×

வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து ஏ பயிற்சி ஆட்டம் டிரா

குயின்ஸ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து ஏ அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. ஜான் டேவிஸ் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து ஏ அணி 79 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 308 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 112 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன் எடுத்திருந்தது (98 ஓவர்). அந்த அணியின் டேரன் பிராவோ அதிரடியாக 135 ரன் (214 பந்து, 13 பவுண்டரி, 5 சிக்சர்), ஷம்ரா புரூக்ஸ் 80 ரன் விளாசினர். கேப்டன் சேஸ் 42 ரன் எடுத்தார்.

கடைசி நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி 366 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (116 ஓவர்). மோஸ்லி 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 3, பிளேர் டிக்னர் 2, மைக்கேல் ரிப்பன், நாதன் ஸ்மித், ஷான் சோலியா, கோல் மெக்கான்சி, ரச்சின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 58 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து ஏ அணி 1 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது. ரச்சின் 10 ரன் எடுத்து கேப்ரியல் வேகத்தில் கிளீன் போல்டானார். வில் யங் 64 ரன், டிவோன் கான்வே 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து மோதும் முதல் டி20 போட்டி நவ. 27ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.


Tags : West Indies ,New Zealand , West Indies - New Zealand A practice match draw
× RELATED சில்லி பாயின்ட்…