×

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி தொடரும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

* தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனை

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி தொடரும் என்று அமித்ஷா முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஓட்டலில் இரு தலைவர்களின் சந்திப்பு நடந்தது. அப்போது, இரு தரப்பினரும் சரிசமமாக தொகுதிகளை பிரித்துக் கொள்வது, கூட்டணிக் கட்சிகளுக்கு தாங்களே இடம் ஒதுக்கிக் கொள்வது என்ற புதிய பார்முலாவை உள்துறை அமைச்சர் முன் வைத்துள்ளார். பின்னர் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை வந்தார். விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பாஜ மாநில தலைவர் முருகன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல தலைவர்கள் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு அமித்ஷா சென்றார். பின்னர் மாலை 4.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘வல்லரசு நாடுகள் பாராட்டுகின்ற அளவுக்கு இந்தியா வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த முயற்சியும்தான் காரணம். நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்’’ என்று கூறினார். இதையே, துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் கூறினார். அதைத் தொடர்ந்து, ஓட்டலுக்குச் சென்ற அமித்ஷாவை, முதல்வரும், துணை முதல்வரும் சந்தித்து சுமார் 45 நிமிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது தமிழக அரசு சார்பில் 3 கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி முன் வைத்தார்.

பின்னர் இருவரும் கூட்டணி குறித்தும், தமிழக தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தினர். அமித்ஷா தரப்பில் 2 திட்டங்களை முன் வைத்துள்ளார். அதில் அதிமுகவும், பாஜவும் சரிபாதியாக அதாவது தலா 117 இடங்களை பிரித்துக் கொள்வது. அதிமுக தனியாகவே இந்த 117 இடங்களில் போட்டியிடலாம். பாஜவிடம் கொடுக்கும் 117 இடங்களில் பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுத்து விடுகிறோம். அல்லது 50 இடங்களுக்கு குறையாமல் போட்டியிட விரும்புகிறோம். அதற்கான இடங்களை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக 60 தொகுதிகளின் பட்டியல்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த இரு திட்டங்கள் குறித்து உங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துங்கள்.

விரைவில் இதற்கான தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு தேர்தல் வேலைகளை தொடங்கலாம் என்றும் அமித்ஷா கூறியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டுக்கொண்ட முதல்வர் மற்றும் துணை முதல்வர்
ஆகியோர், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தகவல் தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த சந்திப்பு முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். அதேநேரத்தில், அமித்ஷா, அதே ஓட்டலில் பாஜ மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது சிலரை மட்டும் பேச அனுமதித்தனர். அப்போது பேசிய பலரும், கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக நமக்கு வெறும் 5 தொகுதிகள்தான் ஒதுக்கின.

அதுவும் வேண்டா வெறுப்பாக ஒதுக்கியது. நம்முடைய பலத்துக்கு ஏற்ற இடங்களை கொடுக்கவில்லை. கட்சி வளர்ந்திருக்கிறது. இதனால், இந்த தேர்தலில் நாம் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட அமித்ஷா, சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜ போட்டியிடும் என்று உறுதியளித்தார். இதற்கு பாஜ நிர்வாகிகள் பலத்த கரகோஷம் எழுப்பினர். இந்த கூட்டத்துக்குப் பிறகு அந்த ஓட்டலிலேயே அமித்ஷா தங்கினார். முன்னதாக சமீபத்தில் கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்பு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, கு.க.செல்வம், கே.பி.ராமலிங்கம், முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சரவணக்குமார் ஆகியோர் அமித்ஷா முன்னிலையில் மீண்டும் கட்சியில் சேர்ந்தனர்.

அமித்ஷாவுடன் பேச ரிகர்சல் பார்த்த முதல்வர்
தொகுதிப் பங்கீடு குறித்துத்தான் அமித்ஷா பேசுவார் என்பதை அதிமுகவுக்கு ஆலோசனை கூறும் எஸ்எம்எஸ் டீம் முன் கூட்டியே முதல்வர் எடப்பாடிக்கு தெரிவித்திருந்தது. இதனால் என்ன பேச வேண்டும் என்று எஸ்எம்எஸ் டீம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அமித்ஷா 60 சீட் கேட்டு 54 இடங்கள் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்பார். அப்போது நாம் 30 இடங்கள் தருகிறோம் என்று சொல்ல வேண்டும். கடைசியில் 34 இடங்களை தருவதாக முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பின்னர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசிய முதல்வர், கூட்டணி குறித்து நான் சில திட்டங்களை வைத்துள்ளேன்.

இதனால் நானே அமித்ஷாவுடன் பேசிவிடுகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஓபிஎஸ்சும் சம்மதித்துள்ளார். அதன்படி இருவரும் சென்று அமித்ஷாவிடம் பேசினர். பேசும்போது, இரு திட்டங்களை அமித்ஷா கொடுத்துள்ளார். அதை கேட்டதும், 30 இடங்கள் தருவதாக எடப்பாடி கூறியுள்ளார். மேலும், அதிக இடங்கள் கொடுத்தால், பீகாரில் ஆளும் கட்சி பல இடங்களில் தோற்க நேர்ந்ததுபோல, இங்கு பாஜ தோற்கும். அந்த இடங்கள் எல்லாம் வீணாகும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதை கேட்டதும், பீகாரில் நாங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டதால்தான் ஆட்சியை பிடிக்க முடிந்தது. அதேபோல, தமிழகத்திலும் சில திட்டங்களை வைத்துள்ளோம். அதை செயல்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

 அமித்ஷா, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பற்றிய திட்டம் குறித்து கூறியுள்ளார். ஆனால், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக சிராக் பாஸ்வானின் கட்சி போட்டியிட்டது. இதற்கு பாஜ மறைமுகமாக வேலை செய்தது என்று கூறப்பட்டது. இந்த முடிவால், ஐக்கிய ஜனதா தளம் பல இடங்களில் தோற்றதோடு, பாஜவைவிட குறைந்த இடங்களையே பிடிக்க முடிந்தது. இப்போது முதல்வர் நிதிஷ்குமார், பாஜவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அதேபோல, தமிழகத்தில் சசிகலா விடுதலையானதும், அவரை பாஜ கையில் எடுத்து அதிமுகவுக்கு எதிராக முறைமுகமாக இறக்கிவிட்டால் நம்முடைய பாடு திண்டாட்டமாகிவிடும் என்பதை யூகித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாமே பாஜவிடம் அனுசரித்து செல்வது என்று முடிவு எடுத்து, 34 இடங்கள் தருவதாக உறுதியளித்துள்ளார்.

பின்னர் கூடுதல் சீட் குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி தெரிவிப்பதாக கூறியுள்ளார். அப்போது அமித்ஷா, விரைவாக தொகுதிகளை முடிவு செய்து ஜனவரிக்குள் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். இதனால் விரைந்து முடிவெடுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. அதிமுக 34 இடங்களையே ஒதுக்கும் பட்சத்தில், அதிமுகவை வழிக்கு கொண்டு வர அமித்ஷா வேறு சில திட்டங்களையும் வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : BJP ,AIADMK ,alliance ,elections ,Tamil Nadu Assembly ,announcement ,Edappadi ,Chief Minister , AIADMK-BJP alliance to continue in Tamil Nadu Assembly elections: Chief Minister Edappadi's announcement
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...