பீகார் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு

* சென்னையில் 84.31 ஆனது * டீசல் 76.17 ஆக அதிகரிப்பு

சேலம்: நாடு முழுவதும் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை நேற்று அதிரடியாக அதிகரிக்கப்பட்டது. சென்னையில் முறையே 84.31, 76.17க்கும், சேலத்தில் 84.73, 76.62க்கும் விற்கப்பட்டது.  சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. கொரோனா பரவல் தீவிரமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்த நேரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கான விலையை குறைக்காமல், மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்திக் கொண்டன.

 ஜூன் மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்க தொடங்கியதும், பெட்ரோல், டீசல் விலையை ஏற்றினர். செப்டம்பர் மாதத்தில் விலை குறைப்பு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டன. இதில், அந்த மாதத்தில் மட்டும் டீசல் விலை ₹2.91ம், பெட்ரோல் விலை 90 பைசாவும் குறைக்கப்பட்டது.  செப்டம்பர் 23ம் தேதியில் இருந்து பெட்ரோல் விலையையும், அக்டோபர் 2ம் தேதியில் இருந்து டீசல் விலையையும் மாற்றம் செய்யாமல் அப்படியே வைத்தனர். பீகார் சட்டமன்ற தேர்தல் எதிரொலியாக மத்திய பாஜ அரசு எடுத்த நடவடிக்கையாக கருதப்பட்டது. இதனால், கடந்த 59 நாட்களாக பெட்ரோல் விலையும், 49 நாட்களாக டீசல் விலையும் நாடு முழுவதும் மாற்றமின்றி ஒரே விலையில் நீடித்தது.

 இந்நிலையில் நேற்று நாடு முழுவதும், பெட்ரோல் 17 காசும், டீசல் 22 காசும் என விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு உயர்த்தியது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 84.14ல் இருந்து 17 காசு உயர்ந்து 84.31க்கும், ஒரு லிட்டர் டீசல் 22 காசு உயர்ந்து 76.17க்கும் விற்கப்பட்டது. இதுவே சேலத்தில், பெட்ரோல் 84.57ல் இருந்து 84.73 ஆகவும், டீசல் 76.39ல் இருந்து 76.62 ஆகவும் உயர்ந்தது.  இதுபோல் நேற்று பெட்ரோல் மும்பையில் 87.92, டெல்லியில் 81.23, பெங்களூருவில் ₹83.92 எனவும், டீசல் நேற்று மும்பையில் 77.11, டெல்லியில் 70.68, பெங்களூருவில் 74.91 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், மீண்டும் பழையபடி விலையேற்றத்தை மேற்கொண்டுள்ளனர். இது பற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சற்று ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்,’’ என்றனர்.

Related Stories: