×

நவீன கால சாணக்கியர் அமித்ஷா: துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு

சென்னை: இனி வரும் தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணி தொடரும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார். சென்ைன கலைவாணர் அரங்கத்தில் நடந்த விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறந்த நிர்வாகி. உள்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்த இளம் அமைச்சர். சிறந்த செயல் திறனும் திடமும் கொண்ட நபர் அமித்ஷா. சவால்களை சாதனையாக மாற்றும் வல்லமை படைத்தவர். உள்நாட்டில் அமைதி நிலவ செய்வதில் அவருக்கு பெரிய பங்கு உள்ளது. ஆகையினால் பிரதமரின் நம்பிக்கைகுரிய சகாவாக அவர் உள்ளார். நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா.

மத்திய, மாநில உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு தான் நல்ல உதாரணம். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றும் கனவை நிறைவேற்றி வருகிறது இந்த அரசு. நீர் மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த விருது பெற்றது அதிமுக அரசு. இந்த அரசுக்கு சாட்சியாக இத்தனை தேசிய விருதுகளும், பாராட்டுகளும் தான். கடந்த 2011ம் ஆண்டு முதல் இன்று வரை அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் சரித்திர சாதனை படைத்து தமிழக மக்கள் மத்தியில் பாராட்டை தொடர்ந்து பெற்று வருகிறது. அதிமுக அரசு கோடிக்கணக்கான தமிழக மக்களை நம்பி, தொண்டர்கள் மீது நம்பிக்கை ைவத்து, மக்களுடன் பயணித்து மக்களுக்கான நல திட்டங்களை தீட்டுவதில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது என்பதை நாம் நன்றாக அறிவோம்.

அதனால், தான் தமிழக மக்கள் இன்றும் எங்கள் பக்கம். நாங்கள் என்றும் மக்கள் பக்கம் என்பதை இன்று சுட்டிகாட்ட கடமைப்பட்டிருக்கிறேன். எனவே, தொடர்ந்து 3 முறையும் வெற்றி பெற்று முத்திரை பதிப்போம். வெற்றிக்கனியை பறிப்போம். தேசிய அளவில் இந்தியா வல்லரசு நாடாக உருவாக்கி காட்டுகிற முயற்சியில் பாஜவை தலைமை தாங்கும் பிரதமர் மோடி கடுமையாக உழைக்கிறார். இனி வரும் தேர்தலில் அதிமுக-பாஜ வெற்றிக்கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chanakya Amit Shah ,OBS ,Deputy Chief Minister , Modern-day Chanakya Amit Shah: Deputy Chief Minister OBS talk
× RELATED கண்டுகொள்ளாத வனத்துறை பேச்சிப்பாறை...