நாடாளுமன்ற தேர்தலை போல் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்: 3வது நாளாக கைதான உதயநிதி பரபரப்பு பேச்சு

மயிலாடுதுறை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ பயணத்தை கடந்த 20ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் துவங்கினார். உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு திருவெண்காட்டில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கினார். அங்கு இளைஞர் அணியினரை நேற்று காலை சந்தித்தார். பின்னர் மதியம் தேர்தல் பிரசாரத்திற்கு புறப்பட்டார். பகல் 2.05 மணிக்கு குத்தாலம் கடைவீதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த வரவேற்பு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் பிரசார கூட்டத்தை முதலில் துவக்கிய என்னை கைது மேல் கைது செய்து மிகப்பெரிய வெற்றியை காவல்துறையினர் ஏற்படுத்தி தந்துள்ளனர். அவர்களுக்கு முதலில் நன்றி. பாஜக, அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை போல் இந்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள். இவ்வாறு பேசினார். இதையடுத்து, கைது செய்வதாக உதயநிதி ஸ்டாலினிடம் போலீசார் தெரிவித்தனர். பிரசார வேனில் இருந்து உதயநிதி ஸ்டாலினை கீழே இறங்க வலியுறுத்தியதால் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் வாகனத்தை நகரவிடாமலும், கைதுக்கு கண்டனம் தெரிவித்தும் போலீசாரை மறித்தனர்.

உடனே உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் அமித்ஷா நடத்திய கூட்டத்திற்கு மட்டும் அனுமதியளித்த காவல்துறையினர் எனக்கு மட்டும் அனுமதி மறுப்பதேன். இன்னும் 5 மாதம் தான் இவர்களது ஆட்டம். தற்போது, காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தாருங்கள், நான் கைதாகிறேன்” என்றார். அதன் பிறகு  போலீசார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து, குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

7 மணி நேரத்திற்கு பின்பு விடுவிப்பு

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டு குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார். வழக்கமாக போராட்டத் தில் ஈடுபடுபவர்களை கைது செய்து மாலை 6 மணிக்கு விடுவிப்பது வழக்கம். ஆனால் போலீசார் வழக்கத்துக்கு மாறாக சுமார் 7 மணி நேரம் திருமண மண்டபத்தில் உதயநிதி ஸ்டாலின் அடைத்து வைத்திருந்தனர். அதன்பிறகு இரவு 11 மணியளவில் அவரை விடுவித்தனர். உதயநிதி ஸ்டாலின் 11 மணி வரை விடுவிக்கப்படாததால் தமிழகம் முழுவதும் பரபரப் பான சூழ்நிலை காணப்பட்டது.

Related Stories: