×

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் மோடியின் முயற்சிக்கு தமிழகம் துணை நிற்கும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ380 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரூ67,378 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-II மற்றும் கோவையில் அவினாசி சாலையில் ரூ1,620 கோடியில் உயர்மட்ட சாலை திட்டம், கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் ரூ406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம், சென்னை வர்த்தக மையத்தில் ரூ309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் ரூ3,200 கோடியில் 3 திட்டம் உள்ளிட்ட ரூ67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய நீர்த்தேக்கத்தை திறந்து வைத்தும், ரூ67,378 ேகாடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகித்தார். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகம் முழுவதும் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதன் மூலம் இன்று தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதுபோன்ற முயற்சிகளால்தான் மத்திய அரசு 2019-2020ம் ஆண்டிற்கான நீர்மேலாண்மை திட்டங்களை இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படுத்திய முதல் மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்து தேசிய விருதை வழங்கியுள்ளது. ரூ61,843 கோடி மதிப்பீட்டில் 118.90 கி.மீ. நீளத்துக்கு சென்னை மெட்ரோ ரயிலின் 2வது கட்டத்தை செயல்படுத்த உள்ளது. வல்லரசு நாடுகளே பாராட்டும் அளவுக்கு பிரதமர் ஆட்சி செய்து வருகிறார். கொரோனா வைரஸ் ேநாய் பரவலை இன்றைக்கு அல்லும் பகலும் பாராமல் உழைத்து, அந்த நோய் பரவலை தடுப்பதற்காக கடுமையான முயற்சி செய்து வருகிறார் பிரதமர். ஆகவே, அவருடைய கடுமையான முயற்சிக்கு தமிழகம் எப்போதும் துணை நிற்கும்.

வல்லரசு நாடுகள் பாராட்டுகின்ற அளவுக்கு இந்தியா வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த முயற்சியும்தான் காரணம். நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 2021ம் ஆண்டு வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் எங்களுடைய கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமையும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu ,Edappadi ,spread ,Modi ,announcement ,country , Tamil Nadu will support Modi's efforts to curb the spread of corona virus in the country: Chief Minister Edappadi
× RELATED தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்த...