக வெற்றி: முத்தரசன் பேட்டி