தனது பலவீனத்தை மறைக்க சீனா மீது ஜோ பிடென் போர் தொடுக்க வாய்ப்பு: சீன அரசின் ஆலோசகர் சூசகம்

பீஜிங்: `உள்நாட்டு பிரச்னைகளை தீர்க்க முடியாமல் போகும் பட்சத்தில் ஜோ பிடென் பலவீனமான அதிபராகவே கருதப்படுவார். தனது பலவீனத்தை மறைக்க சீனா மீது போர் தொடுக்க அதிக வாய்ப்புள்ளது,’ என்று சீன அரசு ஆலோசகர் ஜெங் யாங்னியன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவிக்காலத்தில் அமெரிக்கா, சீனா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இரு நாடுகளும் கடுமையான வர்த்தக போரில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், புதிய அதிபராக பிடென் தேர்வாகி உள்ளதால் இனி அமெரிக்க-சீன உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என சீனா மறுத்துள்ளது.

சீனாவின் குவாங்ஜூலுவில் உலகளாவிய மற்றும் சமகால சீனா ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் கொள்கைகளுக்கான அரசு அமைப்பின் ஆலோசகருமான ஜெங் யாங்னியன், `சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா-சீனா இடையிலான நல்ல நட்புறவுக்கான நாட்கள் முடிவடைந்து விட்டது. பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பனிப்போர் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடென் வெள்ளை மாளிகைக்கு சென்ற பின்பு, சீனா மீதான மக்களின் பொது வெறுப்பை பயன்படுத்தி கொள்வார்.

உள்நாட்டு பிரச்னைகளை தீர்க்க முடியாமல் போகும் பட்சத்தில் அவர் பலவீனமான அதிபராகவே கருதப்படுவார். அந்நிலையில், தனது பலவீனத்தை மறைக்க, அவர் சீனா மீது போர் தொடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. டிரம்ப்பிற்கு ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் ஊக்குவிப்பதில் ஆர்வமில்லாமல் இருந்தது என்றால், பிடென் அதற்கு நேர் எதிரானவர். டிரம்பின் ஆட்சி காலத்தில் கோவிட்-19, வர்த்தகம், மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் பாதிக்கப்பட்ட போதிலும், அவர் போரை விரும்பவில்லை. ஆனால், பிடென் போரைத் தொடங்கினாலும் தொடங்குவார். இவ்வாறு ஜெங் கூறி உள்ளார்.

Related Stories:

>