எப்.சி. பெற ஜிபிஎஸ் கருவி கட்டாயம் வாபஸ் பெறாவிட்டால் லாரிகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம்: மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவிப்பு

நாமக்கல்: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எப்சி பெற, ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால், அரசிடம் லாரியை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் செல்ல ராசாமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்து தொழில்  நடத்த முடியாமல், லாரிகளுக்கு தவணை கூட செலுத்த முடியாமல், கடும்  சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் அரசு, லாரி தொழிலை  நசுக்குவதற்காகவே திட்டமிட்டுள்ளது போல் செயல்படுகிறது. ஏற்கனவே  வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஸ்டிக்கர் போன்றவற்றை குறிப்பிட்ட  நிறுவனங்களிடம் இருந்துதான் வாங்க வேண்டுமென நெருக்கடி கொடுத்த நிலையில்,  தற்போது புதிய நெருக்கடியாக ஜிபிஎஸ் கருவியை குறிப்பிட்ட நிறுவனத்தில்  இருந்து வாங்க அறிவிப்பு வெளியிட்டு இருப்பது புரியாத புதிராக உள்ளது.

ஏற்கனவே அண்டை  மாநிலங்கள், காலாண்டு வரியை தள்ளுபடி செய்த நிலையில், தமிழக அரசு வரி  தள்ளுபடி செய்ய வேண்டும் என, நீதிமன்றத்தை நாடியும் ஏமாந்த லாரி  உரிமையாளர்கள், ஸ்டிக்கர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் நீதிமன்றம் சென்றுதான் ஆறுதலான தீர்ப்பை பெற்றது. இந்நிலையில் புதிதாக ஜிபிஎஸ் கருவி  கட்டாயம், அதுவும் குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்துதான் பொருத்த வேண்டும்  என்ற அறிவிப்பு, ஒட்டுமொத்தமாக தொழிலையே முடக்கும்  செயலாகும்.எனவே தமிழக முதல்வர், இப்பிரச்னையில் தலையிட்டு இதுபோன்ற செயல்களை இனி ஒருமுறை செய்யக்கூடாது என போக்குவரத்து ஆணையருக்கு  அறிவுறுத்த வேண்டும். இந்நிலை தொடர்ந்தால்  தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு, லாரிகளை அரசிடமே ஒப்படைக்கும் போராட்டம் நடத்தும். இவ்வாறு செல்ல ராசாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: