×

கல்விக்கட்டணம் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “கல்விக் கட்டணம் பிரச்னையால் தங்களுக்கு தனியார்  மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்த மாணவர்களுக்கு உதவிடும் வகையில், மீண்டும் கலந்தாய்வு நடத்தி, அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான  நடவடிக்கையை தாமதமின்றி எடுக்க வேண்டும்” என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை-அண்ணா அறிவாலயத்தில், 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் அடிப்படையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டிய வாய்ப்புக் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், அந்த வாய்ப்பினை நிராகரிக்க நேர்ந்த, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் இலக்கியா மற்றும் தர்ஷினி ஆகியோர் சந்தித்து தங்களது குறைகளைக் கூறினர்.

அப்போது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உடனிருந்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் இதேபோன்ற காரணத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்தும் குறிப்பிட்டு, அவர்கள் உடனடியாக மருத்துவக் கல்வியில் சேர உரிய தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் முதல்வர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

7.5% முன்னுரிமை இடஒதுக்கீட்டின் அடிப்படையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அனுமதிக்கான இடம்பெற்ற மாணவ மாணவியர் பலருக்கு, கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது என்பதால், தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.  “நீட்” தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக, ‘போஸ்ட் மெட்ரிக்’  கல்வி உதவித்தொகை  மற்றும் இதர கல்வி உதவித் தொகை வழங்கும்  திட்டங்கள் மூலம்  நடைமுறைப்படுத்தச் சுழல் நிதி உருவாக்கப்பட்டுள்ளதாக” அரசு சார்பில் காலதாமதமாக அறிவித்ததும், இந்த மாணவ மாணவிகளுக்குக் கலந்தாய்வின்போதே முக்கியமான இந்தத் தகவலைத் தெரிவிக்காததும்,  நெருக்கடியான இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.  

கலந்தாய்வின்போதோ அல்லது அதற்கு முன்னரோ, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இந்தத் தகவலைக் கூறாததால் - இன்றைக்குப் பல மாணவ மாணவியரின் மருத்துவக் கனவு, “கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை” என்றாகி விட்டது. இதற்குத் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆகவே கல்விக் கட்டணம் செலுத்தும் பிரச்னையால் தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ஆக்கபூர்வமாக உதவிடும் வகையில், மீண்டும் கலந்தாய்வு நடத்தி, அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான நடவடிக்கையைத் தாமதமின்றி எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் விவரம்
சேலத்தை சேர்ந்த மாற்று திறனாளி எஸ்.சுபத்ரா, திருச்சுழியை சேர்ந்த அருண்பாண்டி, உசிலம்பட்டியை சேர்ந்த  எஸ்.தங்கபாண்டி, தங்கப்பேச்சி, கடலூரை சேர்ந்த இலக்கியா, தர்ஷினி ஆகியோர் மருத்துவ கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரியில் கிடைத்த ஒதுக்கீட்டை ஏற்கவில்லை.

கவிஞர் சுரதாவின் புகழை போற்றுவோம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட இயக்கத்தின் தனி பெரும் கவியாம் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவராக, அவரது கவிதா மண்டலத்தில் வாடாத வண்ண மலராக முகிழ்த்து வந்து வாழ்நாளெல்லாம் மணம் பரப்பிய உவமை கவிஞர் சுரதா சுப்பு ரத்தினதாசனின் 100வது பிறந்த நாளில் அவரது தனிப்பெரும் தமிழ் இலக்கிய பங்களிப்புகளை நெஞ்சில் ஏந்தி போற்றுவோம். கலைஞரின் மீதும், தனிப்பட்ட முறையில் என் மீதும், மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர் உவமை கவிஞர் சுரதா. உவமை கவிஞருக்கு சென்னை அசோக் நகரில், சிலை திறந்து சிறப்பு சேர்த்தவர் கலைஞர்.திராவிட இயக்க சிந்தனையுடன், தமிழ் இலக்கிய வானத்தில் சிறகடித்து மிக மிக உயரத்திலே பறந்து பாடிக் கொண்டிருந்த உவமை கவிஞர் சுரதாவின் புகழை, அவரது நூற்றாண்டில் ஏற்றி போற்றிடுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Government ,colleges ,MK Stalin , Government should take steps to enroll students affected by tuition fees in private medical colleges: MK Stalin urges PM
× RELATED பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த...