×

நிட்டோ ஏடிபி பைனல்ஸ் மெட்வதேவ் சாம்பியன்

லண்டன்: நிட்டோ ஏடிபி பைனல்ஸ் தொடரில் ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். ஆண்டு இறுதி உலக தரவரிசை பட்டியலில்  முதல் 8 இடங்களில் உள்ள டென்னிஸ் வீரர்கள் மோதும் நிட்டோ ஏடிபி பைனல்ஸ் தொடர் லண்டனில் நடந்தது. டோக்கியோ 1970, லண்டன் 2020 என 2 பிரிவுகளாக நடந்த லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த நோவாக் ஜோகோவிச் (செர்பியா), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), ரபேல் நடால் (ஸ்பெயின்), டானில் மெட்வதேவ் (ரஷ்யா) ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர்.

முதல் அரை இறுதியில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சை வீழ்த்திய டொமினிக் தீம் (3வது ரேங்க்) பைனலுக்கு முன்னேறினார். 2வது அரை இறுதியில் ரபேல் நடால் - மெட்வதேவ் மோதினர். அதில் மெட்வதேவ் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத் தொடர்ந்து, சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் தீம், மெட்வதேவ் களம் கண்டனர். முதல் செட்டை தீயாய் வேகம் காட்டிய தீம் 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். ஆனாலும் 2வது செட் டைபிரேக்கர் வரை நீண்டது. கொஞ்சம் சுதாரித்த  மெட்வதேவ் அந்த செட்டை 7-6 (7-2) என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார்.

கடைசி செட்டிலும் சிறப்பாக விளையாடி 6-4 என்ற கணக்கில் வென்ற மெட்வதேவ் முதல் முறையாக ஏடிபி பைனல்ஸ் தொடரில் கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இந்த போட்டி 2மணி, 42 நிமிடங்கள் நீண்டது. பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து மெட்வதேவ் தொடர்ந்து வெல்லும் 10வது போட்டி இது. பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலும் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். அதுமட்டுமல்ல, செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலில் தீம் மெட்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பழி தீர்க்கும் வகையில் நேற்றைய இறுதி ஆட்டம் அமைந்தது.

ஆனால் வெற்றிக்கு பிறகு பேசிய மெட்வதேவ், பெரும்பாலும் டொமினிக்கை புகழும் வகையிலேயே பேசினார். ‘வாவ் என்ன ஒரு ஆட்டம். இது எனது சிறந்த வெற்றிகளில் ஒன்று. ஒரு சிறந்த வீரருக்கு எதிராக 2மணி, 42நிமிடங்களுக்கு 3 செட்கள் விளையாடி இருக்கிறேன். டொமினிக் நீங்கள் ஏற்கனவே சாதித்ததற்காக எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். டென்னிஸ் வரலாற்று புத்தகத்தில் உங்கள் பெயர் ஏற்கனவே இடம் பெற்றுவிட்டது. அற்புதம். இந்த ஆண்டு நீங்கள் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று உள்ளீர்கள். நம்ப முடியாத வகையில் உங்கள் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இதுபோல் இன்னும் நீங்கள் பல போட்டிகளில் அசத்தலாக விளையாடி சாதிக்க உள்ளீர்கள்’ என்றார் மெட்வதேவ். உலக அளவில் 4வது ரேங்க் வீரரான மெட்வதேவ் (24 வயது), முன்னணி வீரர்களான ஜோகோவிச், நடால், தீம் ஆகியோரை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 50 ஆண்டு கால ஏடிபி பைனல்ஸ் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் டாப் 3 வீரர்களை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* கொண்டாட்டம் இல்லை
ஏடிபி பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மெட்வதேவ் தனது வெற்றியைக் கொண்டாடாமல் மிக அமைதியாக, முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் தனது பாக்கெட்டில் இருந்த பந்தை கீழே போட்டுவிட்டு எதிர்த்து விளையாடிய தீமுடன் கைகுலுக்க வலையை நோக்கி சென்றார். இதற்கு என்ன காரணம் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். 2019 யுஎஸ் ஓபன் தொடரின்போது மெட்வதேவ் மோசமாக நடந்து கொண்டதால் ரசிகர்கள் அவரை கேலி செய்து கூக்குரலிட்டனர். இறுதிப் போட்டியில் நடாலிடம் 5 செட்கள் கடுமையாகப் போராடி தோற்ற பின்னர், இனி எந்த போட்டியில் வென்றாலும் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடப் போவதில்லை என முடிவு செய்துவிட்டாராம். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றாலும் அமைதி காக்கப் போவதாகக் கூறுகிறார்.

Tags : Nito ATP Finals Medvedev Champion , Nito ATP Finals Medvedev Champion
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட்; பெங்களூரு – கொல்கத்தா இன்று மோதல்