அதிமுக, பாஜவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? தேர்தல் பிரச்சாரத்தை தடுத்தால் தேர்தல் ஆணையரிடம் புகார் அளிப்போம்: டிஜிபியை சந்தித்த பின் டி.ஆர்.பாலு பேட்டி

சென்னை: தேர்தல் பரப்புரையை தடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் அளிப்போம் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வில்சன் எம்.பி.ஆகியோர் டிஜிபி திரிபாதியை நேற்று நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் பேசியதாவது:

‘திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பணிகளை செய்ய விடாமல் காவல்துறையினர் கைது செய்கின்றனர். ஆனால் பாஜவை சேர்ந்தவர்கள் வேல் யாத்திரை நடத்தும் போது அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆனால் உதயநிதியை பல மணி நேரம் காக்க வைக்கின்றனர். கைது என்பது திமுகவிற்கு புதிதல்ல, தமிழகத்தில் அராஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உதயநிதிக்கு நடக்கும் கொடுமைகளை பார்த்துக் கொண்டு எங்களால் இருக்க முடியவில்லை அதனால் தான் டிஜிபியை சந்தித்தோம்.

பாஜவிற்கு ஒரு நியதி, திமுகவிற்கு ஒரு நியதியா? அமித்ஷா வந்த போது சமூக இடைவெளி பின்பற்றப்பட்டதா? எடப்பாடி பழனிச்சாமி செல்லும் இடங்களில் அதிமுகவினரால் அழைத்து வரப்பட்டு கூட்டம் சேர்க்கப்படுகிறது. அப்போது சமூக இடைவெளி இல்லாமல் இருக்கிறது ஆனால் காவல்துறையினர் கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்றனர். கதவை தட்டியுள்ளோம் முறையான நடவடிக்கை இல்லை என்றால், திமுக உயர்மட்டக்குழு கூடி இது குறித்து பேசி முடிவு எடுப்போம். உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டுள்ள தேர்தல் பரப்புரையை தடுப்பது சட்டப்படி குற்றம். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம். காவல்துறையினர் முதுகெலும்பில்லாமல் அதிகாரவர்க்கத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: