×

கல்விக்கட்டண அறிவிப்பை முன்னரே அறிவித்து இருந்தால் மருத்துவ படிப்பில் சேர்ந்து இருப்போம்: பணமில்லாமல் எம்பிபிஎஸ் வாய்ப்பை தவற விட்ட மாணவிகள் கண்ணீர் பேட்டி: அரசு உதவ கோரிக்கை

சென்னை: தனியார் கல்லூரியில் கல்விக்கட்டணத்தை அரசு ஏற்கும் என்று முன்னரே அறிவித்து இருந்தால் மருத்துவ படிப்பில் சேர்ந்து இருப்போம் என்று 7.5% இடஒதுக்கீடு வாய்ப்பிருந்தும் பணமில்லாமல் மருத்துவ படிப்பை தவற விட்ட மாணவிகள் கண்ணீர் மல்க பேட்டியளித்தனர். மேலும் மருத்துவம் படிக்க அரசு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவ கலந்தாய்வின்போது அரசின் 7.5 உள்ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவமனையில் இடம் கிடைத்தும், பணம் இல்லாததால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர முடியாமல் நிராகரித்த மாணவிகள் 2 பேர் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்கள் நிலை குறித்து பேசினர். சந்திப்புக்கு பின்னர் கண்ணீர் மல்க மாணவி இலக்கியா அளித்த பேட்டி: நான் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். நீட் தேர்வில் பொதுப்பிரிவில் 258வது ரேங்கும், கம்யூனிட்டி அடிப்படையில் 98வது ரேங்கும் பிடித்தேன்.

முதல் நாள் கவுன்சிலிங்கில் என்னை காலை 11 மணிக்கு வருமாறு அழைத்தார்கள். அழைப்பு கடித்தை எடுத்து கொண்டு கவுன்சலிங்கிற்கு போனேன். ஆனால் அங்கு அரசு மருத்துவ கல்லூரியில் 227 இடங்களும், கம்யூனிட்டி பிரிவில் காலியாகி விட்டது. உங்களுக்கு தனியார் மருத்துவக்கல்லூரி இடம் வேண்டுமா? என்று கேட்டார்கள். அப்போது நான் எங்கள் வீட்டில் அவ்வளவு பணம் கட்டி படிக்கக்கூடிய வசதி இல்லை. அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க மட்டும் தான் என்னால் முடியும். அதனால், எனது இடத்தை காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டு வந்து விட்டேன். அடுத்த நாள் முதல்வர் தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரும், அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படும் என்று அறிவித்தார். முன்னரே அரசு இதை அறிவித்து இருந்தால் நான் தனியார் மருத்துவ கல்லூரியை எடுத்து இருப்பேன். எங்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் எடுக்க முடியாமல் போய் விட்டது.

இந்த வருடம் நான் டாக்டர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். நான் டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் எனது கனவு. அதை நிறைவேற்றி கொடுத்தால் நான் சந்தோஷப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார். ஆர்.தர்ஷினி என்ற மாணவி அளித்த பேட்டி: நானும் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். நீட்டில் பொதுப்பிரிவில் 324 ரேங்க் கிடைத்தது. என்னை 19ம் தேதி கவுன்சலிங்கிற்கு அழைத்தார்கள். நானும் போனேன். அப்போது எனக்கு 9 தனியார் மருத்துவ கல்லூரியை காட்டினார்கள். எனக்கு அம்மா மட்டும் உள்ளார். அதனால் 4 லட்சம், 5 லட்சம் என்று தனியார் மருத்துவ கல்லூரியில் கட்ட முடியாது. இதனால் எனது அம்மா தனியார் மருத்துவ கல்லூரி வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

முதல்வர் இந்த அறிவிப்பை முன்னரே வெளியிட்டு இருந்தால், தனியார் மருத்துவ கல்லூரியில் போய் சேர்ந்து இருப்பேன். இப்போது படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரியில் சேர எனக்கு உதவி செய்ய வேண்டும். முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் நினைத்தால் எனக்கு எம்பிபிஎஸ் சீட்டை இந்த ஆண்டே கொடுக்க முடியும். பணம் கட்ட வசதியில்லாமல் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் வேண்டாம் என்று அறிவித்த அனைத்து மாணவர்களின் நிலையை மறுபரிசீலனை செய்து மீண்டும் சீட் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  முன்னதாக நாங்கள் மனு எடுத்துக்கிட்டு முதல்வரை சந்திப்பதற்காக தலைமை செயலகத்துக்கு போனோம். எங்களை உள்ளே விடாமல் பொதுமக்கள் போகும் இடத்தில் போங்க என்று திருப்பி அனுப்பினர். அங்கே ரொம்ப நேரம் கழித்து தான் உள்ளேயே விட்டார்கள். அங்கேயே முதல்வர் அலுவலகத்தில் எங்களை அலைய விட்டார்கள். மனுவை வாங்கவில்லை. கடைசியாக அமைச்சர் அலுவலகத்தில் மட்டும் தான் மனு வாங்கினார்கள்.

நாகர்கோவில் மாணவி மோனிஷா: முதல்நாள் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டது. 2வது நாள் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில்தான் இடம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கு வருடத்திற்கு ₹9 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர். இதனால் கலந்தாய்வில் பங்கேற்றாலும் அவ்வளவு கட்டணம் செலுத்தும் அளவிற்கு வீட்டில் வசதி இல்லை என்பதால் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. அரசு முதலிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால் நான் நிச்சயமாக மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருப்பேன்’ என்றார். மதுரை விக்கிரமங்கலம் கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி தங்கபேச்சி: தனியார் மருத்துவ கல்லூரியில் மட்டும் 10 இடம் இருந்தது. இக்கல்லூரியில் சேர்வதற்கு 4 லட்சம் முதல் 6 லட்சம் வரை பணம் கட்ட வேண்டும் என கூறப்பட்டது. அதனால் கவுன்சலிங்கில் பங்கேற்கவில்லை.

படிப்பு உதவித்தொகை வழங்கப்படும் என முன்பே தெரிந்திருந்தால், நான் கவுன்சலிங்கில் இடத்தை தேர்வு செய்திருப்பேன். ’’ என்றார். தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மிதுன்குமார்: எனது பெற்றோர் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். எனவே, தனியார் மருத்துவக் கல்லூரியில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி என்னால் படிக்க முடியாது. அதனால், கவுன்சலிங்கில் எனக்கான கல்லூரியை தேர்வு செய்யவில்லை. அரசு முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டிருந்தால் எனது மருத்துவ கனவு நனவாகி இருக்கும்.’ என்றார். நெல்லை மாணவி முத்துச்செல்வி: நீட் தேர்வில் 196 மதிப்பெண் எடுத்தேன். எனது தந்தை பரமசிவன் கூலித் தொழிலாளி. தனியார் கல்லூரியில் இவ்வளவு பணம் செலுத்த முடியாது என்பதால் திரும்பி விட்டேன். நாங்கள் திரும்பி வந்த பின்னர் 21ம் தேதி அரசு மாணவிகள் செலவை ஏற்பதாக கூறியது. இதை முதலிலேயே அறிவித்திருந்தால் வேண்டாமென கூறியிருக்க மாட்டோம். காலம் கடந்த அறிவிப்பால் எனக்கு பெரிய இழப்பாகி விட்டது என கண்ணீர் விட்டார்.

நெல்லை மாணவி வேணி: எனது தந்தை மாரியப்பன் கூலித் தொழிலாளி. இந்த ஆண்டு அரசு அறிவித்த 7.5% இட ஒதுக்கீட்டில் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாது என்பதால் சேரமுடியாத நிலையில் திரும்பி வந்து விட்டேன். கல்வி கட்டணத்தை அரசே ஏற்பதாக கலந்தாய்விற்கு முன்னதாக அரசு அறிவித்திருந்தால் தனியார் கல்லூரி சீட் மறுத்திருக்க மாட்டேன். எனது கனவு நிறைவேற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு அரசு கோட்டாவில் இடஒதுக்கீடு ஏதாவது ஒரு கல்லூரியில் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.Tags : interview ,Government ,MBBS , We would have joined the medical course if the tuition notice had been announced in advance: Tearful interview of students who missed the MBBS opportunity without money: Government assistance
× RELATED அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை...