பென்சில்வேனியாவில் மனு தள்ளுபடி சட்ட வழக்கில் டிரம்புக்கு அடுத்தடுத்து தோல்வி

பென்சில்வேனியா: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து டொனால்ட் டிரம்ப் நடத்தி வரும் சட்டப் போராட்டத்தில் அவர் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. இதில், 306 எலக்டோரல் ஓட்டுகளை பெற்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் வெற்றி பெற்றுள்ளார். பென்சில்வேனியா, ஜார்ஜியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களை அவர் கைப்பற்றி உள்ளார். அவரது வெற்றியை உலகமே அங்கீகரித்தாலும், அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.

பல மாகாணங்களிலும் தேர்தல் முடிவை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் முறைகேடு தொடர்பாக டிரம்ப் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிபதி மாத்யூ பர்ன் நேற்று தள்ளுபடி செய்தார். தேர்தலில் முறைகேடு என்ற வாதத்திற்கு வலு சேர்க்க டிரம்ப் தரப்பினர் தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இது, டிரம்ப் தரப்பினருக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பிடென் வென்றுள்ளார். இதே போல மிச்சிகன் மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென்ற டிரம்ப் தரப்பின் கோரிக்கையை ஏற்க அம்மாகாண அரசு மறுத்து விட்டது. எனவே பென்சில்வேனியா மற்றும் மிச்சிகனில் அடுத்த வாரம் பிடெனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

* ஜார்ஜியாவில் மீண்டும் மறு எண்ணிக்கை

ஜார்ஜியா மாகாணத்தில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டதில் முறைகேடு இருப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் பிடென் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தபால் ஓட்டுகள் மறுஎண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. 5 லட்சம் வாக்குகள் கைகளால் எண்ணப்பட்டன. இதிலும் பிடென் 20,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 28 ஆண்டுக்குப் பின் ஜார்ஜியாவில் ஜனநாயக கட்சிக்கு வெற்றி தேடித்தந்து பிடென் சாதித்துள்ளார். ஆனாலும், தோல்வியை ஏற்காத டிரம்ப் தரப்பு 5 லட்சம் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என கூறியுள்ளது. அந்த வாக்குகளை மறுமுறை ஸ்கேன் செய்து பரிசோதிக்க வேண்டுமென கூறி உள்ளது.

* கொள்கை இயக்குநராக அமெரிக்க இந்தியர்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிடெனின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் இடம் பெறுகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பிடெனின் மனைவி ஜில் பிடெனின் கொள்கை முடிவு இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் இணை அட்டர்னி ஜெனரலுக்கான ஆலோசனையாளராக பணியாற்றிய அடிகா, ஜோ பிடென்-கமலா ஹாரிஸ் பிரசாரத்தின் மூத்த கொள்கை ஆலோசகராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார்.

Related Stories:

>