×

டோக்லாமில் இருந்து 7 கி.மீ தொலைவில் சீனாவின் புதிய பதுங்கு குழி ஆயுத கிடங்குகள் கண்டுபிடிப்பு: செயற்கைகோள் புகைப்படங்களின் மூலம் உறுதியானது

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சீனா புதிய பதுங்கு குழி ஆயுத கிடங்குகளை கட்டியிருப்பது, செயற்கைகோள் படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் கவனத்தை லடாக் எல்லை பிரச்னையில், திசை திருப்பி விட்டு, கிழக்கு மாநிலங்களான சிக்கிம், அருணாச்சல் பிரதேச எல்லைகளில் தனது படை, ஆயுத பலத்தை சீனா பல மடங்கு பெருக்கி வருவது, சமீபத்தில் தெரிய வந்தது. இது தவிர பூடானுக்கு சொந்தமான பகுதியில், இந்திய எல்லையையொட்டி புதிய வீடுகளையும் அமைத்து வருகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் உள்ள சின்செ-லா கணவாயின் கிழக்கில் 2.5 கி.மீ தூரத்தில் சீனா ஆயுதங்களை சேமித்து வைக்கும் புதிய பதுங்கு குழிகளை கட்டி இருப்பது செயற்கைகோள் படங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த 2017ல் இந்தியா-சீனா இடையே பிரச்னையை ஏற்படுத்திய டோக்லாம் எல்லை நிலையில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ``டோக்லாம் பிரச்னை தீவிரமானால், சரியான தாக்குதல் நடத்துவதற்காக சீனா இங்கு ஆயுதங்களை சேமித்து வருகிறது. பூடான் எல்லையில் புதிய வீடுகளை கட்டியுள்ள நிலையில், டோக்லாம் பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் சீனா நடந்து கொள்வது கவலையளிக்கிறது,’’ என ராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஓய்வுபெற்ற வடக்கு ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பனாங் கூறுகையில், ``டிசம்பர் 2019ல் எடுக்கப்பட்ட செயற்கைகோள் படங்களில் பதுங்கு குழி கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை என்பதை காட்டுகிறது. அதே நேரம், அக்டோபர் 28, 2020ல் எடுக்கப்பட்ட செயற்கைகோள் படங்களில், பதுங்கு குழி ஆயுத கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது,’’ என கூறினார். மேக்சார் டெக்னாலஜி எடுத்த புகைப்படத்தில் சின்செ-லா கணவாயில் இருந்து 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது. `கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் சீனா தனது விமானப்படை தளங்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்களின்  எண்ணிகையை இருமடங்கு உயர்த்தி உள்ளது,’ என ஸ்ட்ராட்போர் என்ற புவி அரசியல் அமைப்பு கடந்த செப்டம்பரில் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் குறுகிய நிலப்பரப்பு, சீன படைகளுக்கு தெளிவாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : China , Discovery of China's new bunker arsenal 7 km from Doklam: confirmed by satellite imagery
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்