×

தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்ததும் 5 ஸ்டார் ஓட்டலில் ரூம் புக் செய்கின்றனர்: காங். நிர்வாகிகள் குறித்து குலாம்நபி ஆசாத் விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து விட்டால், அவர்கள் முதலில் 5 நட்சத்திர ஓட்டல்களில் அறையை முன்பதிவு செய்கின்றனர் என்று குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 இடங்களில் வென்றது. கடந்த தேர்தலில் 27 இடங்களில் வென்றதைவிட இந்த முறை காங்கிரஸ் நிலைமை மோசமானது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் நடந்த 50க்கும் மேற்பட்ட இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து மூத்த தலைவர் கபில்சிபல் அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்யும் காலம் முடிந்துவிட்டது.

பீகார் முடிவுகள் மூலம் நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை என்றே தெரிகிறது’என்று தெரிவித்திருந்தார். கபில்சிபலின் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் கபில் சிபலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அளித்துள்ள பேட்டியில், ‘காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை. கட்சி தலைமை பதவிக்கு வேறு வேட்பாளர் யாரும் இல்லை. ஆனால் விமர்சனம் என்பது எதிர்ப்பு அல்ல. சீர்திருத்தங்களுக்காகவே இதனை கூறுகிறோம். கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத வகையில் கட்சியானது கீழ்நோக்கி சென்றுள்ளது.

கடந்த இரண்டு ஆட்சி காலத்திலும், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கூட காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. சில நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட கட்சியிடம் இருந்து சீட் கிடைத்து விட்டால், முதலில் அவர்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் அறையை முன்பதிவு செய்கின்றனர். தேர்தல்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் இருந்து நடத்தப்படுவது இல்லை. அவர்கள் களத்திற்கு செல்வதில்லை. இந்த கலாசாரம் மாறும் வரை நாம் வெற்றி பெற போவதில்லை’ என்று கூறியுள்ளார்.

காங்கிரசிடம் சக்தி இல்லை
பீகார் தோல்வி தொடர்பாக மூத்த தலைவர் கபில்சிபல் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாக அறிவித்ததற்கு பிறகு இன்றுவரை புதிய தலைவர் நியமிக்கவில்லை. ஒன்றரை ஆண்டு காலமாக தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும்? கட்சி எந்த வழியில் செல்கிறது என்று தொண்டர்களுக்கு தெரியவில்லை. உத்தரபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் காங்கிரசால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. பாஜகவுடன் மோதக்கூடிய தகுதி உள்ள கட்சியாக காங்கிரஸ் கட்சி காட்டிக் கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் இப்போது சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக இல்லை. கட்சியின் நிலை தவறான இலக்கை நோக்கி செல்கிறது. அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டும்’என்றார்.

Tags : room ,star hotel ,election ,executives ,Ghulam Nabi Azad , They book a room in a 5 star hotel after getting a seat to contest the election: Cong. Ghulam Nabi Azad's critique of executives
× RELATED ஓசூரில் வார் ரூம் திறப்பு