×

நாளை கரையை கடக்கிறது!., சென்னையை நெருங்கும் நிவர் புயல்: செங்கல்பட்டு உள்பட 7 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்

* கடலோர பகுதிகளில் தயார்நிலையில் பேரிடர் மீட்பு படை
* மின்சாரம் துண்டிக்கப்படுகிறது
* மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி அவசர ஆலோசனை

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதையடுத்து இன்று அது புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இதையடுத்து, நிவர் புயல்  காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை 7 மாவட்டங்களில் மதியம் 1 மணி முதல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் 6 பிரிவுகள் கடலூரிலும், 2 படையினர் சென்னையிலும் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபடும். புயல் கரையை கடக்கும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மீன்வளத்துறை, மின்சார மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர்களுடன் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. இன்றைய நிலவரப்படி (24ம் தேதி) நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை மற்றும் மிககனமழை பெய்யும். கடலூர், திருச்சி,  புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். 24ம் தேதி மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர்  இது புயலாக மாறிய நிலையில் தமிழகத்தில் நாகப்பட்டினம் முதல் சென்னை வரை உள்ள கடலோரப் பகுதியில் உச்சபட்சமான அளவில் மிககனமழை பெய்யும்.

இந்நிலையில், இந்த நிவர் புயல் 24ம் தேதி இரவில் இருந்தே வலுவடையத் தொடங்கி தமிழக கடற்கரை பகுதிக்கு நெருங்கி வரும். இதையடுத்து, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 25ம் தேதி பிற்பகலில் கரையைக் கடக்கத்தொடங்கும். அப்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும். மிக கனமழை பெய்யும். புயல் கரையைக் கடந்து  வட தமிழகத்தின் வழியாக தெலங்கானா மாவட்டத்தின் வழியாக சென்று 26ம் தேதி மும்பை பகுதியில் வலுவிழந்துவிடும்.
வங்கக் கடலில் தற்போது புயல் நிலை கொண்டு இருப்பதை அடுத்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளச்சல் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 3 ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். புயல் தமிழக கடலோரப் ப குதிக்கு நெருங்கி வரும் போது கடலில் அதிக அளவில் சீற்றம் இருக்கும். கடல் அலைகள் 1 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரம் வரை எழும்பும். அதனால் கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் நிவர் புயல் குறித்த அவசர ஆலோனை கூட்டம் நடந்தது. இதையடுத்து புயல் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை 24ம் தேதி மதியம் 1 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட மாவட்டங்களில் பொதுமக்கள் கார், பைக் ஆகியவற்றில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். இதில் புயல் கரையை கடக்கும் கடலூர் மாவட்டத்தில் 6 தேசிய பேரிடர் மீட்பு குழுவும், சென்னையில் 2 குழுவும் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபடும். மேலும் மின்வாரியம் சார்பில் 1000 பணியாளர்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான மின்கம்பம், மரம் அறுப்பான், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் புயல் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை மாவட்ட கலெக்டர்களுடன் மக்களின் பாதுகாப்பு, நிவாரணம், முகாம்கள் மற்றும் உணவு, சுகாதார நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அவர்களிடம் புயலை எந்த நிலையிலும் சந்தித்து நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.

நிவர் புயல் குறித்து சில தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து: பெரும்பாலான புயல்கள் பசிபிக் கோடுகள் மூலம் நகர்த்தப்படுவதால், மேல் நோக்கித்தான் புயல் நகர்ந்து செல்லும். கீழ் நோக்கி  திசை மாறி செல்வது மிகவும் அரிதான நிகழ்வாகவே இருக்கும். அதாவது அரபிக் கடல்நோக்கி கீழ் திசையில் நகர்வது அரிதானதாகும். அப்படி கீழ் நோக்கி நகரும் போது புயல் வலுவடைய வாய்ப்பு இல்லை. இந்நிலையில் நிவர் புயல் கரைக் கடக்க இரண்டு வாய்ப்புகள் உள்ளன.  முதலாவதாக, இந்த புயல் வலுவிழந்த  புயலாக மாறி டெல்டா பகுதியில் கரையைக் கடக்கும். இரண்டாவதாக, வலுவான புயலாக மாறினால் மட்டுமே காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கவும் வாய்ப்புள்ளது.

முதல் வாய்ப்பின் போது வலுவிழந்த புயலாக மாறி டெல்டா பகுதியில் வேதாரண்யம்-காரைக்கால் இடயே 24 மற்றும் 25ம் தேதிகளில் கரையைக் கடக்கும். அல்லது வலுவான புயலாக மாறும் போது, காரைக்கால்-சென்னை இடையே கரையைக் கடக்கவும் வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் 25ம் தேதி புயல் கரையைக்கடக்கும் என்பது உறுதி. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 120 முதல் அதிக பட்சமாக 150 கிமீ வேகத்தில் காற்று வீசும். கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இரண்டு விதமான புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதால் தென் மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் ஒரு புயல் வருகிறது
நிவர் புயல் நாளை காரைக்கால்-மாமல்லபுரம் வழியாக தமிழக உள் மாவட்டங்கள் வழியாக தெலங்கானா சென்று 26ம் தேதி மும்பையில் வலுவிழக்கும். இதையடுத்து, 30ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகும். இதுமேலும் வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

24 மற்றும் 25ம் தேதி
பகுதியளவு ரத்தாகும் ரயில்கள்
மைசூர் - மயிலாடுதுறை விரைவு ரயில் திருச்சி - மயிலாடுதுறை இடையிலும், ஏர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் திருச்சி - காரைக்கால் இடையிலும், கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரயில் திருச்சி - மயிலாடுதுறை இடையிலும், புவனேஷ்வர் - பாண்டிச்சேரி விரைவு ரயில் புதுச்சேரி - சென்னை எழும்பூர் இடையிலும்,  பாண்டிச்சேரி - ஹவுரா விரைவு ரயில் விழுப்புரம் - புதுச்சேரி இடையில் ரத்து செய்யப்படுகிறது.  ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணம் விதிகள் படி திருப்பி அளிக்கப்படும்.

11 விரைவு ரயில் சேவை ரத்து
சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 11 விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ரயிலின் பெயர்    ரத்தாகும் நாள்    ரயில் எண்
சென்னை - தஞ்சாவூர்    24, 25ம் தேதி    06866, 06865
சென்னை - தஞ்சாவூர்    25ம் தேதி        06866
சென்னை - திருச்சி    25ம் தேதி        06795
திருச்சி - சென்னை    25ம் தேதி        06796

Tags : border ,storm ,districts ,Chennai ,Nivar ,Chengalpattu , Crossing the coast tomorrow!., Nivar storm approaching Chennai: Bus traffic halted in 7 districts including Chengalpattu
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது