செய்திகள் வாசிப்பது: ஒரு லைவ் ரிப்போர்ட்...

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

அதிகாலை தேநீர் கோப்பையோடு ஹாயாக அமர்ந்து செய்திகளை பார்ப்பது சுவாரஸ்யம்தான். பொழுது விடிந்ததுமே கிடைக்கும் அந்த உன்னத  உணர்வை நம் வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு எப்படி இயங்குகிறது என்பதை அறிய, சன்  தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்திப் பிரிவுக்குள் அதிகாலை விசிட்  அடித்தபோது… பரபரப்புக்கு நடுவே இயங்கிக் கொண்டிருந்தது மிகப்பெரிய  டீமான செய்தி  க்ரூ. அவர்களின் நேரலை செய்திக்கு நடுவே நட்புக்கரம் நீட்டி வரவேற்றனர்...

புரொடக் ஷன் கன்ட்ரோல் அறையின்(PCR) மிக அகன்ற திரை 7..6..5..4..3..2..1.. என நொடிகள் குறைந்து கொண்டே வர.. கேமரா ரோல் ஆன்... க்யூ என  கட்டளைகள் பறக்க… செய்தி ஸ்டுடியோவிற்குள் இருக்கும் கேமரா சுழலும் அதே வேளையில், கணிப்பொறித் திரையில் உலக உருண்டையும்  இணைந்து சுற்றிச் சுழல செய்திகள் வாசிப்பது உங்கள் விசித்திரா மற்றும் செம்மலர் என பரபரப்புடன் அன்றைய செய்தியை வழங்கத் தொடங்கினர்  செய்திப் பிரிவினர்.

முதன் முதலில் தூர்தர்ஷன் மட்டுமே செய்தியினை வழங்கிக் கொண்டிருந்த  நிலையில், அதைத் தொடர்ந்து உதயமானதே சன் தொலைக்காட்சி.  ‘இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக...’ என்ற தாரக மந்திரத்துடன் களமிறங்கி, தமிழகம் மட்டுமல்ல  தென்தமிழகத்தின்அனைத்து மொழிகளிலும் செய்தி அலைவரிசையை கொண்டு வந்து சேர்த்த பெருமை சன் தொலைக்காட்சியினையே சேரும்.  முன்பெல்லாம் செய்தியைப் பெறுதல் என்பது துப்பறிதலுக்குச் சமம். இணையங்களின் வரவால் அந்த நிலை இன்று நிறையவே மாறியுள்ளது.

தொழில் நுட்பங்களின் வளர்ச்சி, ஊடகங்களின் வளர்ச்சி போன்ற காரணங்களால் எங்கோ ஓர் மூலையில், உலகத்தின் கடைக்கோடியில் நடக்கும்  நிகழ்வுகூட, கையடக்க கைபேசிக்குள் அடுத்த நொடியே வந்து சேரும் நிலைக்கு இன்றைய தகவல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.  தொழில்நுட்பம் என்ற மையப் புள்ளிக்குள் உலகமே கூரையாய் இயங்கி தகவல் புரட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், செய்தியினை மக்களிடம்  கொண்டு சேர்க்கும் பணி என்பது தனி நபர் சார்ந்தது அல்ல, பலரின் கூட்டு முயற்சி என்பதையே செய்திப் பிரிவினர் நமக்கு உணர்த்தினர்.

நியூஸ் பூல், எடிட்டர், சப் எடிட்டர், இன்புட், அவுட்புட், எடிட்டர்ஸ், ரிப்போர்ட்டர்ஸ், டிக்கர் பிரிவு, நியூஸ் ரீடர்ஸ், கேமராமேன், பி.சி.ஆர். மற்றும் எம்.சி.ஆர்., டெக்னிக்கல் புரொடியூசர்ஸ், நியூஸ் புரொடியூசர்ஸ், விஷூவல் எடிட்டர்ஸ், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், ஓ.பி நியூஸ் என ஒரு செய்தி நம்  வீட்டு வரவேற்பறையை வந்தடைய பலர் இதில் இருக்கிறார்கள். நேரலை செய்தி தொடர்பான தொழில்நுட்பம் சார்ந்த சில விசயங்களை நம்மிடம்  பகிர்ந்துகொண்டார் அத்துறை சார்ந்த இம்ரான்கான். காட்சி ஊடகத்தின் முக்கியமான நுழைவுவாயில் என்றால் அது ‘நியூஸ் பூல்’.

அதாவது செய்திக்கு ஆதாரமாய் விளங்கும் காட்சிகள்(visuals) மொத்தமாய் குவியும் இடம். லோக்கல் ஏரியாக்கள், மாவட்ட, மாநில அளவில்,  இந்திய அளவில் நிகழும் செய்திகள், உலகச் செய்திகள் என அத்தனைக்குமான விஷூவல்ஸ் நியூஸ் பூல் ஏரியாவின் மானிட்டரை முதலில்  வந்தடைகிறது. அங்கிருந்து செய்திக்கு ஏற்ப காட்சி அமைப்புகளை விஷூவல் எடிட்டர்ஸ் சரி செய்த பிறகே பி.சி.ஆர். வழியே, செய்திக்கான விஷூ  வல்ஸ் பார்வையாளரைச் சென்றடையும். உலகச் செய்திகள் மற்றும் இந்தியாவுக்குள் நிகழும் செய்திகளுக்கான விஷூவல்ஸ் அனைத்தும் ராய்டர்ஸ்,  ஏ.பி.டி.என், ஏ.என்.ஐ. மூலமாக பெறப்படுகிறது.

மாவட்டச் செய்திகளை அந்தந்த மாவட்ட செய்தியாளர்கள் சேகரித்து இணையம் மூலமாக எஃப்.டி.பி.(File transfer protocol) வழியே  சேனலின் ஐ.பி. முகவரிக்கு காட்சிகளை அப்லோட் செய்துவிடுவார்கள். கேமராமேன் மூலம் கேமராவில் பதிவான, லோக்கல் ஏரியா செய்திக்கான  காட்சிகள் நேரடியாக சேனலுக்கு வந்து சேரும். இவை தவிர்த்து பார்லிமென்ட் செய்திகள், கிரிக்கெட் செய்திகளை செட்டாப் பாக்ஸ் மூலமாக பதிவு  செய்து கர்டஸி கார்டுடன் பயன்படுத்தப்படுகிறது. இப்போதைய லேட்டஸ்ட் டிரண்ட் வாட்ஸ் அப். உடனடியாக செய்தியின் சாரத்தை சுருக்கமாய்  உடனே மக்களிடம் தெரிவிக்க, வாட்ஸ்அப் மூலம் விஷூவல் பெறப்பட்டு பார்வையாளருக்கு செய்தியின் சுருக்கம் விரைவாய் காட்டப்படுகிறது.

இது தவிர சில நேரலைச் செய்திகளை களத்தில் இருந்து கொடுப்பதற்காக ‘லைவ் யு பேக்’ கிட் ஒன்று செய்தி சேகரிப்பவரிடம் இருக்கும். செய்தி  நேரலை செய்யும் நேரத்தில், கேமராவில் எடுக்கப்படும் விஷுவல்ஸ், லைவ் யு பேக்கில் கிட் வழியாக டிரான்ஸ்பராகி நம் தொலைக்காட்சி  இணையத்தில் இருக்கும் சர்வரோடு இணைக்கப்பட்டு  நியூஸ்பூல் வந்தடையும். யார் விஷூவலை அப்லோடு செய்கிறார்கள், எந்த ஏரியாவில் இருந்து  செய்தி வருகிறது என எல்லாத் தகவலும் அதில் இடம் பெறும். செய்தியின் முக்கியத்துவம் கருதி சில செய்திகளை ஓ.பி.வேன் (Outdoor Broad  casting) மூலமாக களத்தில் இருந்து ரிப்போர்ட்டரும், கேமரா மேனும் வழங்குவார்கள்.

ஓ.பி.வேன்கேரியர் மூலமாக கேப்சர் செய்யப்படும் காட்சிகள், வயர்லெஸ் ப்ரிகொயன்சி முறையில் சேட்டிலைட் வழியே நேரலைக் காட்சியாய்  சேனலில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஓ.பி. வேனில் இருந்து அப்லிங்க் முறையில் செய்தி ஏற்றப்பட்டு, அது சேனலில் டவுன் லிங்க் செய்யப்படுகிறது.  செய்தி ஊடகத் துறையில் 35 ஆண்டு களைக் கடந்து பணியில் இருக்கும் தலைமைச் செய்தியாளர் ராமசெல்வராஜ் நேரலை குறித்த தகவல்களை  நம்மிடம் பகிர்ந்து கொண்டார் “செய்தியின் வடிவம் துவக்கத்தில் தெருக்கூத்து, நாடகம், சினிமா என்றிருந்த நிலை மாறி இப்போது தொலைக்காட்சி,  இணையத் தளம் எனத் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டே முன்னேறுகிறது.

செய்திக்கான போட்டிக் களம் வெவ்வேறு வடிவமாக இருந்தாலும் இப்போதைய போட்டி தொலைக்காட்சி மற்றும் இணையத் தளம் சார்ந்தே உள்ளது.  எந்த அளவிற்குத் தகவல் தொடர்பு வளர்ந்துள்ளதோ அந்த அளவிற்கு செய்திகளை முந்தித் தருவது என்பதிலும் மிகப் பெரும் போட்டி இருக்கிறது.  தொலைக்காட்சி வந்த புதிதில் செய்தி புல்லட்டின் என்பது குறிப்பிட்ட நேரத்திற்கு 6, 8, 10, 12 மணி என இருக்கும். செய்திக்கான ஒரு ரன் டவுன் 22  நிமிடம் என்றால் அதில் குறைந்தது 20 செய்திகள் விரிவாகப் பார்க்க முடியும். ஒரு புல்லட்டின் முடிந்ததும் திரும்ப அதே செய்தியே அடுத்த  புல்லட்டின் தயாராகும் வரை ஒளிபரப்பும் நிலையே இருந்தது. ஆனால் இப்போதையநிலை வேறு.

செய்திகளை 24 மணி நேரமும் நேரலை செய்து கொண்டே இருக்கிறார்கள். தொழில் நுட்பங்களின் வளர்ச்சியால் அனைத்து இடங்களிலும் நடக்கும்  செய்திகள் காட்சிகளாக உடனுக்குடன் கிடைத்து விடுகிறது. செய்திகளை ரெக்கார்டு செய்து, காத்திருந்து பெற்று ஒளிபரப்புச் செய்த நிலை மாறி  இப்போதைய டிரண்ட் அனைத்துமே லைவ் என்கிற நிலையில், காட்சியோடு செய்திகளையும் நிகழும் இடத்தில் இருந்தே நேரலை செய்யுமளவிற்கு  உலகம் டிஜிட்டல்மயமாகி உள்ளது.அதிகாலை 6 மணிக்கு துவங்கும் நேரலை இரவு 10 மணி வரை பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. செய்தியைத்  தொடர்ந்து, டாக் ஷோக்கள், விவாதங்களைக்கூட நேரலையாகக் காட்டும் அளவிற்கு டெக்னாலஜி ரொம்பவே முன்னேற்றம்.

மக்களின் ரசனையும் நிறையவே மாறியுள்ளது. ஒரு செய்திக்கான ஸ்கிரிப்ட்டை சப்-எடிட்டர்ஸ் தயார் செய்ய, அந்தச் செய்தி முதன்மை எடிட்டரின்  பார்வைக்குப் பின் மாற்றங்கள் தவறுகள் சரி செய்யப்பட்டு, செய்தி உள்ளீட்டுப் பிரிவான இன்புட் எடிட்டரை வந்தடையும். செய்தியின் சாரத்தைப்  பொறுத்து இன்புட் எடிட்டர் அந்த நேரத்திற்கான செய்திப் பிரிவின் ரன் டவுனில் அச்செய்தியை இணைப்பார். அதைத் தொடர்ந்து செய்தி வெளியீட்டுப்  பிரிவைச் சேர்ந்த அவுட்புட் எடிட்டர் மூலமாக ஓ.கே. செய்யப்படும் செய்திகள், காட்சிகளோடு இணைக்கப்பட்டு தயாராகி புரொடக் ஷன் கன்ட்ரோல்  அறையினை வந்து சேரும்.

பல்வேறு இடங்களில் நடைபெறும் செய்திகளைப் பார்வையாளர்கள் உடனே அறிய, அச்செய்தியைச் சேகரித்த ஏரியா ரிப்போர்ட்டர் மூலமாக செய்தியின்  சுருக்கம் பெறப்பட்டு, நேரலைக்குக் கீழே இடம் பெரும் டிக்கரில் ஸ்க்ரோலிங் செய்யப்படும். செய்தியின் முக்கியத்தைப் பொறுத்து சில செய்திகள்  உடனே ப்ளாஷ் செய்தியாகவும் மாறலாம். செய்தி ஸ்கேரோலிங்கில் ரோல் ஆகிக்கொண்டிருக்கும்போதே பத்து செகண்டிற்கான விஷூவல் வாட்ஸ் ஆப்  வழியாக பெறப்பட்டு முதன்மைத் தகவலாக பார்வையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுவிடும். இடைப்பட்ட நேரத்தில், குறிப்பிட்ட செய்தியின் சேகரிப்பாளர்  அவர் சேகரித்த காட்சிகளை எஃப்.டி.பி. வழியே நியூஸ் பூலுக்கு அனுப்பி வைத்திருப்பார்.

அந்தக் காட்சிகள், விஷூவல்ஸ் எடிட்டர்கள் மூலமாக எடிட் செய்யப்பட்டு, நேரலை செய்யத் தயாராய் புரொடக்   ஷன் கன்ட்ரோல் அறையை வந்து  சேர்ந்திருக்கும். இதற்குள் முதல்கட்ட தகவலை குறிப்பிட்ட செய்தியாளர் போனோவாக(phone) கைபேசி வழியே நமது நிலையத்திற்கு வழங்கி  இருப்பார். அதைத் தொடர்ந்து அந்தச் செய்தி காட்சியோடு குறிப்பிட்ட ஏரியாவில் இருந்து லைவ்வாக காட்டப்படும். செய்தியின் முக்கியத்துவத்தைப்  பொறுத்து அந்தச்செய்தி, போனோ, பேட்டி, கருத்து, மக்கள் பார்வை, களத்தில் இருந்து என கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கப்படும். எதுவாக  இருந்தாலும் அது செய்தியின் முக்கியத்துவத்தைப் பொருத்தே முடிவாகும்.

தொலைக்காட்சி செய்திகள் வந்த துவக்க காலத்தில், செய்தி வாசிப்பவர்கள், தன் முன்னால் இருக்கும் மானிட்டரில் பிராம்டர் வழியே ஸ்க்ரால்  செய்யப்படும் செய்திகளைப் பார்த்து அதை அப்படியே படித்துக் கொண்டே செல்வார்கள். ஆனால் இன்றையநிலை வேறு. செய்தி வாசிப்பவர்களும் ஒரு  செய்தியாளரைப்போல செய்திகளை அப்டேட் செய்து கொண்டு தயாராக இருந்தால் மட்டுமே நேரலைக்கான செய்தியினை சிறப்பாய் வழங்கி சமாளிக்க  முடியும். செய்திவாசிப்பவர், செய்தியினை உள்வாங்கினால் மட்டுமே சிறப்பான கேள்விகளைக் கேட்டு தகவலைப் பெற முடியும். செய்தி  வாசிப்பவர்களும் செய்தியாளர்களைப் போல் ஸ்டுடியோ விற்குள் இருந்து தகவல்களை ஒருங்கிணைக்கிறார்கள்.

துவக்கத்தில் ஊடகம் என்றால் அது அச்சு ஊடகம் மட்டுமே. பிறகு வானொலி, தொலைக்காட்சி என வடிவம் மாறியது. ஆனால் இப்போது இணையத்  தளங்களும் போட்டி போடத் தொடங்கிவிட்டன. இணையத் தளங்கள், கைபேசி ஆப்களின் வரவால் உடனுக்குடன் செய்திகள் கிடைத்தாலும்,  பெறும்பாலும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளே நிறைய உலவுகிறது. இணையப் பயன்பாடு செய்திக்கான கட்டுப்பாடு வரையறை இல்லாத  நிலையையும் உருவாக்கியுள்ளது. அச்சு மற்றும் காட்சி ஊடகம் என்றிருந்த இருமுனைப் போட்டி நீங்கி, இணையமும் இணைய, மும்முனைப்  போட்டியாக மாறியுள்ளது.

நேரலைச் செய்திகள், செய்தி சார்ந்த விவாதங்கள், ஸ்மார்ட் ரிப்போர்ட்டிங், விரைவுச் செய்தி என மக்கள் ரசனைகளுக்கு ஏற்ப செய்தி வழங்கும்  முறையும் மாறத் துவங்கியுள்ளது. களத்தில் இருந்து நேரலைக் காட்சிகளாக செய்திகளை உடனுக்குடன் பார்ப்பதையே மக்கள் பெரும்பாலும்  விரும்புகிறார்கள். செய்திகளை விரிவாகப் பார்த்த நிலைமாறி, நேரமின்மை காரணமாய் சுருக்கமாக பார்க்க நினைக்கிறார்கள். எல்லாச் செய்திகளையும்  போகிற போக்கில் மொபைலில் பார்த்துக் கொண்டே செல்ல துவங்கிவிட்டார்கள். அன்றைய நாட்டு நடப்பு செய்தி பார்வையாளர்களுக்கு சுருக்கமாக  வேண்டும்.அதற்கேற்ப செய்தி சேனல்களும் எக்ஸ்பிரஸ் செய்தி, ஸ்பீட் நியூஸ், விரைவுச் செய்தி என தரத் தொடங்கிவிட்டார்கள்.

ஒரு ஸ்பீட் நியூஸில் குறைந்தது 60 செய்திகளையாவது சுருக்கமாக தர வேண்டிய நிலை உள்ளது”  என முடித்தார். 100 வருட திரைப்படத்துறை  வரலாற்றில், எடிட்டிங் துறைக்குள் நுழைந்த முதல் பெண் விஷூவல் எடிட்டர், திரைப்படக் கல்லூரியில் கோல்ட் மெடலிஸ்ட், சிறந்த படத்  தொகுப்பாளர் விருது என்கிற பெருமைகளோடு கடந்த 18 ஆண்டுகளாக  சன் செய்திப் பிரிவில் பணியாற்றும் கிருத்திகா காந்தியிடம் பேசியபோது...  “சன் நியூஸ் தொலைக்காட்சியில் பெண் எடிட்டர்கள் இல்லாத காலகட்டத்தில் நுழைந்தேன். 18 ஆண்டுகள் செய்திப் பிரிவில் என் பணியை நிறைவு  செய்திருக்கிறேன். செய்தியில் நேரலையினை சன் தொலைக்காட்சிதான் முதன் முதலாக 2000ல் தொடங்கியது.

அப்போது ஆங்கிலத்திலும் செய்தி நேரலையாக வந்தது. துவக்கத்தில் செய்தி தயாரிப்பு என்பது மிகவும் ஸ்லோ பிராசஸ். அனைத்தும் மேனுவல்  முறையாக இருந்தது . இரண்டு நாள் கடந்து கூட டேப் மூலமாகவே விஷூவல் வரும். அனலாக் முறை பயன்பாட்டில் இருந்தது. பீட்டா, டேப், மினி  டேப் என காட்சிகள் பதிவாகி கொண்டுவரப்பட்டு ரெக்கார்டர் மூலமாக ஏற்றப்படும். இப்போது டிஜிட்டல் மயமானதால் அடுத்த செகண்டே விஷூவல்  மானிட்டரில் கிடைத்து விடுகிறது. நேர விரையம் குறைந்துள்ளது. செய்தி நேரலை மிகவும் சுலபமானதாக மாறியுள்ளது. செய்தியில் நிறைய  வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. யாரும் தப்பு செய்ய முடியாத பயத்தையும் உண்டு பண்ணியுள்ளது” என முடித்தார். இன்றைய செய்தியே, நாளைய  வரலாறு…  டிஜிட்டல் யுகத்தில் உண்மையை உறக்கச் சொல்வோம்…

புரொடக் ஷன் கன்ட்ரோல் ரூம்(PCR)

சேனல்களைப் பொறுத்தவரை ஒரு நேரலை என்பது முழுக்க முழுக்க டெக்னிக்கல் சார்ந்த வேலை. தனித்தனியாக இருக்கும் விஷூவல்ஸ், சி.ஜி.கார்டு,  லைவ் கேமரா, செய்தி வாசிப்பாளர், வெளியில் இருந்து வரும் போனோ, களத்தில் இருந்து தரும் செய்தி என எல்லாவற்றையும் வீடியோ மிக்ஸர்  வழியாக மிக்ஸ் செய்து சேட்டிலைட் வழியே ஆன் ஏரில் சரியான நேரத்திற்கு அனுப்பி, நம் கண்களுக்கும், செவிகளுக்கும் கொண்டு வந்து சேர்க்கும்  மிகப்பெரிய பொறுப்பு.

கவனக் குறைவால் சிறு தவறு நிகழ்ந்தாலும், அது ஆன் ஏர் வழியாக நம் வீட்டுத் தொலைக்காட்சியில் அப்பட்டமாய் வெளிப்படும். இதில் இயங்கும்  டெக்னிக்கல் துறை சார்ந்த புரொட்டியூசர்கள் கட்டுப்பாட்டிலேயே வீடியோ மிக்ஸிங், பிராம்டர் கன்ட்ரோல், ஆடியோ கன்ட்ரோல், ஆங்கர் கன்ட்ரோல்,  கேமரா கன்ட்ரோல் என எல்லாமும் இருக்கும். பி.சி.ஆர். புரொடியூசர்கள் மூலமாகவே வீடியோவும் ஆடியோவும் உருத்தாத வண்ணம், சரியான  முறையில் நம் வீட்டுத் தொலைக்காட்சி வழியே நம்மைச் சேர்கிறது.

சுமித்ரா, செய்தி வாசிப்பாளர்

“ஏழு ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறேன். நமது தோற்றத்தை வெளிப்படுத்துவதில் தரும்  முக்கியத்துவத்தைப்போல செய்தியை வழங்குவதற்கும் தர வேண்டும் என்பதில் உறுதி காட்டுவேன். செய்தி என்பது பலரின் உழைப்பு. எனக்கு  பின்னால் இயங்கும் பலரின் உழைப்பும் இதில் உள்ளது. அவர்களின் உழைப்பை வெளிக்கொண்டு சேர்க்கும் பொறுப்பான இடத்தில் நான் இருக்கிறேன்.  என் கவனக் குறைவால் சிறு பிழை நிகழ்ந்தாலும் மொத்த டீம் ஒர்க்கும் முடிந்தது.

எனவே  செய்தியினைத் தொகுத்து வழங்குவதில் மிகவும் கவனமாக இருப்பேன். நேரலையினை ரிப்போர்ட்டர், புரொடியூசர் ஹேண்டில் செய்த நிலை  மாறி, இப்போது செய்தி வாசிப்பவர்களே செய்தியினை வழங்குபவராகவும் மாறியுள்ளோம். இது வரவேற்கத்தக்க மாற்றம். வந்தோம் மானிட்டரைப்  பார்த்து படிச்சுட்டுப் போனோம் என்றில்லாமல், எங்களுக்குள் இருக்கும் திறமை கூடுதலாக இதில் வெளிப்படுகிறது. தெரியாத செய்திகளை தேடித்  தெரிந்து கொள்கிறோம். தினமும் புதிது புதிதாய் கற்கிறோம்.

நிறைய அப்டேட் செய்துகொள்கிறோம். செய்திகளை கண்காணித்துக் கொண்டே இருக்கிறோம். வாசிப்பாளராக இருப்பதால் எந்த ஒரு செய்தியும் நம்  கவனத்தை விட்டுச் செல்லாது. சேனலுக்குள் வந்ததுமே லைவ் டெஸ்க்கை அணுகி, அன்றைய செய்திகளை தெரிந்து வைத்துக்கொள்வதே முதல்  வேலை. எந்த ரிப்போர்ட்டர் எந்த செய்திக்கு களம் சென்றுள்ளார் என்பது வரை தெரிந்து கொள்வோம். இதில் துறை சார்ந்த அனைவரும் உதவியாகவே  இருப்பார்கள்.”

செம்மலர், செய்தி வாசிப்பாளர்

“செய்தியினை வழங்குவதற்கு தயாராவது தினமும் நீட் தேர்வுக்குத் தயாராவதுபோல என சிரித்துக் கொண்டே பேசத் துவங்கினார். இரண்டு  ஆண்டுகளாய் செய்தி வாசிப்பாளராக இங்கு பணியில் இருக்கிறேன். முன்பு ரிப்போர்ட்டர் கொடுத்து, சப்-எடிட்டர் தயார் செய்ததை, அப்படியே பிராம்டர்  பார்த்து படித்துவிட்டுச் செல்வோம். ஆனால் இன்றைய நிலை வேறு. ஸ்டுடியோவிற்குள் இருக்கும்போது, செய்தியாளர்கள் செய்தி பற்றிய ஒரு லீட்  மட்டுமே எங்களுக்கு கொடுப்பார்கள்.

அதை வைத்து, நாங்களே களத்தில் இருக்கும் செய்தியாளரைத் தொடர்பு கொண்டு, செய்தியின் தன்மையை அவரிடத்தில் பெற்று நேரலையில் வெளிக்  கொண்டு வருவதோடு, சில நேரத்தில் போனோ வழியாக வரும் செய்தி, ஓ.பி. லைவ் என அனைத்தையும் இணைத்து செய்தியை விரிவுப்படுத்தியும்  வழங்குகிறோம். நேரலை செய்யும்போது, நிலையத்திற்குள் ஒரு பரபரப்பே நிகழும். எந்த டென்சனையும் நாங்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல்  நேரத்திற்குள் சரியாக வழங்க வேண்டும். நேரலையில் ஒரு சில தவறுகள் நிகழும்போது, பி.சி.ஆரில் இருக்கும் செய்தியாளர்கள் டாக் பேக் வழியாக  நம்மை சரி செய்து விடுவார்கள்.”

மகேஸ்வரி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Related Stories: