பத்து நிமிடங்களும் கொஞ்சம் அக்கறையும்

நன்றி குங்குமம் தோழி

சென்னையில் மக்களோடு வாகனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பெருகி வருகின்றன. காலை விடியல் தொடங்கி நள்ளிரவுவரை  அனைவரும் ஏதோ பரபரப்புடன் பயணிக்கிறோம். இதில் ஒரு விபத்து நடந்து ஒரு மனிதர் உயிருக்கு போராடும் போது மிகச் சாதாரணமாக அவ்விடத்தை விட்டு பலரும் கடந்து செல்வதைப் பார்க்கிறோம். பலரும் அனுதாபம் கொள்கிறார்களே தவிர உதவ முன்வருவதில்லை.  இதுதான் மிகவும் வேதனைக்குரியது. இப்படி விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கான முதலுதவி சிகிச்சையை எப்படி செய்வது  என்று பயிற்சியளித்து வருகிறார் மென்பொருள் பொறியாளரும், அலர்ட் அமைப்பின் நிறுவனருமான கலா பாலசுந்தரம்.

இதுவரை சென்னையில் மட்டும் 70 ஆயிரம் பேருக்கு இலவசப் பயிற்சி அளித்துள்ளார். அவரிடம் பேசுகையில், “மரணத்தின் வாசலில்  தவிக்கும் உயிரைக் காப்பாற்ற 10 நிமிடங்களும் கொஞ்சம் அக்கறையும் இருந்தால் போதும். இதன் மூலம் நிறைய உயிர்களை காப்பாற்ற  முடியும்.  இதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் ‘அலர்ட்’ அமைப்பு. நான் ஓ.எம்.ஆர் என்றழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலை  வழியாகத்தான் தினமும் வேலைக்குச் செல்வேன். அந்த சாலையில் எத்தனையோ விபத்துகளை பார்த்திருக்கிறேன். பெரும்பாலான  உயிர்கள் போதுமான உதவிகள் கிடைக்காமலே மரணத்தைச் சந்திக்கின்றன. ஒவ்வொரு விபத்திற்குப்பின் நடக்கும் உயிரிழப்புகளுக்கும்  காரணம் எப்படி விரைவாக செயல்பட வேண்டும், எப்படி முதலுதவி செய்யவேண்டும், யாரை முதலில் அழைக்க வேண்டும் என்பதை  பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான். அதிகமான உயிரிழப்புகள் கவனக்குறைவாலும், போதுமான முதலுதவி கிடைக்காமலுமே நடக்கிறது.

இந்நிலை மாறவேண்டும் என்ற நோக்கில் உருவானதுதான் எங்கள் முதலுதவி அமைப்பு. முதலுதவிப் பயிற்சியை நான் முதலில்  கற்றுக்கொண்டேன். மிக நுட்பமான சில விஷயங்களை செய்தால் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதையும் புரிந்துகொண்டேன்.  இதனை பலருக்கும் சொல்வதால் உயிரிழப்புகளை குறைக்க முடியும். இதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் எங்கள் அமைப்பு’’  என   நெகிழ்ச்சியோடு கூறும் அவர் கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீடு, தொழிற்சாலை என ஒவ்வோர்  இடத்திலும்  முதலுதவி குறித்த விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு  டாக்டர் ஏ.பி.ஜே.  அப்துல்கலாமைச் சந்தித்தேன். அப்போது அவர் “ஒவ்வோர் வீட்டிலும் ஒருவராவது முதலுதவிப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்” என்ற  இலக்கை தந்தார். அந்த இலக்குத்தான் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. என்னுடன் சேர்த்து பல  தன்னார்வலர்கள் அவர்களுடைய வேலை நேரம் போக மீதி நேரத்தில் இச்சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களுக்காக சென்னை நீலாங்கரையில் முதலுதவிக்கான பயிற்சிக் கூடத்தை தொடங்கினேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை முதலுதவி விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கி வருகிறோம். பல பள்ளிகள் மற்றும்  கல்லூரிகளுக்குச் சென்று முதலுதவியை குறித்த விழிப்புணர்வு பயிற்சியை வழங்கி வருகிறோம்.சென்னை மட்டுமல்லாது பல  மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும், பல்வேறு கிராமங்களுக்கும் சென்று முதலுதவி குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதுவரையில் எழுபதாயிரத்திற்கும் மேலானோருக்கு இப்பயிற்சியை அளித்துள்ளோம்.

பொதுவாக விபத்துகள் என்பது சாலையில் மட்டுமல்ல வீடுகளிலும் நிகழ்கின்றன.  எடுத்துக்காட்டாக, எலும்பு முறிவு, ரத்தப்போக்கு,  தீக்காயம் ஆகியவை பெரும்பாலும் வீடுகளில்தான் ஏற்படுகின்றன. எனவே முக்கியமாக பெண்களுக்கு முதலுதவி முறைகள் தெரிய  வேண்டியது அவசியம். இதைக் கருத்தில் கொண்டே பல மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்  ஆகியவற்றிற்குச் சென்று இப்பயிற்சியைத் தந்து வருகிறோம். பல இடங்களில் பெண்கள் ஆர்வமாக இப்பயிற்சியில் கலந்துகொள்கின்றனர்.

அவர்களுடைய சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர். ஓர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற  எண்ணம் நம் அனைவரிடமும் இருக்கிறது. இந்த எண்ணத்தை அதிகரிக்கவும், வலுவாக்கவுமே நாங்கள் பணியாற்றுகிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் உலக முதலுதவி தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பல இடங்களில் முதலுதவியின்  முக்கியத்துவம் குறித்து வீதி நாடகம், வில்லுப்பாட்டு, சைக்கிள் பயணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கடந்த இரு  வருடங்களாக முதலுதவி செய்து பல உயிர்களை காப்பாற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் மனிதத்துவத்தை பாராட்டி  அலர்ட் பீயிங் (ALERT Being Award) விருதுகளை வழங்கி வருகிறோம்.

இவ்விருது சமூகத்திற்காக, சுகாதாரத்திற்காக, உயிரிழப்புகளை  குறைப்பதற்காக சேவை செய்யும் மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் மனிதத்துவத்தை பாராட்டி வழங்கப்படுகிறது.முதலுதவியின்  தேவையை குறித்தும், அனைவரும் முதலுதவியைப் பற்றித் தெரிந்து இருக்கவேண்டும் என்பதையும் உணர்த்துவதற்காக ஒவ்வோர்  ஆண்டும் அலர்ட்டத்தான் (ALERTATHON) என்ற விழிப்புணர்வு மாரத்தானை “உயிர் காக்க ஓர் ஓட்டம்” என்ற பெயரில் நடத்தி  வருகிறோம். இந்த மாரத்தானில் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், பணி செல்லும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து  கொள்கிறார்கள்.

அதேபோல், முதலுதவிக்காக அவசர சேவை செய்யும் தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை அலர்ட் வாய்ஸ் எனும் பெயரில்  உருவாக்கியுள்ளோம். இந்தியாவில் ஒரு முன்னோடி முயற்சி இது. ‘அலர்ட் வாய்ஸ்’ என்ற கைபேசிச் செயலியையும்  அறிமுகப்படுத்தியுள்ளோம். ‘அலர்ட் வாய்ஸ்’  என்ற இந்த அவசரச்சேவை குழுவில் உயிர்களைக் காப்பாற்ற உறுதியளித்த  தன்னார்வலர்களே உள்ளனர். இவர்கள் ஏதேனும் விபத்தில் உள்ளவர்களை கண்டால் உடனடியாக களத்தில் இறங்கி முதலுதவி  செய்வார்கள்.

முதலுதவியை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் சென்னை நீலாங்கரையில் உள்ள எங்கள் முதலுதவி பயிற்சிக்கூடத்திற்கு எப்போது  வேண்டுமானாலும் வரலாம். என்னுடைய விருப்பம் ஒன்றுதான் அனைவரும் முதலுதவிப் பயிற்சியை பெற்றிருக்கவேண்டும் என்பதுதான்.    நீங்கள் பயிலும் கல்லூரியிலோ, பணிபுரியும் அலுவலகத்திலோ, நீங்கள் சேர்ந்துள்ள அமைப்பிலோ உங்களால் குறைந்தபட்சம் 30  நபர்களையாவது ஒன்று சேர்க்க முடிந்தால் உங்கள் இடத்திற்கே வந்து இப்பயிற்சியை அளிக்கத் தயாராக இருக்கிறோம். எங்கள் நோக்கம்  அனைவரும் முதலுதவியை பற்றிய விழிப்புணர்வு பெற்றிருக்கவேண்டும் என்பதே” என்கிறார் கலா பாலசுந்தரம் .

                           

-ஜெனிபா

Related Stories: