×

மாற்றத்தை தரும் சமையற்கலை

நன்றி குங்குமம் தோழி

சமையற்கலையை நன்றாகப் படித்து  பயிற்சி பெற்றால் வெளிநாடுகளுக்குச் சென்று கப்பல் மற்றும் ஸ்டார் ஹோட்டல்களில் நல்ல வருமானத்தில் வேலை பார்க்கலாம் என்பது பலரும் தெரிவிக்கும் கருத்து. ஆனால் சமையற்கலையை கற்றுக்கொள்ள நாம் சில லட்சங்களை செலவழிக்க வேண்டுமே... என்ன செய்வது என்று யோசிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு சென்னையில் இலவச சமையற்கலை பயிற்சியைக் கொடுத்து வருகிறார் சத்துணவு நிபுணர்  திவ்யா.

இவர் தொடங்கிய ‘சாமிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேட்டரிங்’ ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மட்டும் அல்லாமல் மரபணு குறைபாடு, உயிர் சத்துக்கள் குறைபாடுள்ள சிறப்பு மாணவர்களுக்கும் இலவசமாக சமையற்கலையை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தி வருகிறது. இலவசமாக சமையற்கலையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தொடங்கி,

சிறப்புக் குழந்தைகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும்  திவ்யாவிடம் இந்த கல்லூரி தொடங்குவதற்கான விதை எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து கேட்டேன்.“நானும் என்னுடைய கணவரும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் துறையில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தோம். சென்னையில் மேற்படிப்புகளை முடித்தேன். என்னுடைய திருமணம் காதல் திருமணம். கணவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்திருந்தார்.

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் என் கணவருக்கு , அயர்லாந்தில் உள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் வேலை கிடைத்தது. எனக்கு அதே ஹோட்டலில் ஸ்பா மேனேஜ்மென்டில் மேனேஜராக வேலை கிடைத்ததும் 2008ம் ஆண்டு சென்றோம். உலகில் தலைசிறந்த பல ஸ்டார் ஹோட்டல்களிலும், உலகின் சிறந்த சமையற்கலைஞர்கள் பலருடனும் பணியாற்றினோம்.

2013ல் மீண்டும் சென்னைக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். வெளிநாட்டில் நல்ல வருமானம் கிடைத்தது. குடும்பமும் ஒரு நல்ல நிலைக்கு வந்ததுவிட்டது. இனிமேல் இங்கு இருக்க வேண்டாம். சென்னைக்கு சென்று ஏதாவது செய்ய வேண்டும். குறிப்பாக ஹோட்டல் துவங்க வேண்டும், சமையற் கல்வியை இலவசமாக ஏழை எளிய குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

சென்னை வந்ததும் அதற்கான வேலை யில் இறங்கினோம். சமையற்கலையை ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்றுதான் இந்தப் பள்ளியைத் தொடங்கினோம். ஆனால் நண்பர்கள் சிலரின் சிறப்புக் குழந்தைகளை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் மிகவும் திறமைசாலிகள், வலுவானவர்கள் என்றாலும் சொல்லிக் கொடுக்கும் எதையும் எளிதில் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

அடம் பிடித்தல், சொல் பேச்சு கேளாமை இப்படி தங்களுக்கென தனி உலகத்தில் இருந்தவர்களுக்கு நாம் ஏன் சமையற்கலையை சொல்லி கொடுக்க கூடாது என்று யோசித்தேன். சாதாரணமான மாணவர்களை கையாள்வது போல் நிச்சயம் இருக்காது என்பதையும் நான் அறிந்திருந்தேன். அவர்களுக்கென்று நல்ல பயிற்சி பெற்ற ஓர் ஆசிரியர் குழுவை அமைத்தேன்.

அவர்கள் இன்று நன்றாக பயிற்சி கொடுக்கிறார்கள். பயிற்சி பெறுவது மட்டும் இல்லாமல் எங்களுடைய ஹோட்டல்களிலும், எங்களுடன் தொடர்பில் இருக்கும் ஹோட்டல்களிலும் பகுதி நேரமாகப் பணியாற்றுகிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.
நாள் முழுவதும் சிறப்புக் குழந்தையை கவனித்துக் கொண்டே இருந்த பெற்றோர்களுக்கு எங்களுடைய பள்ளி ஆகப்பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

நம் குழந்தை வீட்டிலே முடங்கிக் கிடக்க வேண்டுமா? அவர்களுக்கு ஒரு மாற்றுப்பாதை கிடைக்காதா என்று ஏங்கிக் கிடந்த அந்த பெற்றோர்களின் சந்தோஷத்தையே எனது வெற்றியாக நான் பார்க்கிறேன். கல்லூரியில் கிடைக்கும் நேரங்களில் அவர்களுக்கு யோகா பயிற்சி, இசை, உடற்பயிற்சி போன்றவற்றை நானே கற்றுக்கொடுத்து வருகிறேன். சாதாரண மாணவர்களை விட சிறப்புக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள்.

அவர்களை பண்படுத்துவது சவாலாக இருந்தாலும் அதுவே என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. 250 மாணவர்கள் தற்போது கல்லூரியில் இருக்கிறார்கள். அவர்களில் 35 பேர் சிறப்புக் குழந்தைகள். அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைந்தபட்சம் பத்தாயிரம் பேருக்காவது இலவச பயிற்சி அளித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

எங்களுடைய இந்தப் பணியை பார்த்து தமிழகத்தின் சிறந்த சமையற் கலைஞர்களான தாமு, மல்லிகா பத்ரிநாத்,ரேவதி போன்றவர்கள் இலவசமாக வகுப்பு எடுக்க வருவதாக கூறியிருக்கிறார்கள். இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது. இங்கு படித்த சில மாணவர்கள் தற்போது வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். மாணவர்களுக்கு வெளி நாடுகளில் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

நாங்கள் படிக்கும் காலத்தில் எவ்வளவு சிரமம் இருந்தது என நாங்கள் அறிவோம். அந்த சிரமத்தை இந்த துறைக்கு வர நினைக்கும் மாணவர்கள் படக்கூடாது என்பதுதான் என்னுடைய நோக்கம். என்னுடைய இந்த முயற்சி அனைத்திற்கும் என்னுடைய கணவர் உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறார் என்பது எனக்கு இன்னொரு பலம்” என்கிறார் திவ்யா.

இக்கல்லூரியின் பயிற்சியாளர் அனிதா கூறுகையில், “சிறப்புக் குழந்தைகளுக்கு சமையற்கலை பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதே புதிய முயற்சிதான். அந்த வகையில் இந்த இடம் சிறப்பானது. ஏனெனில் சிறப்பு மாணவர்கள் ஒரு இடத்தில் நீண்டநேரம் அமர்ந்திருக்க மாட்டார்கள். அவர்களால் கத்தி போன்ற கூர்மையான பொருட்களை கவனமாக கையாள தெரியாது. அடம் பிடிப்பார்கள்.

சில மாணவர்கள் முரட்டுத்தனமாக இருப்பார்கள்.இவர்களின் உளவியல் தெரியாமல்  நிச்சயமாக என்னால் அவர்களை கையாள முடியாது. அதற்காக மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். இங்கு வரும் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் 3 நாட்கள் குழந்தைகளோடு இருப்பார்கள்.  அவர்கள் தங்களது குழந்தை யை எப்படி கையாள்கிறார்கள் என்பதை பெற்றோர்களிடமிருந்து கற்றுக்கொள்வேன்.

அவர் களுக்கு பாடப்புத்தகம் மூலம் கற்றுக்கொடுப்பதை விட பிராக்டிக்கலாக சொல்லி கொடுத்தால்தான் எளிமையாக கற்றுக்கொள்வார்கள். அதற்காக புகைப்படங்கள் மூலம் ஒவ்வோர் உணவு தயாரிப்பு முறையையும் கற்றுக்கொடுக்கிறேன். ஆரம்பத்தில் கேக், பிஸ்கெட், பன் போன்றவற்றில் தொடங்கி ஒவ்வொன்றாக கற்றுக்கொடுக்கிறேன்.

சாதாரண மாணவர்களுக்கு 3 மாதங்கள் ஆகும் என்றால் சிறப்பு மாணவர்களுக்கு 4 மாதங்கள்  ஆகும். நேரம் கிடைக்கும்போது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாட்டு, நடனம் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கிறேன். ஒவ்வொரு சிறப்பு மாணவரிடமும் ஒவ்வோர் அனுபவத்தை கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்கிறார்.

சாமிஸ் இன்ஸ்டிடியூட் குறித்து பேசிய சமையற்கலைஞர் மல்லிகா பத்ரிநாத்...“சென்னையில் பல்வேறு சமையற் கலை நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவற்றுக்கு பணம் செலவழிக்க வேண்டும். இலவசமாக மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது என்பதே பாராட்டுக்குரியது. அதிலும் சிறப்பு மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது என்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

இதுவரை யாரும் இது போன்ற ஒரு முயற்சியை எடுத்ததில்லை. இவர்கள் பணி மென்மேலும் வளர வேண்டும். நானும் அந்த மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க இருக்கிறேன்” என்றார். சமையற்கலைஞர் ரேவதி கூறுகையில், " ரொம்ப பாராட்டுக் குரிய விஷயம். சில ஆண்டுகளுக்கு முன் இரண்டு டவுன்சிண்ட்ரோம்ஸ் உள்ள குழந்தைகளுக்கு ஓர் ஆண்டு வகுப்பு எடுத்தேன்.

இரண்டு குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்தது எனக்கு சவாலாக இருந்தது. ஆனால் இங்கு இத்தனை மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது மிகப்பெரிய விஷயம். இலவசமாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து வருகிறார்கள். இதுவரை யாரும் இதை முயற்சி செய்து பார்த்ததில்லை. பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது"  என்றார்.

இக்கல்லூரியின் சிறப்பு மாணவர்களின் பெற்றோர் சிலர் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மேனகா “வீ்ட்டில் இருந்தால் பாட்டு பாடிக்கிட்டு எதையாவது தூக்கிப்போட்டு உடைச்சிடுவான். இங்க வந்த பிறகு அவனிடம் நல்ல மாற்றம் தெரிகிறது. எனக்கு ஒரு பெரிய நம்பிக்கை கிடைத்திருக்கிறது.  என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தேன்.

என்னுடைய நண்பர் ஒருவரின் மகன் இங்கு படித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் பின் நானும் என் மகனை சேர்த்தேன். இப்போது வீட்டிற்கு வந்ததும் நிறைய நோட்ஸ் எழுத தொடங்கிவிடுகிறான். நன்றாக சமைக்கிறான். ஆர்வமாக கற்றுக்கொள்கிறான்.   இங்கு வருவதற்கு முன்பு மகனை பார்த்துக்கொள்வதற்கே எனக்கு நேரம் சரியாக இருந்தது. இப்போது எனக்கு ஒரு பெரும் ஆறுதல் கிடைத்திருக்கிறது.

அவனுடைய வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது. அவனுடைய ஆர்வத்தை வளர்க்க என்னால் முடிந்த முயற்சிகளை செய்வேன். அவன் நன்றாக கற்றுக்கொண்ட பிறகு சிறிய அளவில் ஒரு பேக்கரி அமைத்துக் கொடுப்பேன்” என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். தாமரைச் செல்வி
“சில மாதங்கள் பள்ளிக்குச் சென்றான். அங்கு அவனுக்கு பிடிக்கவில்லை.

அதனால் நாங்கள் அனுப்பவில்லை. இந்தக் கல்லூரி பற்றி கேள்விப்பட்டு வந்து சேர்த்து விட்டோம். இப்போது காலையில் எழுந்தவுடன் ‘வகுப்புக்குப் போகவேண்டும், சமைக்க வேண்டும்’ என்று சொல்கி றான். அவனுக்கு இங்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  வீட்டில் இருந்தால் வெளியில் அனுப்பவே மாட்டேன். பயமாக இருக்கும்.

அவன் அருகிலேயே ஒருவர் இருக்க வேண்டிய சூழல் இருந்தது.  இப்போது அவன் தனியாக தன்னை பார்த்துக்கொள்ளும் அளவிற்கு மாறியிருக் கிறான். நன்றாக சமைக்கிறான். அன்பாக பார்த்துக்கொள்கிறார்கள். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி” என்றார்.  
ஜெயலஷ்மி‘‘இக்கல்லூரி வந்த பிறகு என் மகனிடம் நல்ல மாற்றம் தெரிகிறது.

இந்த மாதிரி குழந்தைகளை வைத்து சமையற்கலை வகுப்பு எடுப்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. எங்களுக்கு பெரும் பாரத்தை இறக்கி வைத்ததுபோல் இருக்கிறது. ஆர்வமாக பேக்கரி, ஸ்நாக்ஸ் ஐட்டம்ஸ் செய்கிறான். அவன் செய்து கொடுப்பதை சாப்பிடும் போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். என் மகனுடைய எதிர்காலம் குறித்து நாங்கள் எப்போதும் ஒரு கவலையில் இருப்போம். இப்போது எங்களுக்கு அந்தக் கவலை இல்லை.  இப்போது எல்லா குழந்தைகள் போலவே என்னுடைய மகனும் இருக்கிறான் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

-ஜெ.சதீஷ்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!