×

சிறைகளில் மனநல சிகிச்சை மையம் கோரி வழக்கு போலீசார் லஞ்சம் வாங்குவதும்மனஅழுத்தம் சார்ந்த பிரச்னையே: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: சிறைகளில் மனநல சிகிச்சை மையங்கள் அமைக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, ஐகோர்ட் கிளை நீதிபதிகள் குறுக்கிட்டு, போலீசார் லஞ்சம் வாங்குவதும்கூட மனஅழுத்தம் சார்ந்த பிரச்னையே என்று கருத்து தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கொலை வழக்குகளில் சிறைத்தண்டனை அனுபவிப்ேபார் அதிகளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சிறைவாசிகளின் மன அழுத்தத்தை போக்கிட மத்திய சிறைகளில் சிறப்பு மனநல சிகிச்சை குழு அமைக்க வேண்டியது அவசியம். இக்குழு சென்னை மத்திய சிறையில் மட்டுமே உள்ளது. திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இதுவரை அமைக்கப்படவில்லை. அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரை கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை குழுவை மத்திய சிறைகளில் அமைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். காவல்துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வதும், லஞ்சம் வாங்குவதும் கூட விடுமுறை இல்லாமல் தொடர் பணியாற்றும் மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளின் வெளிப்பாடே. தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாதது, போதிய அளவிற்கு தூக்கம் இல்லாதது போன்றவற்றின் வெளிப்பாடுதான். குடும்ப பிரச்னைகளுக்கு இதுவும் காரணம். எனவே, மனநல மருத்துவர்களின் தேவை அதிகமுள்ளது’’ என்றனர். அரசுத்தரப்பில்,  ‘‘தமிழக சிறைகளில் மனநல சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.


Tags : treatment center prisons ,branch judges ,ICC , Police bribery in psychiatric treatment center prisons: ICC branch judges
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...