பூங்காவில் ஒரு நூலகம்

நன்றி குங்குமம் தோழி

இன்றைய இளம் தலைமுறை புத்தகம் வாசிப்பு என்றால் ஓடி மறைகிறவர்களாகவே இருக்கிறார்கள். இணையம் நம் உள்ளங்கைக்குள் உலகையே கொண்டு வந்துவிட்டது. ஸ்மார்ட்போன், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ஜி ப்ளஸ் என்று இணைய மேய்ச்சலுக்குத் தயாராக இருப்பவைகளை விடுத்து நூலைக் கையில் எடுக்கச் சொன்னால், ஓடாமல் என்ன செய்வார்கள் இளைய தலைமுறையினர்.

புத்தகம் வாசிப்பின் மகத்துவத்தை அவர்களிடம் பதிய வைப்பதற்காகவும், குட்டீஸ் முதல் அனைத்து தரப்பினரையும் வாசிக்கும் பழக்கத்தை தூண்டவும் அமைதியாய், அழகாய், ஆர்ப்பாட்டமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது ‘சைலண்ட் ரீடிங்’ வாசிப்புப் பழக்கம், சென்னையில் உள்ள அண்ணா நகர் டவர் பார்க்கில்.

அமைதியும் ரம்மியமும் சூழ்ந்த அதிகாலைப் பொழுதில், நடைப்பயிற்சியின் ஊடே, சுற்றி அடர்ந்த மரங்களுக்கும் நடுவே குழுவாய் அமர்ந்து குட்டீஸ்களோடு, சில இளைஞர் பட்டாளங்களும், நடுத்தர வயதினரும் இணைய, அமைதியான முறையில் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றனர். அருகே இருந்த அகன்ற விரிப்பில் புத்தகங்கள் ரசிக்கும் விதமாய் பரப்பப்பட்டிருந்தது.

அருகில் உள்ள் மரம் ஒன்றில் தொங்கும் பதாகையில் ‘சைலன்ட் ரீடிங்’, ‘புரொமோட் ரீடிங் இன் நேட்ச்சர்’ என்ற வாசகம் நம்மை வரவேற்க, களத்தில் இறங்கியபோது நம்மிடம் மிகவும் அமைதியாகப் பேசத் துவங்கினர் ஸ்வேதா-மெய்யழகன் தம்பதியினர்.“ஒவ்வொரு மனிதனுக்கும் கற்பனை என்பது அவசியமானது. அதைக் கொடுக்கக் கூடியது, எழுத்து வடிவில் நாம் படிக்கும் புனைவுகள்தான்.

‘கண்டதையும் கற்க பண்டிதனாவான்’ என்பது பழமொழி. படிப்பு என்றவுடன் பெற்றோர் நினைப்பது பள்ளிப் பாடங்களை மட்டுமே. பாடம் தவிர்த்த பிற நூல்களையும், பிள்ளைகளுக்கு வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். கவிதைகள், கதைகள், புதினங்கள், வரலாற்றுப் புத்தகங்கள், ஆய்வு நூல்கள் என்று தமிழில் அறிவுச் சுரங்கள் பரந்து விரிந்து ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றை குழந்தைகளுக்கும், நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்” என்று கோரிக்கை வைக்கிறார்கள்.“வாசிப்புப் பழக்கத்தை வளரும் பருவத்தினரில் இருந்து பரவலாக கொண்டு செல்லும் நோக்கில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 முதல் 8 வரை இந்த இடத்தில் கூடி ‘சைலன்ட் ரீடிங்’ பழக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் படிக்கும் புத்தகங்களை இங்கே கொண்டு வந்து பரப்பிவிடுவோம். அது தவிர்த்து அவரவர் விரும்பும் புத்தகங்களையும் அவர்களே கொண்டு வந்தும் இணைந்து படிக்கலாம். ஒரு மணி நேரம் வாசிப்பிற்குப் பிறகு அவரவர் படித்தது குறித்த கலந்துரையாடல் இருக்கும்.

தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி ஓரிரு வரிகள் பேசுவார்கள்” என்றவர்களிடம், எப்படி இந்த எண்ணம் உதித்தது என்ற நம் கேள்விக்கு முன்வந்து பேசத் துவங்கினார் ஸ்வேதா.“இது என்னோட லட்சியம். எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு கனவு திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டே இருக்கும். அமைதியான ஒரு பெரிய இடத்தில் நான் அமர்ந்திருக்க, நானிருக்கும் அந்த இடத்திற்கு நிறைய பேர் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப்பார்கள்.

நான் கண்ட அக்கனவு இப்போது மெய்ப்பட்டிருக்கிறது. சின்ன வயதில் இருந்தே நிறைய புத்தகங்கள் படிப்பேன். அப்பா எனக்கு நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருப்பார். கல்லூரியில் பி.காம். காமர்ஸ் மெயின் எடுத்து படித்தேன். பிறகு மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க் முடித்தேன். ஆனால் வாசிப்பில் இருந்த ஆர்வத்தால் நூலகம் ஒன்றை துவங்க முடிவு செய்தேன்.

பெற்றோர்களும் பச்சைக் கொடி காட்ட, நூலகம் தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கி விட்டேன். யாரெல்லாம் இத்துறையில் இருக்கிறார்கள், எப்படி இயக்குகிறார்கள், நூலகம் தொடர்பான மென்பொருட்கள் என்ன, எந்த புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் இந்தத் துறையில் அதிகம் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்களை விரல் நுணியில் சேகரிக்கத் துவங்கினேன்.

தொடர்ந்து நண்பர்களோடு இணைந்து ஆலோசனை செய்தேன். இறுதியாக இடத்தை தேர்வு செய்து நூலகத்தை தொடங்கியே விட்டேன். ஆனால் இதை எப்படிப் புரோமோட் செய்வது என யோசித்தபோது, முதலில் சமூக வலைத்தளங்கள் கை கொடுத்தன. வார இறுதியில் நாளிதழ்ளில் விளம்பரமும் கொடுக்கத் தொடங்கினேன்.அப்போது முகநூலில் ஒரு குழு மெரீனா கடற்கரையில் புத்தக விமர்சனம் செய்வதாக தகவல் பகிரப்பட்டு இருந்தது.

நண்பர்களுக்கும் அது ஒரு கெட் டூ கெதராக இருக்கும், புத்தகம் படித்த மாதிரியும் இருக்கும். நல்ல விசயமாக உள்ளதே என நினைத்தேன். என் நூலகம் இடம்பெற்றுள்ள அண்ணா நகருக்கு அருகில் உள்ள இடமாக யோசித்தபோது டவர் பார்க் நினைவுக்கு வந்தது. அங்குதான் மக்கள் கூட்டமாக நடை பயிற்சி, யோகா, தியானம் என ஈடுபடுவார்கள். குழந்தைகளும், இளைஞர் படையும் விளையாட்டு, வேடிக்கை என சுற்றி வருவார்கள்.

எனவே அந்த இடத்தில் அதிகாலை நேரத்தை தேர்வு செய்தேன். துவக்கத்தில் மூன்று முதல் நான்கு நபர்களைக் கொண்டு வாசிப்பையும், உரையாடலையும் துவங்கினேன். மரத்தில் பேனர் ஒன்றைத் தொங்கவைத்து விட்டு, எனது நூலகத்திலிருந்து கொண்டு வந்த புத்தகங்களை காட்சிக்கு வைத்து விடுவேன்.

விரும்பி புத்தகத்தை தேர்வு செய்யும் வாசகர்கள், அருகே விரித்துள்ள விரிப்பில் குழுவாகவும், வட்டமாகவும் அமர்ந்து அவரவர் தேர்வு செய்ததை வாசிக்கத் தொடங்குவார்கள். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படித்தவற்றைப் பற்றி பேசத் தொடங்குவார்கள். பூங்காவிற்கு வருகிறவர்கள், நண்பர்கள் மூலமாக, எனது சைலன்ட் ரீடிங் கான்செப்ட் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவத் துவங்கி, வாசிப்போரின் வருகை சற்றே அதிகரித்தது.

குழந்தைகள், இளம் வயதினர், நடுத்தர மற்றும் வயதானவர்கள் என எல்லாத் தரப்பு மக்களும் வரத் தொடங்கினார்கள். அருகில் வசிப்பவர் தவிர்த்து மைலாப்பூர், அடையார், தாம்பரம் போன்ற இடங்களில் இருந்தெல்லாம் கேள்விப்பட்டு வரத் தொடங்கினார்கள். முதல் நாள் படிப்பதைப் பார்ப்பார்கள். இரண்டாவது நாள் விசாரிப்பார்கள். மூன்றாவது நாள் அவர்களும் குழுவில் இணைவார்கள்.

தொடர்ந்து புத்தகத்தை வாங்க முயற்சிக்கவும் செய்கிறார்கள். வருகை தருபவர்களின் வாசிக்கும் ஆர்வத்தைப் பார்த்து, கதை, இயற்கை, ஆரோக்கியம், புவியியல், வரலாறு, ஆராய்ச்சி நூல்கள் என எதையாவது ஒரு தலைப்பைக் கொண்டு தீம் செட் செய்யத் துவங்கினேன். இரண்டு நாட்களுக்கு முன்பே முகநூல், வாட்ஸ்ஆப் வழியாக வாசகர்களுக்கு தீம் குறித்த தகவல் அனுப்பிவிடுவேன்.

வாசிக்கும் நேரம் முடிந்து, படித்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழும்போது, ஒருவர் படித்த புத்தகம் ஏதோ ஒரு வகையில் இன்னொருவர் படித்த புத்தகத்தோடு தொடர்புடையதாக இருக்கும் சுவராஸ்யமும் அவ்வப்போது நிகழும். குழந்தைகளைக் கவரும் வண்ண வண்ணப் படங்களோடு கூடிய கதைப் புத்தகங்களுக்கும் இதில் இடம் உண்டு. குழந்தைகளுக்கு தனியே கதைப் பிரிவும் உண்டு.

கதையில் வரும் பாத்திரங்களை வண்ணம் தீட்ட வைப்போம். அதில் வரும் உருவங்களை அவர்களே பொம்மையாகச் செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். இந்த சைலன்ட் ரீடிங் குழுவின் 50 வது நாள், 100 வது நாட்களையும் கொண்டாடினோம். தொடர்ச்சியாக புத்தகங்களை வாசிப்பவர்கள், ஆர்வம் மேலிட, புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க எனது நூலகத்திலே உறுப்பினராகி விடுகிறார்கள்.

உறுப்பினரானதும் தேவையான புத்தகத்தை வீட்டிற்கே கொண்டு சென்று படிக்கலாம். இதற்கென முன்வைப்புத் தொகை, புத்தகத்தின் விலையைப் பொறுத்து வாடகை போன்றவையும் உண்டு. புத்தகத்தின் பாதுகாப்பிற்காகவும், பராமரிப்பிற்காகவும் மிகக் குறைவாகவே பெறப்படுகிறது. இதுவரை 250 நபர்கள் நூலகத்தில் உறுப்பினராகியுள்ளனர். எல்லா விதமான புத்தகங்களும்  எங்களிடம் கிடைக்கும்.

இவை தவிர்த்து தேவைப்படும் புத்தகத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டால், நானே அந்தப் புத்தகத்தை பதிப்பாளர்கள், சப்ளையர்களிடம் கேட்டு பெற்றுத் தருகிறோம். நம்மிடம் புத்தகத்தைத் தேடி வருகிறவர்களின் விருப்பம் அறிந்து அவர்களுக்கான புத்தகத்தைத் தருவதுதான் நூலகத்தின் வெற்றி. எனது நூலகத்திற்கு குழந்தைகள் அதிகம் வரத் துவங்கியுள்ளனர். ஃபிக்ஷன், நான்-ஃபிக்ஷன் புத்தகங்களும் ஏராளம் என்னிடம் உண்டு.

குழந்தைக்கான கதைகள் அவர்களின் உலகத்திற்கு ஏற்றவாறு இருக்கும். மரத்தைப் பற்றி, விலங்குகள் பற்றி, பறவைகள் பற்றி என எதைப்பற்றிய கதையாக இருந்தாலும் கண்டிப்பாக அதில் தகவல் இருக்கும். கதையில்தான் எல்லா விசயங்களும் பரவிக் கிடக்கும். ஒரு குழந்தை முதல் நாள் வரும்போது குழந்தையின் புத்தகத் தேர்வு எப்படி இருந்தது.

தொடர்ந்து வந்த பிறகு அந்தக் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, எது மாதிரியான புத்தகத்தை அவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதைக் கணித்து விடுவேன். புத்தகத்தை தேர்வு செய்யும்போதே குழந்தைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் முடியும். சில பெற்றோர்களே குழந்தையை தேர்வு செய்ய விடுவார்கள். சிலர் ‘இதைப் படி அதைப் படி’ என தங்கள் விருப்பத்தை குழந்தை மீது திணிப்பார்கள்.

பெற்றோர் திணிக்கும் புத்தகத்தை கண்டிப்பாக குழந்தைகள் படிக்கவே மாட்டார்கள். குழந்தைகளே புத்தகத்தை தேர்வு செய்வதே நல்லது. புத்தகத் தேர்வில், குழந்தைகள் எப்போதும் ஓவியருக்கே முக்கியத்துவம் தருவார்கள். நாம் புத்தகத்தில் எழுத்தாளர்களை மட்டுமே முன்னிறுத்துவோம். இல்லஸ்ட்ரேட்டர்களைப் பற்றிப் பேசுவதில்லை.

அதிகமான காட்சிகளுடன், வண்ணங்கள் நிறைந்த புத்தகம்தான் குழந்தைகளை அதிகம் கவரும். ஓவியர்கள், குழந்தைகளுக்காக விவசாயத்தைப் பற்றிக்கூட  வரைந்த படங்கள் மூலம் பேசி இருப்பார்கள்” என முடித்தார். அவரைத் தொடர்ந்து அவரின் கணவர் மெய்யழகன் நம்மிடம் பேசத் துவங்கினார். “மென்பொருள் துறையில் இருக்கிறேன்.. எங்களது காதல் திருமணம்.

அவள் புத்தகங்களைக் காதலிப்பது ஸ்வேதாவை கரம்பிடித்ததற்கான காரணங்களில் ஒன்று. திருமணம்வரை அவ்வளவாக எனக்கு வாசிப்பு பழக்கமில்லை. ஸ்வேதாவின் அறிமுகத்திற்குப் பின் புத்தகப் புழுவாக மாறியுள்ளேன். இரண்டு பேரும் ஒரே துறையில் பயணிக்காமல் வேறு வேறு துறையில் இருந்தாலும் நான் ஸ்வேதா நடத்தும் நூலகத்திற்கான ஆலோசனைகளையும் கொடுக்கத் துவங்கினேன்.

படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட பல வழிகளை இணைந்து யோசித்தோம். இப்போது எனக்கு நிறைய புத்தகங்களின் வகை, அதன் சுவை தெரியும். டெக்னிக்கல் ரீடிங், கின்டில் இதெல்லாம் அந்த உணர்வை நிச்சயமாகத் தருவதில்லை. புத்தகத்தை நேரடியாக காகிதத்தில் வாசிப்பதில்தான் ஓர்அனுபவம் கிடைக்கிறது என உணர்ந்தேன். மொத்தமாகப் புத்தகங்கள் குவிந்து கிடக்கும்போது நமக்கு பெரிய ஆர்வம் வராது.

அதையே நாம் பிரித்துப் பிரித்து வைத்தால் சிறப்பாக இருக்கும் எனவும் யோசித்தேன். தற்போதைய தலைமுறையினர் காட்சி வடிவில் கண்ணுக்குத் தெரிவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த வகையில் தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி புகைப்படத்துடன் இணைத்து இணையத்தில் பதிவேற்றுகிறோம். ‘த்ரீ சிக்ஸ்டி பைவ் டேஸ் சேலன்ஜ்’ (365 நாள்) எனும் திட்டம் அது.

தினம் ஒரு புத்தகம் என்ற நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகத்தை முன்னிலைப்படுத்தி, அதில் இருக்கும் தகவல் சார்ந்து, படத்தை உருவாக்கி, புத்தகத்தில் என்ன மாதிரியான விசயங்கள் முக்கியமானதாக உள்ளதோ அதையெல்லாம் அந்த படத்திற்குள் வருகிற மாதிரி தயார் செய்து, புத்தகத்தின் முகப்பையும் படத்திற்குள் கொண்டு வந்துவிடுவேன்.

ஒரு சில சுருக்கமான விளக்கம் கீழே இடம்பெறும். நூலாசிரியர், வெளியீட்டாளர், விலை, முகவரி எல்லாத் தகவலையும் கொடுத்து, முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் என அனைத்திலும் பதிவேற்றிவிடுவேன். உதாரணத்திற்கு, கி.ராஜ நாராயணன் எழுதிய புகழ்பெற்ற நூலான ‘கோபல்லபுரத்து மக்கள்’ நூலிற்கு கிராமத்து சூழல், வீடு, வயல் வெளி, கால்நடை என எல்லாமும் அந்தப் படத்தில் இருக்கும்.

அதன் அட்டை முகப்பை வைத்து, புத்தகம் தரும் செய்தியை காண்போருக்கு உணர்த்தி விடுவேன். படத்தோடு பார்க்கும்போது படிக்கும் ஆர்வத்தை  படம் தூண்டும்.. இதுவரை 110 புத்தகங்கள் வரை போஸ்ட் செய்துள்ளோம். எனக்கு போட்டோகிராஃபியில் நிறையவே ஆர்வம். புகைப்படம் எடுத்து, எடிட் செய்து கிரியேட்டிவாக புத்தகத்தைப் பற்றிய செய்தியை உருவாக்கி பதிவேற்றும்போது,

அதைப் பார்க்கும் பலரும் புத்தகத்தைப் பற்றி பேசுகிறார்கள், கேட்கிறார்கள்’’ என முடித்தார். வாசிப்பு நம் வாழ்க்கையின் அங்கமாக மாற வேண்டுமானால், நம்மைச் சுற்றிப் புத்தகங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கல்லை உளி கொண்டு செதுக்கி செதுக்கி அழகிய சிற்பமாய் மாற்றுவதைப் போல், வாசிக்க வாசிக்க புத்தகங்கள் நம்மை அறிவுள்ள, பண்புள்ள மனிதனாக மாற்றும் வித்தையினைச் செய்யும்.                      

-மகேஸ்வரி

Related Stories: