வெற்றிக்களத்தில் 6 வயது விஸ்வேஸ்வரன்

நன்றி குங்குமம் தோழி

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த 6 வயது விஸ்வேஸ்வரன் ஓட்டப்பந்தயத்தில் 2 உலக சாதனை படைத்து சாதித்துள்ளார். விசு, விஜயலட்சுமி தம்பதியின் மகன் விஸ்வேஸ்வரன். வீட்டிலே பயிற்சி பெற்று இத்தகைய சாதனையை விஸ்வேஸ்வரன் படைத்தது  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு போட்டிகளில் விஸ்வேஸ்வரன் கலந்து கொண்டு வருகிறார். 1 கிலோ  மீட்டர் தூரத்தை பின்நோக்கி ஓடி 14 நிமிடங்களில் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார்.

மேலும், 2 ஆண்டுகளில் 56 மாரத்தான் போட்டிகளில் பங்கு பெற்ற 6 வயது சிறுவன் என்கிற முதல் உலக சாதனையும், டிரட்மில்லில் 13 கிலோ  மீட்டர்  வேகத்தில் 6.5 கிலோ மீட்டர் தூரத்தை அரை மணி நேரத்தில் கடந்த மற்றொரு உலக சாதனையும் படைத்துள்ளார். கூடிய விரைவில்  ஒலிம்பிக்கிலும், கின்னஸ் சாதனையிலும் தனது பெயர் இடம் பிடிக்க வேண்டும் என்கின்ற உத்வேகத்தோடு இயங்கி வரும் மழலை சாதனையாளர்  விஸ்வேஸ்வரனிடம் பேசினேன்.

“எனக்கு  உசேன் போல்ட் ரொம்ப பிடிக்கும். அவருடைய வீடியோ நிறைய பார்த்திருக்கிறேன். அவரைப் போல் கோல்டு மெடல் வாங்கணும்னு எனக்கு  ரொம்ப ஆசை” என்று மழலை மொழியில் பேசத்தொடங்கினார். “ரன்னிங்கில் 2 உலக சாதனை பண்ணியிருக்கேன். இதுவரைக்கும் 45 பதக்கங்கள்  வாங்கி இருக்கேன். சீக்கிரமாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கிட்டு தங்கப் பதக்கம் வாங்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. அதுக்காக தினமும்  பிராக்டிஸ் பண்ணிட்டு வர்றேன்” என்கிறார் மழலைமொழி பேசும் விஸ்வேஸ்வரன்.

விஸ்வேஸ்வரனின் தந்தை விசு கூறுகையில்... “விஸ்வேஸ்வரனுக்கு மூன்று வயது இருக்கும் போது எங்களுடைய சொந்த ஊரான கடலூருக்கு  விடுமுறைக்கு சென்றிருந்தோம். அங்கு நடைபெற்ற ஒரு போட்டியில் அரை கிலோ மீட்டர் தூரம் ஓட்டப் பந்தயத்தில் 3 வயது முதல் 7 வயது  குழந்தைகள் கலந்து கொண்டனர். அதில் 3 வயது சிறுவனாக  களந்துகொண்டு விஸ்வேஸ்வரன் மூன்றாம் பரிசு பெற்றான்.  அந்த நிகழ்வே எங்களுக்கு  வியப்பாக இருந்தது. அதிலிருந்துதான் ஓட்டப்பந்தயத்தில் அவனுக்கு இருந்த ஆர்வத்தை புரிந்து கொண்டேன்.

அதன் பிறகு ஒவ்வொரு மாரத்தான் போட்டிக்கும் அழைத்து செல்வேன். கலந்து கொண்டு ஓடினான். 2017ம் ஆண்டு போரூரில் அல்ட்ரா ரன் என்கிற  போட்டி நடந்தது. தினமும் 3 கிலோ மீட்டர் ஓடி 30 நாட்களில் 100 கிலோ மீட்டர் முடிக்க வேண்டும். இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தினமும்  காலை 3 கிலோ மீட்டர் ஓடினான். அவனுடன் என்னால் ஈடு கொடுத்து ஓட முடியவில்லை. அதன் பிறகு டிரட்மில் வாங்கி கொடுத்து யூடியூப் மூலம்  பார்த்து அவனுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன்.

தி நகரில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் 10 நிமிடங்கள் டிரட்மில்லில் தொடர்ந்து ஓடினால் 500 ரூபாய்க்கு எங்களது கடையில் நீங்கள்  ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். அதில் கலந்து கொண்ட பெரியவர்கள், இளைஞர்கள் பலரும் பின்வாங்க 10 நிமிடங்கள் தொடர்ந்து ஓடி  வெற்றி பெற்றான். எங்களால் மறக்கவே முடியாத நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. அவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். பின்நோக்கி  ஓடும் போட்டியில் கலந்து கொள்ள வைத்தேன்.  அதில் 1 கிலோ மீட்டர் தூரத்தை 14 நிமிடங்களில் கடந்து இந்திய அளவில் முதல் சாதனை  படைத்தான்.

அதன் பிறகு டிரட்மில்லில் அரை மணிநேரத்தில் 6.5 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து உலக சாதனையும், 2 ஆண்டில் 54 மாரத்தான் போட்டிகளில்  கலந்து கொண்ட முதல் சிறுவன் என்கிற அடுத்த உலக சாதனையும் படைத்தான். இந்த உலக சாதனை விருதை ‘கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’  நிறுவனம் ஆய்வு செய்து வழங்கியது. விஸ்வேஸ்வரன் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறான். அதற்கான  முயற்சியை எடுத்து வருகிறேன்.  

ஆனால் அவனுக்கு முறையான பயிற்சி கொடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவனுடைய திறமையால் கின்னஸ் சாதனையும் படைப்பான்  என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. விளையாட்டில் தீவிரமாக இருப்பதால் படிப்பில் சுமாராகத்தான் இருப்பான் என்று நினைத்தேன். ஆனால் முழு  கவனத்தோடு படித்து நல்ல மதிப்பெண் எடுத்து வருகிறான். அவனுடைய திறமைக்கான பயிற்சியை அளித்து அவனது லட்சியத்தை எப்பாடுபட்டாவது  நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய லட்சியமாக மாறியிருக்கிறது. அதற்கான முயற்சி செய்து வருகிறேன்” என்கிறார் விசு.

ஜெ.சதீஷ்

Related Stories: