வாழ்வென்பது பெருங்கனவு!

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்: சமூக சேவகி சுனிதா

“அன்னச்சத்திரம் ஆயிரம் வைத்தல்... ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்னயாவினும் புண்ணியம் கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்”  என்றான் மகாகவி பாரதி. இங்கே நாம் சொல்வது எழுத்தறிவிக்கும் ஆசிரியரை அல்ல. அதையும் தாண்டி தெருவோரங்களில், படிக்க வசதியற்று  வறுமை நிலையில் இருக்கும் குழந்தைகளை அரவணைத்து, அவர்கள் தங்கவும் இடம் கொடுத்து, அவர்களது கல்விக் கண் திறந்து, அவர்களுக்கான  வாழ்வை அமைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் சமூக சேவகி சுனிதா அமலைப் பற்றியது. ‘பாதை’ என ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி  அதில் பல நூறு குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவரிடம் உங்கள் வாழ்வின் பெருங்கனவு என்ன? நீங்கள் கண்ட கனவும், அதில்  நிஜமாகியவையும் என்னவெனக் கேட்டபோது…

‘‘அன்றும் இன்றும் என்றும் எல்லா உயிரினங்களிலும் மனித உயிரினமே தான் வாழ்வதற்கு தேவையானவற்றை பெறுவதற்கு போராட வேண்டிய  ஒன்றாய் இருக்கிறது. காரணம் மற்ற உயிரினங்கள் தாம் வாழும் தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கும், மாற்றங்களுக்கும் தன் உடலமைப்புகளை  இயற்கையாகவே தகவமைத்துக்கொள்கிறது.  அன்றாட உணவோடு தன் தேவையை நிறுத்திக்கொள்கிறது. ஆனால் மனிதனோ அன்றாட தேவையைக்  கடந்து, நாளைய தேவையுடன், அடுத்த சந்ததியினருக்கான தேவைகளையும் சேர்த்து பூர்த்தி செய்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறான்.

மனித இனம் மட்டுமே பல்வேறு பாகுபாடு மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்குள் உழல்கின்ற அல்லது வாழுகின்ற இனமாக இருக்கிறது. இனம், மொழி, நாடு,  பாலினம் போன்ற பாகுபாடுகளுக்குள் சிக்கி, மற்றவர்களைப் பின்னுக்குத்தள்ளி தான் முன்னேறுவதையே வெற்றியாகக் கொண்டாடி வருகிறது. இச்சமூகத்தில் ஆண்-பெண் பாகுபாடு என்பது எல்லா பாகுபாடுகளையும்  விட முன்னோடியாகப் பல ஆயிரமாண்டுகள் கடந்து இருந்து வருகிறது.  சமமற்று ஏற்றத்தாழ்வுகளுடன், அனைத்துவிதமான தாக்குதல்களுக்கும், வன்முறைகளுக்கும், அநீதிகளுக்கும் ஆளாக்கப்படுவது பெண்களே.

பிறப்பிலிருந்து இறப்புவரை மதம், சமயச் சடங்குகள், கலாச்சாரம், பண்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு என  அனைத்து சமூக நிறுவனங்களிலிருந்தும் புறந்தள்ளப்படுவதும், இரண்டாந்தரமாகப் பார்க்கப்படுவதும் பெண்களே. ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பதை  சமூகத்தில் இயங்கிவரும் அனைத்து சமூக நிறுவனங்களுமே நிர்ணயிக்கக்கூடியதாக உள்ளது. எந்த சமூக நிறுவன காரணிகளும் பெண்களின்  வாழ்க்கையை, வளர்ச்சியை, கனவுகளை அவ்வளவு எளிதில் பெற்றுத்தருவதாக இல்லை.

பெண்கள் தங்களது வளர்ச்சியைப் பெறுவதற்கு தொடர்ந்து இங்கு போராட வேண்டியுள்ளது. போராடும் அத்தனை பெண்களுக்கும் அவர்கள் விரும்புகிற  வாழ்க்கையை அமைத்துக் கொள்வது ஒரு பெரும் கனவாகவே இங்கு இருக்கிறது. வெறும் கனவுகளை மட்டும் சொந்தமாக்கிக் கொண்டு, நிஜத்தில்  சமூகத்தின் கட்டமைப்புகளுக்குள் சிக்கிக்கொண்டு அவர்களது கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன என்பதே இங்கு நிதர்சனம். இச்சமூகத்தின்  அடிமைத்தளைகளை, ஆணாதிக்க வடிவங்களை உடைத்தெறிந்து சுயசிந்தனையோடும் சுயமுடிவுடனும் இயங்க நினைக்கும் பெண்களின் வாழ்க்கை  சவால்கள் நிறைந்தது மட்டுமல்ல பெருங்கனவும்கூட.

இந்நிலையில் குறைந்தபட்ச கல்வியும், மிகக் குறைந்த வாய்ப்புகளும் மட்டுமே இருக்கின்ற பெண்களுக்கு, அவர்கள் வாழ்க்கை சவாலாய்  இருக்கும்பட்சத்தில், சமூக விளிம்புக்கும் வெளியில் தள்ளப்படும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை மேலும் கேள்விகுறியே? ஆதரவற்றவர்களாய்  தந்தையை இழந்தோ, தாயை இழந்தோ அல்லது தாய், தந்தை இருவரையும் இழந்தோ நிற்கதியாய் நிற்கும் குழந்தைகள் சமூகத்தால்  புறந்தள்ளப்படுகின்றனர்.

இவர்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்கிறவர்கள் யார் என்ற கேள்வி எழும்பட்சத்தில், இவர்களின் அடுத்தகட்டத் தேவைகளான கல்வி,  மருத்துவம், உரிமை, பாதுகாப்பு, உடல் மற்றும் மனவளர்ச்சி போன்றவைகளை பூர்த்தி செய்ய எவரும் அவ்வளவு எளிதாய் முன்வருவதில்லை.  இவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுவதால் சமூக வளர்ச்சி பின்னடைவைச் சந்திக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டுப்  பெண்களின் உடல், மனம், கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு ஆகியவைகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மையமாகக் கொண்டுள்ளது.

பெண் கல்வி கற்கும்போது சமூக சூழலுக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வதோடு, சமூகத்தின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும் துணைபுரியும்.  கல்வி மற்றும் சமூக புரிதலோடு தனக்கும் தான் சார்ந்த குடும்பம், உறவு, ஊர், நாடு ஆகியவைகளில் எழும் பிரச்சினைகளைக் கையாளும் திறனை  வளர்த்துக்கொள்ளவும் முடியும். இது போன்ற காரணங்களாலேயே பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அதிலும் குறிப்பாக சமூக விளிம்புக்கு  வெளியே புறந்தள்ளப்பட்ட பெண் குழந்தைகளுக்கு கல்வியோடு சேர்த்து சமூக புரிதலை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் 2002ம் ஆண்டு ‘பாதை’  ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லம் தொடங்கப்பட்டது.

இதுவரை சுமார் 1000 குழந்தைகளின் உளவியல் மற்றும் சமூக பிரச்சினைகளில் உள்ளீடு செய்து, அப்பிரச்சினைகளில் இருந்து வெளியேற அவர்களை  ஆற்றுப்படுத்துதல், ஊக்கப்படுத்துதல், சமூக நிகழ்வுகளில் அவர்களைப் பங்கெடுக்கச்செய்தல், கலைநிகழ்ச்சிகளைக் கற்றுக்கொடுத்தல் ஆகியவை  யுக்திகளாக கையாளப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 40 குழந்தைகள் கல்லூரி படிப்பை முடித்து பாதையிலிருந்து வெளியேறி சமூகத்தோடும்  வெளி உலகத்தோடும் தங்களை இணைத்துக்கொள்ள உறுதுணையாக இருந்துள்ளது.

தற்போது 30 ஆதரவற்ற, கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, சிதைந்த குடும்பங்களிலிருந்து வந்த குழந்தைகள் தங்கி கல்வியோடு சமூக அறிவையும் கற்று  வருகின்றனர். சாதாரண பெண்களுக்கே அவர்களது வாழ்க்கை ஒரு பெருங்கனவாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற குழந்தைகளின் கனவுகளை  நனவாக்க, நினைவாக்க, நிஜமாக்க இவர்களோடு நாமும் பயணிப்போம்…’’ என்றார்.

-தோ.திருத்துவராஜ்

Related Stories: