இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு: கொரோனா இறப்பை தடுக்கும் சிகிச்சை

வாஷிங்டன்: கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் சிகிச்சையை இந்திய வம்சாவளி விஞ்ஞானி திருமலா தேவி கண்டறிந்துள்ளார். இவர்  தெலங்கானாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கொரோனா தொற்று மோசமடைந்தால் நுரையீரல் பாதிப்படைவது, உறுப்புகள் செயலிழப்பது, ஆபத்து  ஏற்படுத்தும் அழற்சி ஆகிய பிரச்னைகள் நேர்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பிரத்யேக வழிமுறைகளையே தற்போது கண்டறிந்துள்ளனர்  விஞ்ஞானிகள். கொரோனா தொற்று ஏற்பட்ட எலிகளுக்கு அதீத அழற்சி காரணமாக செல்கள் எப்படி உயிரிழக்கின்றன என்பதையும், அதைத் தொடர்ந்து  ஏற்படும் ஆபத்துகளையும் கண்காணித்தனர். அழற்சி தடுப்பு மற்றும் செல்கள் சேதமடைவதைத் தடுக்கும் சிகிச்சையை வழங்கும்போது உயிரிழப்பைத்  தடுக்க முடியும் என்பதையும் புரிந்துகொண்டனர்.  

இதுபற்றி ‘ஜர்னல் செல்’ என்ற மருத்துவ இதழில் வெளியிட்டிருக்கும் ஆய்வுக்கட்டுரையில், ‘உடலுக்குள் கொரோனா வைரஸ் வந்தவுடன் தன்னைத்  தற்காத்துக் கொள்ள சைட்டோகைன் என்ற புரதம் உற்பத்தி ஆகிறது. வைரஸ்களுடன் போராடுவதற்காக ஆற்றலுடன் சண்டையிடும்  சைட்டோகைன்கள், சமயங்களில் உடலினுள் உள்ள நம் உள்ளுறுப்புகளையே தாக்கிவிடுகிறது. இதனால் உறுப்புகள் செயலிழந்து ஆபத்து ஏற்படுகிறது.  இதை சைட்டோகைன் புயல் என்றும் சொல்வதுண்டு. இந்த சைட்டோகைன் புயலை ஆய்வு செய்தது திருமலா தேவியுடனான விஞ்ஞானிகள் குழு.  அப்போது முழு சைட்டோகைன்களும் பிரச்னையை ஏற்படுத்துவதில்லை.

டி.என்.எப் ஆல்பா மற்றும் ஐ.எப்.என் காமா என்ற இரு சைட்டோகைன்களே ஆபத்தை விளைவிக்கின்றன. கொரோனாவுக்கான சிகிச்சையளிக்கும்போது,  குறிப்பிட்ட இந்த இரு வகை சைட்டோகைன்களைக் கட்டுப்படுத்தும் மருந்தினை வழங்கும்போது நோயாளிக்கு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு  காப்பாற்றப்படுவார்’ என்று கூறியுள்ளது. இந்த ஆய்வில் முக்கியப் பங்காற்றிய டாக்டர் திருமலா தேவி கன்னெங்கண்டி, தெலங்கானாவில் பிறந்தவர்.  டென்ஸீயிலுள்ள குழந்தைகள் நல ஆராய்ச்சி மருத்துவமனையில் தற்போது வேலை பார்த்து வருகிறார்.

Related Stories: