திரைவானில் ஒரு குட்டி நட்சத்திரம் பேபி மானஸ்வி

நன்றி குங்குமம் தோழி

“ஹாய்!!  நான் ஆல்ஃபா ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்” என பேசிக்கொண்டே வந்த துருதுரு குட்டி பாப்பா மானஸ்வி ‘இமைக்கா  நொடிகள்’ படத்தில் நயன்தாராவின் மகளாக மிரட்டி உருட்டி துடுக்கான நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார். மானஸ்வியோடு பேசத்  தொடங்கியபோது… உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொண்டது.

“பாப்பா அப்பா பேசுறேன்டா... என் தங்கமே... அப்பா மாதிரி இருக்கக் கூடாது எப்பவுமே அம்மா மாதிரிதான் இருக்கனும்... அம்மா அழுததை  இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை… நீங்களும் அப்படியே இருக்கனும்…ஒரு சின்ன லீவு கிடச்சாக்கூட அப்பா இந்தியாவுக்கு ஓடி வந்துருவேன்” என  விஜய் சேதுபதியின் டயலாக்கை நம்மிடம் பேசிக் காட்டியவரிடம் இடைமறித்து ‘இப்போது எந்த படத்தில் நடிக்கிறீங்க’ என்ற நம் கேள்விக்கு…

‘இருட்டு’ படத்தில் சுந்தர் சி அப்பா கூட நடிக்கிறேன்’ என்கிறார்.

“ ‘சதுரங்க வேட்டை -2’ படத்தில் அரவிந்தசாமி அப்பா கூட நடிக்கிறேன். ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் விக்ராந்த் அப்பா மகளா நடிக்கிறேன்.  ‘பரமபத விளையாட்டு’ படத்தில் த்ரிஷா அம்மாவோட பொண்ணா நடிக்கிறேன். ‘கும்கி-2’ல சின்ன வயசு ஹீரோயின், அப்புறம் ‘கண்மணி’,  ‘நயம்’ - இதெல்லாத்துலயும் நடிக்கிறேன்”  என ஒரு டஜன் படங்களை அடுக்கிக்கொண்டே சென்றவரிடம்…எல்லோரோடும் நடித்த அனுபவத்தைக்  கேட்டபோது…

“‘இமைக்கா நொடிகள்’ படத்தில் டைரக்டர் ப்ரோ எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பாரு, நான் அதை அப்படியே நடிச்சுருவேன். அப்புறம் எல்லோரும்  எனக்கு க்ளாப் பண்ணுவாங்க.. சாக்லேட் தருவாங்க. சூட்டிங்ல நடிக்கிறது ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு. நயன்தாரா அம்மா ரொம்ப அழகா கியூட்டா  இருப்பாங்க. எனக்கு டிராயிங் கத்துக்கொடுத்தாங்க. என் கூட விளையாடுவாங்க. அன்பாப் பேசுவாங்க. நீ ரொம்ப நல்லா நடிக்கிற, சூப்பரா நடிக்கிறேன்னு  சொன்னாங்க.. நயன்தாரா அம்மா என்னை வாடிபோடின்னுதான் செல்லம்மா கூப்புடுவாங்க. என் நடிப்புக்கு க்ளாப் பண்ணுவாங்க.

விஜய்சேதுபதி அப்பா ‘ நீ நல்லா நடிச்சுருக்க பாப்பா’ன்னு சொன்னாரு. நயன்தாரா அம்மா  எனக்கு டூ லிப்ஸ்டிக் வாங்கித் தந்தாங்க. ஒன்னு பிங்க்  இன்னொன்னு ரெட் கலர். வி.டி. கணேஷ் அங்கிள் எனக்கு ஸ்கூல் பேக் வாங்கித் தந்தாரு. நான் என்ன கேட்டாலும் வி.டி. கணேஷ் அங்கிள் எனக்கு  உடனே வாங்கித் தருவாரு. சாக்ஸி அம்மா அவங்க சாப்பிடக் கொண்டுவந்ததை எல்லாம் எனக்கும் ஷேர் பண்ணுவாங்க. த்ரிஷா அம்மா எனக்கு கேக்  குடுத்தாங்க” என்று பேசிக்கொண்டே செல்பவரை இடையில் நிறுத்தி, “ஸ்கூலுக்குப் போறது பிடிக்குதா நடிக்கிறது பிடிக்குதா?” என்று கேட்ட  கேள்விக்கு “ரெண்டுமே பிடிச்சிருக்கு.

சூட்டிங் போகும்போது புக்கெல்லாம் எடுத்துட்டுப்போயி அங்கேயே படிப்பேன். அப்பாதான் சூட்டிங் கூட்டிட்டுப் போவாரு. நான் நடிச்ச படத்தைப்  பார்த்துட்டு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ‘மானஸ்வி, நீ ரொம்ப நல்லா நடிச்சுருக்க, உன்னை படத்துல பார்த்தேன்’னு சொன்னாங்க. ஃப்ரெண்ட்ஸ்ஸோட  பேரண்ட்ஸ் எல்லாம் சூப்பரா நடிச்சுருந்தேன்னு சொன்னாங்க” என கொஞ்சல் மொழியில் பேசிக் காட்டுகிறார். “என்னோட பெட் பேரு லக்கி. அதுதான்  என் தங்கச்சி பாப்பா. அது கூடதான் நான் எப்பவும் விளையாடுவேன்” என விடாமல் குரைத்துக் கொண்டே இருக்கும் லக்கியை அறிமுகப்படுத்துகிறார்.

“அம்மா டப்பிங் ஆர்டிஸ்டா இருக்காங்க. அம்மாவும் அப்பாவும் வீட்ல இல்லாம சூட்டிங் போயிட்டா பாட்டி என்னைப் பார்த்துப்பாங்க” என்றவர்,   “ஏய்.. ஓங்குடா..ஓங்குடா..ஓங்குவானாமே! சொட்டை சொருகீடுவேன்.. என்ன நொய் நொய்ன்னு அடிச்சுக்கிட்டே இருக்க, மூணு லேடீஸ் தனியா  இருக்கும்போது… நீ எப்படி எல்லாம் லேடீஸ டார்ச்சர் பண்றன்னு வீடியோ எடுத்து யு டியூப்ல போடுறேன் பாரு” என திடீரென ‘இமைக்கா நொடிகள்’  படத்தில் பிரபலமான வசனத்தைப் பேசிக்காட்டினார் அந்தக் குட்டி தேவதை. மானஸ்வியைத் தொடர்ந்து அவரின் அப்பாவும் நகைச்சுவை நடிகருமான  கொட்டாச்சியிடம் பேசியபோது… “எங்க வம்சத்தில் எல்லோருக்கும் பொம்பளைப் பிள்ளை.

ஆம்பளைப் பிள்ளை பிறந்தா கொட்டாச்சி அம்மன் பேரை வைக்றேன்னு, எனக்கு கொட்டாச்சின்னு பேரு வச்சுட்டாங்க. பொள்ளாச்சி என் ஊரு.  என்னோட அக்கா பொண்ணுதான் என் மனைவி அஞ்சலி. அவுங்களும் டப்பிங் ஆர்டிஸ்ட். படங்களில் டிராக் டப்பிங் பேசுறாங்க.  முதலில் சின்னச்  சின்ன விளம்பரங்கள், குறும்படத்தில் தொடங்கி இப்ப அவுங்களும் நிறைய பிஸியான டப்பிங் ஆர்டிஸ்டா இருக்காங்க. தொடர்ந்து நிறைய படம் இப்ப  கமிட்டாகி இருக்காங்க. ‘கும்கி 2’வில் நானும் ஒரு கேரக்டர் செய்யுறேன்.

என் பொண்ணோட நானும் ‘கும்கி 2’ சூட்டிங் போறதால டைரக்டர் எனக்காகவும் ஒரு கேரக்டரை கொடுத்து நடிக்க வச்சுருக்காரு. படம் வந்தால் என்  நடிப்பும் பேசப்படும் என்றவரிடம் நடிப்புத் துறைக்குள் வந்தது பற்றி கேட்டபோது… “பொள்ளாச்சியில் தினமும் குறைந்தது 3 சூட்டிங்காவது நடக்கும்.  தொடர்ந்து அதையே பார்ப்பேன். என் வீட்டில் 3 அக்காக்கள். அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். வீட்டில் வறுமை. நான் வேலைக்குப் போக வேண்டிய  கட்டாயம். ஆனால் என் கனவு சினிமா. வேற வழியில்லாமல் திருப்பூர்ல வேலைக்குப் போனேன். கொஞ்ச நாளில் என் அம்மா இறந்துட்டாங்க.

எங்க அம்மாவ சாமியாக் கும்பிட என்கிட்ட அம்மாவோட ஒரு போட்டோகூட இல்லை. ரொம்பவே கஷ்டப்பட்டேன். கடைசி வரை அம்மா போட்டோ  என்னிடம் இல்லாமலே இருந்தது. வீட்டில் எல்லோரும் ஜெராக்ஸ் மாதிரி இருப்போம். அதனால் மற்றவர்கள் முகத்தைப் பார்த்து அம்மாவ  நினைச்சுப்பேன். தொடர்ந்து சினிமா கம்பெனியில் ஏறி இறங்கி நடிக்க சான்ஸ் கேட்டேன். சூட்டிங்கில் சின்னச் சின்ன வேலை செஞ்ச என்னை,  இயக்குநர் எழில் சார் ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்தில் கேரக்டர் கொடுத்து நடிக்க வச்சார். அந்தப் படம் 2000ல் வந்தது.

விவேக் சார் கூட அதில் நடிச்சேன். தொடர்ந்து விவேக் சாருடன் இணைந்து ‘பத்ரி’, ‘பகவதி’, ‘வசீகரா’ என நிறைய படங்களில் நடித்தேன்.  எனக்கு அம்மா இல்லாத குறைக்கு  அம்மாதான் என் பொண்ணாப் பிறந்திருக்காங்கன்னு நினச்சுப்பேன். என் பொண்ணு நிறைய பேசுவா? ஒரு தடவை  சொன்னாலே டக்குன்னு புடிச்சுக்குவாள். படிப்பிலும் படு சுட்டியா இருக்கா. அவளுக்கு  ஸ்கூலிலும் நல்ல பேரு. அவளின் நடிப்புக்கு நிறையவே  ஸ்கூல்ல சப்போர்ட் பண்றாங்க. சேட்டை செய்யும்போது, அறிவு இல்லையா உனக்கு என ஒரு முறை அவளைக் கேட்டேன்.

‘எப்படிப்பா உங்க பிள்ளைய அறிவு இல்லைன்னு சொல்றீங்க. நீங்கதான நான் நல்லாப் படிக்கிறேன், நல்லா பேசுறேன், நல்லா நடிக்கிறேன்னு  சொல்றீங்க, அறிவு இல்லாமல் எப்படி செய்ய முடியும். எனக்கு அறிவு இருக்கா இல்லையா?’ எனத் திருப்பி என்னைக் கேட்பாள். ‘ரொம்ப  நடிக்காதடி’ எனச் சொன்னாள். நீங்கதான என்ன நடிக்க வச்சீங்க. நடிக்கவா வேண்டாமா? எனக் கேட்பாள். ‘‘கும்கி-2’க்காக 15 நாள் சூட்டிங்  தாய்லாந்து தாண்டி நடந்தது. பாஸ்போர்ட் எடுத்த 3வது நாளே சூட்டிங் போனாள்.

எப்பவுமே வீட்டில் துருதுருன்னு துடுக்கா பேசுவாள். புது மொபைல் வாங்கியதும், அதில் கேமராவை செக் பண்றதுக்காக டயலாக் சொல்லிக் கொடுத்து,  அவளை நடிக்க வச்சு வீடியோ எடுத்தேன். நல்லா நடித்திருந்தாள். முகநூலில் அதை என் பக்கத்தில் போட்டேன். அதைப் பார்த்து ‘இமைக்கா  நொடிகள்’ மேனேஜர் கணேஷ் சார் என்னை அழைத்து, ‘கொட்டாச்சி அந்தப் பொண்ணு யாரு’ எனக் கட்டார். ‘என் மகள்தான் சார்’ என்றேன்.  ‘அந்த பாப்பாவக் கூட்டிட்டு அலுவலகம் வாங்க’ன்னு சொன்னாரு. எதுக்கு கூப்புடுறாருன்னு தெரியாமலே என் மகளைக் கூட்டிட்டுப் போனேன்.

யாரா இருந்தாலும் எந்த இடமாக இருந்தாலும் டக்குன்னு என் பொண்ணு பழகிடுவா. எல்லோருக்கிட்டையும் ரொம்ப ஜாலியா பேச ஆரம்பிச்சுட்டா.  அவள் ஜாலியாகப் பழகுறதப் பார்த்து எல்லோருக்கும் அவளை ரொம்பவே பிடிச்சிருச்சு. டைரக்டர் அஜய் ஞானமுத்து சார், இயக்குநர் முருகதாஸ் சார்  அசிடெண்டா இருந்தவர். ‘டிமாண்டி காலனி’ படம் அவரது முதல் படம். ‘இமைக்கா நொடிகள்’ அவரோட அடுத்த படம். இந்த சீனை இயக்குநர்  கொடுத்து மானஸ்விய பேசச் சொன்னாரு.

அப்பதான் இந்த டயலாக்க  “ஓங்குடா ஓங்கு சொட்டை சொருகீடுவேன்” என இவ ஃபேஸ் ரியாக்ஷன் கொடுத்துப் பேசுறதப் பார்த்து, செட்டில் இருந்த  எல்லோரும் என்ன இந்தப் பாப்பா இப்படி பேசுறான்னு அசந்து போயிட்டாங்க. படத்தில் இவள் நடிப்பைப் பார்த்து பெத்தவுங்க எங்களுக்கு ஒன்னுமே  புரியலை. நெஞ்சு டக்குன்னு எனக்கு அடைச்சிருச்சு. டைரக்டர் யாருக்கும் வெளியில் சொல்லக்கூடாதுன்னு வேற சொல்லிட்டாரு. என் மகிழ்ச்சிய  யாருக்கிட்டையும் சொல்லவும் முடியல. டைரக்டர் ஞானமுத்து சார் இறங்கி வந்து ஒரு குழந்தைக்கிட்ட எப்படி பேசனுமோ அவ்வளவு அழகா பேசி என்  மகளை நடிக்க வச்சாரு.

அவள் நடிச்சு முடிச்சதும் சுற்றி இருக்கும் எல்லோரும் கிளாப் பண்ணுவாங்க. பண்ணலைன்னா சுத்தி அப்படியே ஒரு ரவுண்டு பார்ப்பாள். அவள்  பார்த்ததும் எல்லோரும் கிளாப் பண்ணத் தொடங்குவாங்க.. ஆ…அது…அப்படீன்னு சொல்வாள். என் மனைவியோட பேரு அஞ்சலி,  படத்தில் நயன்தாரா  மேடம் பேரும் அஞ்சலி. அதுனால நயன்தாரா மேடத்தையும் அம்மான்னு கூப்புட ஆரம்பிச்சுட்டாள். ‘நயம்’, ‘கண்மணி’ இந்த ரெண்டு படங்களும்  மானஸ்விக்காகவே அவளை நம்பி எடுத்துக்கிட்டு இருக்காங்க.

மானஸ்வி நடிப்பைப் பார்த்து வேற்று மொழி படங்களில் நடிக்கச் சொல்லி கேக்குறாங்க.. முதலில் தமிழில் நல்லா வளரட்டும் பார்க்கலாம். ‘சுட்டுப்  பிடிக்க  உத்தரவு’ படத்தில் விக்ராந்த் மகளாக நடிக்கிறாள். அதில் மிஷ்கின் சாரும் சுசீந்திரனும் நடிக்கிறாங்க. ‘இருட்டு’படத்தில் சுந்தர் சி சாரை  வைத்து துரை சார்  ஹாரர் மூவியினை  எடுக்குறார். அவரோட மகளா முக்கியமான ரோல் மானஸ்வி பண்ணுகிறாள்” என முடித்தார்.         

மகேஸ்வரி

Related Stories: